February 16, 2014

கிணற்றுப் பேய்

"காஞ்சனை" என்ற பேயின் மீது உள்ள பயம் பற்றிய புதுமைப்பித்தனின் ஒரு சிறு கதை வாசித்தேன். நானும் என் சிறுவயதில் பேயை பற்றிய நிறைய கதைகள் கேள்விப்பட்டு இருக்கிறேன். பின் நாளில் அது உண்மை என்று கூட நம்பி இருக்கிறேன். சரியான வயது ஞாபகம் இல்லை, நான் பள்ளியில் படிக்கும்போது மாப்பிள்ளை சுப்பையா பிள்ளை தெருவில் ஒரு தென்னந்தோப்பு இருந்தது. தென்னந்தோப்பிற்க்கு வெளியே ஆங்காங்கே ஒட்டையான செங்கற்களால்  ஆன ஒரு தடுப்பு சுவர் இருந்தது. அந்த தென்னந்தோப்பில் உள்ள கிணற்றில் தான் ஏதோ ஒரு பெண் தற்கொலை செய்து கொண்டாள் என்று கேள்விப்பட்டு அந்த நாளே தடுப்பு சுவரின் ஓட்டை வழியாக தூரத்தில் தெரியும் கிணற்றை பார்த்தேன்.
அது நடந்து சில நாட்களில் யாரோ ஒரு பெண்ணிற்கு பேய் பிடித்து விட்டது என்று அதே தெருவில் கோடாங்கி அடிப்பதாகவும் கேள்விப்பட்டேன். அன்று முதல் அந்த தெருவில் பகலில் கூட தனியாக பயனிக்க மிகுந்த அச்சமாக இருந்தது.
ஒருமுறை நெல்மூட்டை எடுக்க அந்த தெருவிற்கு போயே ஆக வேண்டும் என்ற சூழ்நிலை, தள்ளுவண்டியை தள்ளிய படி நுழைந்தேன்.
ஏதோவொரு துயரத்தில் தூய்மை உள்ளம் படைத்தவள் வாழ்க்கையில் துவண்டு போய் வாழ வழியில்லாமல் தன் சாவின் வழியே தேடிப்போன அந்த கினற்றின் முகப்பு வாயிலை முதல் முறை பார்த்தேன். ஒரு நொடி கூட இல்லை  கண்களை இறுக மூடிக்கொண்டேன் ஏதோ ஒரு பயத்தில்.
இரவுகள் வரும் இரவில் தூக்கமும் வரும். எனக்கு மட்டும் என் வீட்டில் உறங்கும் போது அந்த கினற்றின் நினைவு வரும். எத்தனையோ இரவில் தூங்காமல் தவித்து இருக்கிறேன். அந்த பெண்ணின் ஜல், ஜல் என்று கொலுசு ஒலி. நாய் ஊலை இடும் சத்தம். காதுகளை இறுக மூடிக் கொண்டு அந்த தொய்விலே உறங்கி எழுந்து இருக்கிறேன். இதுவரை என் வீட்டில் யாரிடமும் இது பற்றி நான் பேசியது இல்லை.
யார் என்று தெரியாத ஒரு பெண் அவள். அவளுக்கு என்ன துயரம் என்றும் எனக்கு தெரியாது. ஆனால் எத்தனையோ இரவில் என்னை தூங்கவிடாமல் என் வீட்டை தேடி வந்து இருக்கிறாள்.
இப்பொழுது நினைத்தாலும் பயமாக இருக்கிறது. "ஊஊஊ" என்ற நாயின் ஊலையிடும் சத்தமும், ஜில் ஜில் என்ற கொலுசின் சத்தமும் என் மனதில் நினைக்கும் போது.
-Sun Muga-
16-02-2014 01.25 AM

No comments:

Post a Comment