August 29, 2016

30-08-2016

காலமும்,
சில கவிதைகளும்
என்னை
மாற்றியிருக்கிறது,
என்னைப் பற்றிய
அனுமானங்களையும்
ஒரு சிலருக்கு
மாற்றி தந்திருக்கிறது.

கடவுளை விட
கடவுளாக நான் நினைக்கும்
என் அன்புகளையும்
என் மீதான அன்புகளையும்
பற்றிக் கொண்டு
காலம் கடத்திவிட்டேன்.

இப்பொழுது
காத்திருப்பது என்னவோ
கவலை தீர்க்கும்
ஒரு கவிதைக்காக,
ஒரு ஓவியத்திற்காக,
யாரோ ஒருவரின்
புத்தகத்திற்காக,

அமரும் இடத்திலெல்லாம்
அமைதியின் வடிவமாய்
ஆழ்ந்த இசையின்
துடிப்பில் எழும்
என் கவிதை வரிகளில்
வரமாய் உன் காதல்

ஆனந்த காதலின்
ஒளியூட்டும்
ஒரு ஓவியம்
அது
உன்னையும் என்னையும்
மட்டுமே பிரதிபலிக்கும்
காலத்தின் விதியால்
அது
வண்ணங்கள் அற்று
காட்சியளித்தாலும்
அதிலே கரைந்தும்,
மறைந்தும் கொள்கிறது
என் கண்ணீர்.

கண்கள் பார்த்து
கவிதை பேசி
காதல் வளர்த்த
காலமெல்லாம்
காகித மலரில்
கவிதையாக வாடுகிறது
என் அன்பே!

உன் இருப்பின் நிலை
என்னவோ,
ஒரு சிறு மழை
அதில் விழும்
ஒற்றை பனியில்
உறையும்
என் கவிதை வரிகளில்
தேங்கி நிற்கும்
உன் முத்தம்.

உன் முத்தத்தால்
என் கனவோ,
காதலின் வாசல் தேடி
கண்களின் வழியே
உன்னையும் நாடி
கன்னங்கள் வழியே
உன் வெட்கத்தை தேடி
என்னுள் ஓடுகிறது
உன்னையும் தேடுகிறது..

தேடும் பொழுதுகள் எல்லாம்
இரவான போது
இருள் மட்டுமே
காதலின் வெளிச்சம்...

காதலின் வெளிச்சங்கள்
ஏனோ
வேதனையளித்த போதும்
வாழ்வில் மிஞ்சிய
கனவுகளில் வழியும்
காதலால் இன்னும்
காதல் வாழ்க்கிறது
இன்னமும் அது வாழும்..

No comments:

Post a Comment