October 25, 2015

2015 கவிதைகள் 1351 to 1360

நடந்து நடந்து
பாதம் வலிக்கிறது
அதைவிட
நீ நடந்த
பாதையெங்கும்
உன் பாதம் தெரியும் போது
என் பாதைகள் வலிக்கிறது.. 1351

இருக்கும் போது
தெரியாத
உன் உணர்வு
இப்பொழுது வெறும்
குற்ற உணர்ச்சியாக
தெரிகிறது
இரவுகள் எல்லாம்...    1352

சண்டையிட்டாலும்
சமாதானக் கொடி
எப்பொழுதும்
பறக்க விடுவாய்
உன் புன்னகையின் வழி
முகத்திலும்
அகத்திலும்....      1353

விரும்பிய பாதைகள்
இல்லாத போதும்
பயணம்
உன் நினைவோடு
தொடர்ந்து
கொண்டே இருக்கிறது
பயணத்தின் பலன்
என்னவாகும்
என்று அறியாமல்....    1354

முடிவில்லா பயணம்
என்பதை விட
முடிந்த வரையான
பயணங்களே
இப்பொழுது போதும்
என்று தோன்றுகிறது..   1355

மகளுக்காக ஓவியமும்
மகனுக்காக இசையும்
உனக்காக முத்தமும்
நித்தம்
இசைத்துக் கொண்டே
இருக்கிறேன்....           1356

நீயின்றி
நான் இசைக்கும் இசையெல்லாம்
இன்னலின் ஸ்ருதியில்
மெளனமாகவே இருக்கும்..   1357

தும்மலின் போது கூட
அம்மா என்று வாய் அசைத்தாலும்
அம்மு என்றே
மனதில் ஒலிக்கிறது....   1358

உன் இடம் தேடி
வரும் கரும் மேகம் நான்
உன்னில் காதல்
மழை தூற்றுவேன்
மழையின் துளியாய்
முத்தத்தை கூட்டுவேன்...   1359

உன்னோடு காணும்
கனவில்
என் கருவிழியை மெருகூட்டுகிறேன்
உன்னையே
அது இன்னும்
அழகாக காட்ட....      1360

October 24, 2015

2015 கவிதைகள் 1311 to 1320

பச்சைக் குழந்தையின்
பழங்கனவு பலித்ததாம்
என் மடி சாயும்
கனமொன்றின் வழியே!   1311

மாயத்தின் வண்ணம் இரவு
இரவுகள் ஏனோ
ஏக்கத்தின் ஒசைகளை
சுமந்து சுற்றுகிறதோ!!     1312

இரையை சுமக்கும்
பறவைக்கு
பசி தெரிவதில்லை
என் பசி தீர்க்கும்
பறவைக்கு
காதலின் சுமைகள்
தெரிவதில்லை...   1313

உன்னை விட்டு
மறையும்
பொழுதென்றால்
அப்பொழுது
எனக்கு மரணம்
மட்டுமே நிகழ்ந்து இருக்கும்.. 1314

மனக் குறையுடன்
குன்றின் மீது
அமர்ந்து தவம்
செய்யும் ஒரு
வைத்திய ஞானியை போல
உன் காதலின் மீது
நான் அமர்ந்து
என் மனக்குறையை
தீர்த்துக் கொள்கிறேன்
உன் முத்தத்தை
தவமாய் ஏற்றுக் கொண்டு...  1315

யுகம் கடந்து
யாகம் இன்றி
உன்னிடம் யாசகம்
கேட்கிறேன் காலமே!!
என் காதலையும்
அதன் கனவுகளையும்
இந்த யுகத்திலே
எனக்கு திருப்பி
கொடுத்து விடு என்று!   1316

யார் அறிவார்
இந்த கண்ணீரின் துயரம்
நீ அல்ல
உன் காதலின் பிரிவு என்று!!  1317

இரவுகள்
எத்தனையோ ரகசியங்களை
உள்ளடக்கியதாம்
என்னுள்
முதல் ரகசியமாய்
உன் முத்தமும்
உன் காதலும்...   1318

காதல் சிறையில்
இருந்தும்
சுதந்திரமாய்
சுற்றித் திரியும்
கைதி நான்!    1319

வரங்கள் கேட்க
கடவுள் இருக்கிறது
நமக்கு
வரம் கொடுக்கத் தான்
எந்த கடவுளும் இல்லை... 1320

2015 கவிதைகள் 1291 to 1300

வேர்வை:
இந்த மழையில்
நனைவதற்கு குடையாய்
உடைகள் எதற்கு?   1291

உன் விரலை தொட்டால்
மின்னல் வெட்டும்
உன் மார்பை தொட்டால்
இடி இடிக்கும்
உன் இதழை தொட்டால்
மழை இனிக்கும்...   1292

ஒன்றை ஒன்று
பிரிந்து விழும்
மழைத்துளி
மண்ணில் சேர்கிறது
ஏன்
நாம் இருவரும்
சேர்வதற்காய் கூட
இருக்கலாம்...   1293

கவிதையெங்கும்
மழைத்துளியின்
ஈரங் கசிந்து கிடந்தது
உன் ஈரத்துணியை
பிளிந்து
என் கைகளுக்கு இடையே!! 1294

இடி இசைக்கும்
கொடிய இரவில்
கனவுகள் தொடங்கியது
மின்னல் பட்டு
வெளிச்சம் வந்த பிறகு
கனவு கலைந்து
காதல் பிறந்தது...   1295

காற்றும்
என் காதலும்
தனியாய் இசைப்பதில்லை
தன் ராகங்களை
மரத்தின் இலைகளோடும்
இலையின்
காய்ந்த சருகுகளோடும்
இம் மண்ணின்
வாசனைகளோடும்
எங்கும் நிறைந்து இருக்கிறது..1296

நம் விருப்பங்களுக்கும்
கனவுகள் இருக்கிறது
விருப்பங்களில் இருந்து
விடுபடுவதற்கு
விருப்பங்களை விட வேண்டும்
இல்லை
விருப்பங்களில் அதிகம்
ஈடுபட வேண்டும்..   1297

கொஞ்சம் கொஞ்சமாக
வளரும்
உன் ஞாபகங்கள்
என்னை வளர்க்கிறது
உன் பிள்ளையாக...   1298

கூந்தலில் இருந்து
உதிரும் மல்லிகை போல
கனவுகளும்
காத்திருக்கிறது
நிர்வாணத்தின்
உடைகளை ஏற்க..   1299

எல்லாமே
கனவாகி போன காலத்தில்
கனவுகளின் மிச்சமாய்
கண்ணீர் இருக்கிறது
உன்னோடு
நான் நனையும்
முதல் மழையின் ஈரத்தில்..  1300

2015 கவிதைகள் 1281 to 1290

எதிர் பாரா
இரவின் வெளியில்
எதிர் வரும்
கண்ணீரின் காலடி
தடங்களில் ஒசை
எதிர் பார்த்த படியே
நம்
இருவருக்கும் கேட்கிறது...  1281

வெள்ளம் புகுந்த
ஊர்களில் எல்லாம்
வெள்ளத்தின் அடையாளமாய்
வீடுகள் இல்லை
என் உள்ளத்தில்
புகுந்த
உன் அன்பு வெள்ளத்தால்
நான்
இந்த மனித உலகிலே இல்லை.. 1282

நாய் என்று
அவள் உணர்த்திய போது
பேய் என்று
கனவு துரத்திய போது
என் சேய் சுமந்த
நீயும் சொன்னாய்
நான்
உன் காதலன் என்று... 1283

கடவுளுக்கும்
கருணை
இருப்பதை
உன் இதழால்
நான் கண்டேன்
காதலுக்கும்
கண் இருப்பது
உன்னில்
நான் கண்டேன்...  1284

தனிமை மாறாத
இரவெல்லாம்
என் காதலின்
கனவுகள் எல்லாம்
இளைத்து கொண்டு
இருப்பது ஏனோ??   1285

குழந்தைப்
பாட்டு பாடி
மகிழ்வுறும்
நாள் ஒன்று
எனக்கு வாய்த்தால்
அதுவே
என் வாழ்க்கை
கனவுகளின்
விடுதலை என்பேன்...  1286

மரணம் என்ற
வார்த்தை
உருக்கொழைத்த போதும்
நீ எனக்காய்
மரணிக்க
துணிந்தவள்
என்று எண்ணும் போது
வார்த்தைகள் அற்று
ஒரு கவிதை வளர்கிறது... 1287

மழை மீது இருக்கும்
ஈர்ப்பு விசைகளை மீறி
உன் காதலின் மீது இருக்கும்
ஈடுபாடே
என்னை அதிகம்
ரசிக்க வைக்கிறது
இந்த இரவு மழையை..  1288

மின்னல்கள் எழும்
ஜன்னல்களின் சத்தத்தில்
நடுச்சாமம் வரை
நீண்டு பெருகிய
மழையில்
நானும் நீயும்
நனைந்தோம்
வேர்வைகள்
வழிய விட்ட படி....   1289

சாலையில் தேங்கிய
தண்ணீரெல்லாம்
தன் பாதை பார்த்து
ஓடுவதை போல
மழை விட்ட பிறகும்
காதலின் தூறல்கள்
உன்னை நோக்கி ஓடுகிறது.. 1290

October 23, 2015

2015 கவிதைகள் 1271 to 1280

கோபுரங்களின் அழகு
இன்னும் உயர்ந்து
கொண்டே இருக்கிறது
அந்த பெளர்ணமி நிலவால்

பெளர்ணமி நிலவின் வழி
நிலையாய் ரசிக்கிறது இரவை
மிக உயர்ந்த உன் காதல்... 1271

நிலவை சுற்றித் திரியும்
வெண்மை சுடர்
அதுவும் வடிக்கிறது பார்
கண்ணீரை,
நீ இல்லாமல்
நான் அதை ரசித்த போது..  1272

விரிந்து செல்லும்
அவ்வானை நோக்கும்
போதெல்லாம்
பிரிந்து வாழும்
இதயத்தின் ஓசை கேட்கும்
ஓசைகளின்றி
கண்களும்
கண்ணீர் வடிக்கும்...   1273

உன்னைத் தேடி அலைந்து
வருத்தப்படும்
இந்த காலத்தின் வழியே
வலிகளை விட
வாழும்
வழிகளை நினைத்து தான்
கண்ணீர் உருகுகிறது...  1274

இன்றோ பிறந்தேன்
என்றோ இறப்பேன்
இவை இரண்டுக்கும்
நடுவில் வாழ்கிறது
உன் காதல்
என் பெண்ணே!!    1275

இழைத்த
என் உடலில்
உயிர் இருப்பது
உன் காதலால்
இறந்த பின்னும்
என் உயிரை தேடும்
உன் கண்களால்...  1276

என் தாகத்தின்
தனிச் சிறப்பு
என்னவென்றால்
தாரமாக
நீ வேண்டும் என்பதே!  1277

வாழ்வின்
அனைத்து வலிகளின்
உணர்வுகளையும்
உன்னிடம்
நான் காண்கிறேன்
உணர்வுகளை
வெளியேற்றி
எடுக்கும்
ஒரு சிறு முயற்சி தான்
இந்த கவிதைகள்...   1278

எல்லைகளுக்கு
அப்பாற்பட்ட
உணர்வுகள்
இன்னும் உயிர்த்தெழுந்து
கொண்டே இருக்கிறது
நம் வாழ்வில்
நம் இரவில்....    1279

மெளனமின்றி
முத்தம் இல்லை
முத்தமின்றி
வாழ்க்கை இல்லை
இவ்வாழ்க்கையில்
நீயும் இன்றி
நானும் இல்லை
நாம் இன்றி
காதலும் இல்லை...   1280

October 19, 2015

2015 கவிதைகள் 1261 to 1270

என் உயிரே
ஏன் அழுகிறாய்
அதுவும் என்னை நினைத்து
பாவம் செய்தவள்
நீ அல்ல,
நான் தான்
என்னை காயப்படுத்த
உன்னை அழவைக்கிறான்
போல அந்த இறைவன்...  1261

உன் நினைவின்
ஒவ்வொரு துளியில்
பெருகுகிறது
காதலின் கரையில்
கண்ணீரின் வெள்ளம்...   1262

உடல் வலித்த போதும்
உறக்கம் தொலைந்த போதும்
இதயம் ஏங்கி கொண்டு தான்
இருக்கிறது
உனக்கொரு கவிதை எழுத..  1263

உன் நினைவின் சாரல்
என் ஜன்னலை நிரப்பும் போது
காகிதம் நனைகின்றன
என் கண்ணீரின்
ஒரு துளியில்....    1264

இடி இசைத்தால்
உன் இடையை பிடித்துக் கொள்வேன்
உன் கொலுசின் ஒலி கூட
இடியாய் இசைக்கும் போது...   1265

இதயமே
இசையாய் என்னை சுற்றும்
ஒலி நீ!!
இதமாய்
என்னுள் வீசும்
ஒளியும் நீ!!!     1266

உன்னை விரும்பும்
இதயத்தில்
உன் நினைவும்
அது எழுப்பும் சத்தமும்
தான் என் காதுகளுக்கு
கேட்கிறது உயிரே!!   1267

சின்ன சின்ன
மழைத்துளிகள் கூட உதவுகிறது
உன் பெரிய
முத்த மழைக்கு...     1268

தூறலிடும் இரவெல்லாம்
தூக்கம் இல்லை
உன் துணை தேடி
உன் துணிகளில்
நான் புதையும் போது... 1269

மழையும் வேண்டும்
மழைக்கு
என் இதழுக்கு குடையாக
உன் இதழும் வேண்டும்.. 1270

2015 கவிதைகள் 1251 to 1260

உன் உடலோடு
உரசிப் போகும்
இரவெல்லாம் இனிது
என் உயிரே
இனி எப்போது
அமையும்
அந்த இரவு...     1251

இரவின் ரகசியம் தான்
இரவுக்கு வெளிச்சம்
வெளிச்சத்தின் ஒளியாய்
நீ
எப்பொழுதும் எனக்கு..  1252

என் பகலில்
பதியும்
கனவுகள் எல்லாம்
இரவில்
உன்னிலே வெளிப்படுவது
தான்
எனக்கு அதிசயம் அன்பே!!   1253

மெளனத்தை உடைத்து
வெளியேறும்
இனிய இரவின் ஒலி
உன் முத்தம்...    1254

முத்தமிட்டு
நீ முடித்தாய்
அந்த இரவை!

இரவோ!
சத்தமிட்டு அழுகிறது
இரவு முடிந்து விட்டதே!என்று.. 1255

ஒவ்வொரு முறையும்
உன் கண்களை பார்த்து
கவிதை எழுதுகிறேன்
உன் இதழை
பேனாவாக கொண்டு...   1256

உறக்கமின்றி
உன்னைப் பற்றி
எழுதுவதிலும் ஒரு
சுகம் தான்
உன்னோடு உறங்கி
கழித்த சுகம்
ஏற்படுவதால் என் அன்பே!!  1257

வாழ்வைப் பற்றிய
உயர் சிந்தனையிலும்
உன்னைப் பற்றிய
கவிதை தோன்றுவதால் தான்
என் உயிர் வாழ்கிறது
என்னைப் பற்றிய
உன் கவிதையில்
நானும் வாழ்வதால்...     1258

ஆணாய் பிறந்து
இந்த பெண்ணின்
உடலிலும்
உள்ளத்திலும்
வளர்கிறேன்
காதலின் உயிராக...    1259

புது உடைகளுக்கு பதில்
ஒரு புதுக் கவிதையை
உடுத்திக் கொள்கிறேன்
என் பிறந்த நாளுக்கு...   1260

October 12, 2015

October 9, 2015

2015 கவிதைகள் 1241 to 1250

என்னை
எப்பொழுதும் சுமக்கும்
உன் கண்களிலே
வேர்வைக்கு பதில்
கண்ணீரே வடிகிறதோ!!    1241

மீனைப் போல
துள்ளிக்
கொண்டு இருக்கிறாய்
தண்ணீரில் இல்லை
என் கண்ணீரில்
என்னைப் பிரிந்து...     1242

தனிமை சூழ்ந்த
இடமொன்றில்
இனிமையாய் இருக்கிறது
உன் ஒவ்வொரு நினைவும்.. 1243

வினோத
உணர்வுகளின் முடிவில்
உன்னையே நினைத்து
இரவு நிரம்பிய
வானை உற்று பார்க்கிறேன்
உன் பார்வைகள்
என் மீது படுவது போல.. 1244

அநேக இரவுகள்
அதிகம்
உன்னைத் தேடியே
விடிகிறது என் அன்பே!!   1245

மகிழ்ச்சி நிறைந்த
இரவுகள் எல்லாம்
நம்
காதல் கவிதைகளின்
இன்னொரு பக்கம்....  1246

என் ஆன்மாவின்
அடி ஆழத்தில்
உன் காதலின் வெளிச்சம்
தான் என்னை
உயிர் வாழ வைக்கிறது..  1247

ஜீவனற்ற
என் உடலில்
ஜீவனுள்ள
பல கனவுகள்
இன்னும் இன்னும்
உயிர் எழுந்து
கொண்டே தான்
இருக்கிறது..    1248

சங்கை நிரப்பும்
காற்றை போல
என்னை
உன்னைக் கொண்டு நிரப்பி
உன் மூச்சுக் காற்றில்
நானும் வாழ்கிறேன்
ஒலியாய்...  1249

எண்ணற்ற கிளைகள்
கொண்டுள்ளது
என் கனவுகள்
அதன் கனியாய்
உன் முத்தம்...  1250