September 21, 2016

பைத்தியத்தின் கண்கள்

அநேக இரவுகளில்
அதிகம்
உன்னை தேடும் போது
ஒரு பைத்தியத்தின்
கண்களை
என் உயிரெங்கும்
தழுவ விட்டுருக்கிறாய் நீ,
சில இரவுகளின்
அதன்
மெளன ஒளிகளை
நானும் பார்த்தபடி
அதனோடு
பேசிக் கொண்டே
இருக்கிறேன்,
இரவுகள்
இமைகளில் கலந்து
இருளின் வழியே
வெளியேறும்
நேரத்தில் விடிந்து
விடுவது கூட
தெரியாமல் உறங்குகிறது
இந்த பைத்திய உடல்..

-SunMuga-
21-09-2016 23:15  PM

உருப்படியான கவிதை

பாதி உறக்கத்தில்
கண் விழித்து
பார்த்த போது
என்னோடு
இரவு நிர்வாணமாய்
படுத்துக் கிடந்தது,
அதன் உடலெங்கும்
இருளின் வண்ணம்,
மெல்ல மெல்ல
இருளில் கலந்து
நானும் அதன்
உடலை தடவி பார்த்தேன்,
அதற்கு
ஒரு ஆணைப் போல
குறியும் இல்லை,
ஒரு பெண்னைப் போல
முலைகளும் இல்லை,
ஆனால் அதன்
கைகளில் மட்டும்
ஒரு பேனா இருந்தது,
எதற்கு பேனா என்று
கேட்டேன்!
உறக்கம் வராத
இரவுகளில்
உருப்படியான
ஒரு கவிதை எழுதுவதற்கு
என்றது அது!!!

-SunMuga-
21-09-2016 22.00 PM

September 19, 2016

விடியல்

விடியலை நோக்கிய
இந்த இரவின்
பயணத்தில்
கவிதை வார்த்தைகளின்
வழியே பயணிக்கிறது,

வார்த்தைகள்
வழித்துணையாக
என் வாழ்க்கை துணையை
மாறுபட்ட பல வழிகளில்
தேடிக் கொண்டு இருக்கிறது

தேடல் நிரம்பிய
இரவில்
இருள் கலந்திருந்த போதும்
இருளிலும் அவள்
இல்லாமல் இல்லை
என் இமைகள் முழுதும்

இமை மூடிய போது
கைகள் கோர்த்து
காதல் சொல்லி
கதைகள் பல சொல்லி
காலை வரை
காத்திருந்த மனம்
ஏனோ
எதிர்பார்த்தது
விழியில் ஒரு முத்தம்.

முடிவுறும் முத்தம்
ஏனோ
என் வாழ்வில் கிடையாது
என்று உணர்த்தியது
அந்த விடியல்
மட்டும் தான்..

-SunMuga-
19-09-2016 01:15 AM

வெற்றிடம்

வெறுமை
நிரம்பிய போது
வெற்றிடம் பார்த்தேன்
என் வேதனைகள்
அதில்
நெளிந்து நெளிந்து போனது,

வெறுமை கரைத்த
கவிதையில் ஏனோ
காலத்தை கரைக்க
காலம் வழி விட மறுக்கிறது,

காலம் ஏனோ
அத்தனை வன்மத்தையும்
என் மீது காட்டிக் கொண்டு
இருந்த போதும்,
அதே காலம் தான்
அதன் வலிகளையும்
சுமக்கிறது
வேறு வழிகள் இல்லாமல்...

-SunMuga-
19-09-2016 12:15 AM

முத்தம்

முத்தம் பற்றிய
முடிவில்லாத
கவிதை ஒன்று
எழுத வேண்டும்
உன் முத்தத்தை போல,
எப்போது முடியும்
என்று தான் தெரியவில்லை..

-SunMuga-
19-09-2016 12:05 AM

September 16, 2016

அன்பு மகள்

மழை கண்ட
ஒரு பெளர்ணமி
இரவில் மயக்கம்
கொண்டேன்
என் மழலை கேட்கும்
சிறு கேள்வியில்
அப்பா!
நிலா வருமா?

அன்று ஏனோ,
நிலவோடு
கனவும் வந்தது.,

கனவில்
என் கைகளை பிடித்து
வானை உற்று நோக்கி
மழை பெய்ஞ்சா
நிலா நனையாதாப்பா!!
என்றால் அவள்,

மழையோடு
என் கனவும்
என் கண்களும்
நனைந்தது...

என் கண்னை
நனைக்கும்
கவிதை நீ!

தெய்வத்தின்
சாயலும் நீ!

தெய்வத்தின்
குரலும் நீ!

தெய்வம் தந்த
தேவதையும் நீ!!

-SunMuga-
16-09-2016 22:30 PM

நிஜத்தின் சாவு

ஓடும் பாதையெங்கும்
என் பாவத்தின்
சுவடுகளை அழித்து,

என் பாதத்தின்
கவிதை
சுவடுகளை பதித்து..

என் கனவின்
மறுமுனை நோக்கி
ஓட விரும்புகிறேன்..

நிஜமாகவே
நிஜத்தின் சாவிலிருந்து
தப்பித்து...

-SunMuga-
16-09-2016 22:40 PM