August 29, 2016

30-08-2016

காலமும்,
சில கவிதைகளும்
என்னை
மாற்றியிருக்கிறது,
என்னைப் பற்றிய
அனுமானங்களையும்
ஒரு சிலருக்கு
மாற்றி தந்திருக்கிறது.

கடவுளை விட
கடவுளாக நான் நினைக்கும்
என் அன்புகளையும்
என் மீதான அன்புகளையும்
பற்றிக் கொண்டு
காலம் கடத்திவிட்டேன்.

இப்பொழுது
காத்திருப்பது என்னவோ
கவலை தீர்க்கும்
ஒரு கவிதைக்காக,
ஒரு ஓவியத்திற்காக,
யாரோ ஒருவரின்
புத்தகத்திற்காக,

அமரும் இடத்திலெல்லாம்
அமைதியின் வடிவமாய்
ஆழ்ந்த இசையின்
துடிப்பில் எழும்
என் கவிதை வரிகளில்
வரமாய் உன் காதல்

ஆனந்த காதலின்
ஒளியூட்டும்
ஒரு ஓவியம்
அது
உன்னையும் என்னையும்
மட்டுமே பிரதிபலிக்கும்
காலத்தின் விதியால்
அது
வண்ணங்கள் அற்று
காட்சியளித்தாலும்
அதிலே கரைந்தும்,
மறைந்தும் கொள்கிறது
என் கண்ணீர்.

கண்கள் பார்த்து
கவிதை பேசி
காதல் வளர்த்த
காலமெல்லாம்
காகித மலரில்
கவிதையாக வாடுகிறது
என் அன்பே!

உன் இருப்பின் நிலை
என்னவோ,
ஒரு சிறு மழை
அதில் விழும்
ஒற்றை பனியில்
உறையும்
என் கவிதை வரிகளில்
தேங்கி நிற்கும்
உன் முத்தம்.

உன் முத்தத்தால்
என் கனவோ,
காதலின் வாசல் தேடி
கண்களின் வழியே
உன்னையும் நாடி
கன்னங்கள் வழியே
உன் வெட்கத்தை தேடி
என்னுள் ஓடுகிறது
உன்னையும் தேடுகிறது..

தேடும் பொழுதுகள் எல்லாம்
இரவான போது
இருள் மட்டுமே
காதலின் வெளிச்சம்...

காதலின் வெளிச்சங்கள்
ஏனோ
வேதனையளித்த போதும்
வாழ்வில் மிஞ்சிய
கனவுகளில் வழியும்
காதலால் இன்னும்
காதல் வாழ்க்கிறது
இன்னமும் அது வாழும்..

துரதிருஷ்டம்

முப்பது வயது
என்று நினைக்கும் போது
முப்பது வயதில்
இறந்து போன
சில்வியா ப்ளாத்
நினைவிற்கு வருகிறாள்

எல்லா கலைகளையும் போலவே
சாவதும் ஒரு கலை,
அதை
நான் முழுமையாக நிறைவேற்றுவேன்.
என்று கவிதை
எழுதியவள் அவள்.

உயிர்களை கடந்து
உணர்வுகளை உள்ளடக்கியது தான்
ஒரு கவிதை,
அதை வார்த்தைகள் நிரம்பிய
இரவின் கனவிற்குள்
கொண்டு வந்து
கடவுளாக காணும்
செயல் என்னவோ
ஒரு கவிஞனுக்கு
இயல்பான ஒன்று.

ஆனால் அதையும் மீறி
சாத்தனோடு கைகோர்த்து,
கால்களை விரித்து
இமை மூடி
என் கனவுகளை
உட்சொருகும்
ஒரு பெண்ணைப் பற்றிய
துர்கனவு வரும்போது
வலிகள் உணர்ந்து
வழியும்
தூமைச் சொட்டின்
வாசம் அறியாமல்,
என் நாசிகளில் கூட
சில வேசிகளின்
வேர்வை நாற்றமெடுத்து
வேதனை தரும் இரவுகளில்
இன்னும்
என் உயிர் வாழ்ந்து
கொண்டு இருப்பது தான்
எனது துரதிருஷ்டம்....

-SunMuga-
28-08-2016 22-40 PM

August 27, 2016

தோரோ

ஒரு பாறையைப் போல அசைவற்று நிசப்தமாக இருப்பதற்கு உங்களால் முடியுமானால் உங்கள் மீதிருந்தே விருட்சங்கள் முளைக்கக்கூடும். பறவைகள் உங்கள் தோள்களில் அமர்ந்து சப்தமிடும். மழையும் வெயிலும் பனியும் காற்றும் உடலை வடிவேற்றும். இயற்கையை அறிந்து கொள்வதற்குத் தொலை நோக்கியோ மைக்ராஸ்கோப்போ அவசியமானதில்லை. மிகுந்த பொறுமையும் கூர்ந்த புலன்களுமே தேவைப்படுகின்றன.

- ஹென்றி டேவிட் தோரோ-

வழித்துணை

வழித்துணையற்ற
என் வாழ்க்கையில்
வலிகள் பல கடந்த போதும்
வலிகளை வழிகள் ஆக்கி
வாழ்க்கையின் வழியே
வழிந்தோடும்
எனது கனவுகளின் பயணம்
உன் கண்ணோடு
பயணிக்கிறது...

பைத்திய ருசி

பைத்திய ருசி
1
காலையிலிருந்தே கதிரின் மீதான ஏவல் தொடங்க ஆரம்பித்துவிடுகிறது கல்யாணியின் அப்பா வீட்டில் காபி குடிக்கமாலே எனக்கு. எனக்கும் சில நேரங்களில் கோபம் வரத்தான் செய்கிறது ஏன் இந்த கதிர் திரும்ப திரும்ப என்னோடு பேசிக் கொண்டே இருக்கிறான் என்று. கதிருக்கும் என் வாழ்க்கைக்கும் சம்பந்தமான சம்பவங்கள் என்று அப்படி ஒன்றும் நிகழ்ந்திடாத போதும் கற்றுக் கொண்ட மாயைகளை போல என்னால் கதிரிடம் இருந்து விலகவே முடியவில்லை..
தூக்கம் வந்தும் தூங்க முடியாத கதிர், நான் தூங்காத பல இரவுகளில் ஏவல் நிறைந்த வார்த்தைகளோடு பேசிக்கொண்டே இருக்கிறான். காதுகளை மூடிய அவன் கொடிய சத்தம் என் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது..

2

பின்னிரவுக்கு பிறகான நேரங்களில் வில்சனின் பிரிவு சந்திரனாய் என்னுள் கரைந்து எரிகிறது சக கைதியின் மூச்சுக் காற்றில். முறைப்படி திருமணம் செய்த பானுமதியின் சிவந்த கண்களில் இருந்தும், வார்த்தைகளின் வாதங்களிலிருந்தும் தப்பித்துக் கொள்ள சோடியம் ஃவேபர் வெளிச்சம் நிறைந்த தெருவும் எனக்குத் தேவைப்படுகிறது. ஆசுவாசமாய் அழுது கொள்ள வில்சனின் சிகரெட் வாசனை நிறைந்த மெளன முத்தங்களும் நள்ளிரவுக்கு பிறகு தேவைப்படுகிறது. தேவைக்கு அதிகமான ஞாபங்களை மட்டுமே கொடுத்த வில்சனின் தேவை இப்பொழுது அதிகமாய் எனக்கு தேவைப்படுகிறது சந்திரனைவிட..


3

பதட்டமடைந்த தயாளனின் படபடப்பு. என் இரவின் அருகாமையில் வீசும் தயாளனின் மன வெளிச்சங்கள் என எல்லாவுமே என்னை உறங்கவிடாமல் இருக்கச் செய்கிறது. மெளனத்தின் எல்லைகளை கடந்து மனைவி மீதான அழுத்தங்கள், வெள்ளை நோயின் வெறுப்புகள் என வெறுமையில் ஆழ்த்துகிறது.
என் எல்லா பயணங்களின் தொடக்கம் சந்தோசமாக இருந்த போதும் பயணங்களின் ஊடே பயணிக்கும் தயாளனின் முத்தத்தின் சூடு என் நெற்றியிலும் படர்கிறது.
பயணத்தின் நடுவே பஸ்லில் இருந்து கீழே இறங்கிய தயாளனை ஏனோ மனதிலிருந்து இறக்கிவிட முடியாத போது காமத்தின் நிறம் வெள்ளையாகவே தெரிகிறது..

4
ஜென்மத்தில் தீராத பசி,
பைத்தியங்களோடு பைத்தியமாய் 
என்னைக் கழுவிக் கொண்ட 
ஒரு நதி,
இமை திறந்து உறங்கப் 
பழகி கொண்ட எல்லா நாட்களும்,
இப்படி ஒரு கடிதம் 
எழுத நேரிடும் ஓர் இரவு,
நரம்பிற்கு பதிலாய் 
கனவுகளை அறுத்து
கண்ணீர் விடும் கண்கள்,
இறகுகளின் சடலங்கள்,
பிரிவிலிருந்து என்னை
எண்ணிலிருந்து மீட்டெடுத்து
மீண்டும் பிணமான நொடிகள்,
காமத்தின் 
வெளிப்படையான காடு
நித்தம் கண்கள்
சந்திக்கும் சில துரோகங்கள்
அனைத்தும்
உதவுகிறது பைத்தியம் ஆவதற்கு.

எண்ணிப் போட்டால் 
சாகமுடியாது தான்
நான் பைத்திய ருசியை
மீண்டும் வாசிப்பதற்காகவே
வாழ விரும்புகிறேன்.

-SunMuga-
27-08-2016

August 7, 2016

வலி பழகு

"வலி பழகு"
என்ற கணேச குமரானின்
வரிகளை படித்த பிறகு
எனது
வாழ்க்கை பல
வலிகளை உள்ளடக்கியதாய்
மாறியிருக்கிறது,
இருந்தும்
வலிகளை மீறி
இன்னும் அதிகமாக
வாழ வழிச் சொல்லுகிறது
அதே வரி
"வலி பழகு"