January 27, 2014

அப்பத்தா

அன்புள்ள அப்பாவுக்கு,

உங்களின் இளைய மகனின் ஒரு கடிதம். எத்தனையோ இரவுகளில் எழுத முற்பட்டு இப்பொழுது நான் எழுதி முடித்த ஒரு சில வார்த்தைகள்.

உலக உருண்டையை உற்றுப் பார்த்தால் சுழற்றி அடிக்கும் ஆழிப்பேரலை கூட நம் கண்களுக்கு தெரிவதில்லை. அப்படிப் பட்ட இந்த உலக இருப்பிடத்தில் என் கண்களில் இருந்து அகல மறுக்கிறது அந்த சின்னஞ்சிறு வீடு.

சாணம் மெழுகிய மண் தரை. வீட்டிற்கு வெளியே இரண்டு திண்ணைகள். மழை பொழிந்தால் வீட்டை நனைக்கும் சரிந்த ஓடுகள். பரன் மேலே அடுக்கி வைத்த விறகு கட்டைகள். ஆங்காங்கே பண ஒலைகள். சொல்லும் படியான பொருள் ஏதும் இல்லாத ஒரு வீடு. ஆனால் மிகப்பெரிய பொக்கிஷம் வாழ்ந்த வீடு தான் அது. அந்த பொக்கிஷம் வேறு யாரும் இல்லை என் அப்பாவின் தாய் தான்.

தன் ரத்தத்தை வேர்வையாக சிந்தி தன் இரண்டு ஆண் பிள்ளைகளை வளர்த்து கொண்டு இருந்தாள். காட்டு வேலை தான் தன் பிரதான தொழில். தொலை தூரம் நடந்தே சென்று வேலைகள் செய்து வந்தாள்.

எனக்கு விவரம் தெரிந்த வரை இரண்டு சம்பவங்கள் தான் நினைவில் இருக்கிறது.

அடமழையில் ஊரோடு எங்கள் ஓட்டு வீடும் நனைந்து கொண்டு இருக்க. வீட்டுக்குள் எனக்காக சுட சுட களிக் கிண்டி, கத்தரிக்காய் தொக்கு வைத்து கொடுத்தாள் என் அப்பத்தா. வெளியில் இருந்த குளிர் காற்றுக்கு சுகம் தருவது போல் ஒரு சூடு அந்த களியில். அதன் பிறகு எத்தனையோ மழைத்துளிகள் ஈரப்படுத்திவிட்டது அந்த மண்ணை. அப்போது அந்த களி எனக்கு பிடிக்கவில்லை. ஆனால் இப்போது மனம் ஏங்கித் தவிக்கிறது. ஒரு முறை காட்டு வேலைக்கு சென்றவள் வீடு திரும்ப தாமதம் ஆகிவிட்டது. நான் அந்த திண்ணையில் தனிமையில் அமர்ந்து அவளுக்காக காத்துக் கொண்டு இருந்ததாக ஒரு நினைவு.

நம் வாழ்வின் நினைவுகளை நினைத்துப் பார்க்கும் போது எத்தனை பெரிய நல்ல உள்ளம் படைத்த அந்த மனுஷியின் கையில் எத்தனை முறை நான் தவழ்ந்து இருப்பேன். எத்தனை முறை என்னை தூக்கி முத்தம் கொடுத்து இருப்பாள், எத்தனை முறை என்னை கான எத்தனித்திருப்பாள், எத்தனை முறை என்னை நினைத்து கண்ணீர் சிந்தி இருப்பாள் என்று இப்போது நினைத்து கொள்கிறேன்.

அவள் வாழ்ந்த ஒவ்வொரு நாளும் எப்படி கழிந்து இருக்கும் என்று அவளுக்கு மட்டுமே தெரிந்து இருக்கும். அவள் சோகத்தை யாரிடமும் வெளிப்படுத்தும் குணம் கொண்டவள் இல்லை.

உடல்நலக் குறைவுடன்  படுத்த படுக்கையில் ஆன போது நான் ஒரே ஒரு முறை பார்த்தேன். இப்போதும் அவள் பார்த்த பார்வைகள் என்னை பார்க்கிறது அவள் படுத்து இருந்த திண்ணையை நினைக்கும் போது. திண்ணை என்பது ஒரு வீட்டிற்கு இரண்டு சிறகுகள் போன்றது என்று நான் படித்த ஒரு வரி ஞாபகம் வருகிறது. 

ஆம் உண்மையில் திண்ணை என்பது எத்தனை சுக, துக்கங்களை தாங்கி இருக்கிறது. அவள் படுத்த படுக்கை ஆன போது அந்த திண்ணை தான் அவளை தாங்கிப் பிடித்து இருக்கிறது.

ஒரு நாள் அந்த ஓட்டு வீட்டுக்குள் மாரியம்மன் தெய்வம் ஊஞ்சல் ஆடுவது போல் கனா வந்ததாம் என் அம்மாவிற்கு. அது மாரியம்மா இல்லை, சுப்பம்மாள் என்று நான் சொல்லி இருக்க வேண்டும். நான் சொல்லவில்லை.

-Sun Muga-
27-01-2014 20.00 PM

No comments:

Post a Comment