December 31, 2013

அன்பு தம்பி

இந்த வருடம் இனிதே முடியும் தருணம் இது. இன்று 31-12-2013. ஏதாவது உருப்படியான காரியம் செய்ய நினைத்து, இந்த வருடமும் வீணாய் போனது. ஆனாலும் போன வருடத்தை காட்டிலும் இந்த வருடம் குறைவு தான் நான் வீணாய் போனது. காரணம் என்ன? என்று அலசி ஆராய தேவையில்லை. என் நண்பர்களின் உதவியால் உருப்படியான ஒரு சில வேலைகளை செய்து முடிக்க முடிந்தது.

இன்று என் சகதோழி ஒருத்தி எத்தனையோ நண்பர்களை பற்றி நீ எழுதிவிட்டாய்.இன்னும் ஏன்? அவனை பற்றி எழுத வில்லை என்று வினவினாள். அவள் கேட்பதிலும் ஒரு நியாயம் இருக்கிறது. நான் ஏன் அவனை பற்றி இதுவரை ஒரு வரி கூட எழுதவில்லை?

நானே யோசித்தேன். சற்று மனஅமைதி. அருகில் யாரும் இல்லை. யோசிக்கிறேன். என்ன எழுதுவது அவனை பற்றி. அவனுக்கும் எனக்குமான தொடர்பு என்ன? எங்கிருந்து ஆரம்பம் ஆனது? இப்பொழுது, இந்த கனம் என்ன நிலைமையில் இருகிறது? எதுவுமே எனக்கு புரியவில்லை. ஆனாலும் அவனை பற்றி எழுத எத்தனையோ விஷயங்கள் அவனை விட என்னிடம் இருக்கிறது. ஆம் உண்மையில் மிகச் சரக்கு உள்ள மனிதன் தான்.
அவனை நான் எப்பொழுது பார்த்தேன் என்று சரியாக என் நினைவில் இல்லை. ஆனால் ஒரு முழு நண்பனாக நான் பார்த்தது என் கல்லூரி படிப்பு முடிந்த பிறகு தான். அவன் ஒரு அறிவு ஜீவி. அது அப்போது எனக்கு சரியாக தெரியவில்லை.
நானும் அவனும் பழக ஆரம்பித்தது பெருந்துறையில் தான். வாழ்க்கையில் அவனும் நானும் கற்றுக் கொண்ட பாடம் மிகப்பெரியது அந்த பெருந்துறையில் வாழ்ந்த காலத்தில் தான். மிஞ்சி மிஞ்சிப் போனால் ஒரு வருட வாழ்க்கை தான். ஆனால் வாழ்க்கையில் அனுபவிக்க வேண்டிய என்று சொன்னால் தவறு. கற்க வேண்டிய பாடம் என்று செல்லலாம். எத்தனையோ சந்தோசம், துயரம் அந்த காலத்தில். என்னை மட்டுமே சார்ந்து வந்தவன் அவன். என்னோடு நடந்தவன் அவன். என்னோடு உறங்கியவன் அவன். என்னோடு உண்டவன் அவன். 

எத்தனையோ இரவில் இருவரும் பேசிக்கொண்டு இருந்திருக்கிறோம்.

ஒரு நாள் பயங்கரமான காய்ச்சல் அவனுக்கு. கையில் பணம் இல்லை. என்ன செய்வது?  அவன் அன்று கிடந்த நிலைமையை பார்த்து என்னையும் அறியாமல் கண்ணீர் சிந்தி விட்டேன். இப்பொழுது இந்த கனம், இந்த வார்த்தை எழுதும் போது கூட கண்ணில் கண்ணீர் கோர்த்து இருக்கிறது. என் நெஞ்சில் தீரா சுமை அந்த நாள் மட்டுமே.

நான் அன்று உணர்ந்தது என்னை மட்டும் இல்லாமல் உன்னையும் கஷ்டப்படுத்திவிட்டனோ? என்று தான்.
எத்தனையோ முறை எண்ணிப் பார்த்து வேதனை கொண்டு இருக்கிறேன். வாழ்வில் பிற்பகுதி எப்படி இருக்க வேண்டும் என்று தீர்மானிக்கும் அளவு அறிவு இல்லை அப்பொழுது எனக்கு.

இன்று இருவரும் சென்னைக்கு நகர்ந்து விட்டோம். சென்னையில் அவனுக்கு எத்தனையோ முகம் தெரிந்த, தெரியாத நண்பர்கள். ஆனால் சென்னையில் அவன் மட்டும் தான் எனக்கு நண்பன்.

நான் புத்தகம் வாசிக்க கற்றுக் கொண்டது அவனிடம் இருந்து தான். எண்ணற்ற புத்தகங்கள் எடுத்துக் கொடுத்திருக்கிறான். முந்நாளில் நான் ஒரு கவிதை எழுதினால் முதலில் வாசிப்பவன் அவனாக தான் இருப்பான். இந்நாளில் நானே கூச்சம் கொள்கிறேன். என் கவிதையை அவனிடம் காட்டிக்கொள்ள. காரணம் ஒன்று இருக்கிறது. இன்று அவன் என்னைவிட கவிதை எழுதுவதில் சிறந்தவனாக ஆகிப் போனதால்.
அவன் எழுதிய கவிதைகளை வாசித்துப் பார்த்தால், நான் எழுதுவது எல்லாம் சிறு பிள்ளை தனம் தான்.

இந்நாளில் அவனின் கவனம் புகைப்படம் எடுப்பதிலும் இருக்கிறது. கவிதை எழுத தெரிந்தவனுக்கு புகைப்படம் எடுப்பது என்பது மிகச் சுலபம். இதில் என்னை சேர்த்துக் கொள்ள நினைக்காதீர். அவன் எடுக்கும் ஒவ்வோரு புகைப்படமும் ஒரு புதுக்கவிதை.

நான் ரசித்தது. மழை கொஞ்சம் பெய்து விட்டுச்சென்ற அந்த வளைந்த அடையார் பாலம் தான் இன்னும் என் நெஞ்சை பாடாய் படுத்துகிறது.
நானும் அவனும் முன் மாதிரி இப்பொழுது சகஜமாக பேசிக் கொள்வது என்பது மிகச் சிரமமாக உள்ளது. இன்று மெளனத்தாலே இருவரும், இருவரின் நிலைமைகளை புரிந்து கொள்கிறோம்.

ஆயிரம் நாட்களா? இல்லை அரை நூற்றாண்டு காலமா? நான் வாழ்வது என்பது எனக்கு தெரியாது. ஆனால் அவன் வாழ வேண்டும். அவனிடம் எத்தனையோ திறமை இருக்கிறது. அறிவும் இருக்கிறது. அது அத்தனையும் ஒரு நாள் இந்த உலகிற்கு தெரிய வரும். அது வரை நான் பொறுமையாக தான் இருப்பேன். என் ஆழ் மனதின் ஒரு சிந்தனை. ஒரு நம்பிக்கை. அவன் நிச்சயமாக ஒரு நாள் வெற்றி பெறுவான்.

என்னை அவன் நண்பர்களிடம் அறிமுகம் செய்யும் போது அவன் சொல்லும் வாசகம் இது தான்" என் அண்ணன், என் நண்பன், என் க்ளாஸ் மேட், எல்லாம் இவன் தான்"

இதுவரை நான் அவனுக்கு எதுவும் செய்தது இல்லை. என்னால் வேண்டுமானால் அவன் துயரம் கண்டு,கொண்டு இருக்கலாம். நான் இந்நாள் வரை துயரம் கொண்டதில்லை அவனால்.
அவனைப் பற்றி கவிதை ஒன்று எழுத எனக்கும் ஆசை தான். ஆனால் அவனைப் பற்றி எழுதும் அளவிற்கு நான் இன்னும் கவிதையில் தேரவில்லை.

நிச்சயம் ஒரு நாள் எழுதுவேன் அவனை பற்றி ஒரு கவிதை. அதற்கான புத்தகங்களை படித்துவிட்டு.

இது என் அன்பு தம்பி கருப்பையா விற்கு புது வருட சமர்ப்பணம்.

-Sun Muga-
31-12-2013 02.00 AM

December 29, 2013

Surendhar

அழகிய முகம்,
நான் நன்கு
பழகிய குணம்.

பிறந்ததும் ஜனவரி 1
என்னைச் சார்ந்த ஜனங்களிலும்
இவன் தான் 1
.

அரியனவை தெரிந்து கொள்.
உன்னை அறிவை நீ
உண்ர்ந்து கொள்
என்று இவன் எனக்கு
சொல்லாமல் சொல்லி
கொடுத்த நண்பன்.

கல்லூரியில் முதல் நண்பன்.
வகுப்பின் முதல் இடமும்
இவன் தான்.

ஒரு ஓட்டு வித்தியாசத்தில்
முதல்வன் தகுதியை
இழந்தவன் என்று அவனே
பெருமையாக சொல்லிக்
கொள்ளும் குணம்
கொண்டவன்.

இவன் யார்? என்று
கல்லூரியில் யாருமே
கேட்பதில்லை.

கணினியை காதலித்தாலும்
கைப்பேசியை கைவிரல்
பிடித்துக் கொள்கிறான்.

எதிலும் இளமை கூடி இருக்கும்
என்பது இவன் தனித்திறமை.

வாழ்க்கையில் பல
சோதனைகளை கடந்தவன்
இந்த இளம் வயதில்.

கடந்த நாட்களையும்,
கடந்து வந்த நாட்களையும்,
அவ்வப்போது எண்ணி
கண்ணீர் விடுவான்.

தாயின் கையினால்
உருண்டை சோறு
ஒன்றாக உண்டு
மகிழ்ந்து இருக்கிறோம்.

பெருகிப் போன அன்பு
மிகப்பெரிய போன
பண்புகள் என இவனுள்
ஆயிரம்.

ஒன்றாக உறங்கி
இருக்கிறோம்.
ஒன்றாக விளையாடி
இருக்கிறோம்.
ஒன்றாக படித்து
இருக்கிறோம்.

அது அத்தனையும் இன்று
நினைத்துப் பார்த்தால்
நினைவின் ஒரு பகுதியில்
சாரல் வீசுகிறது.

என்னை எனக்கே பல
முறை அறிமுகம் செய்து
என்னையும் நண்பனாக
ஏற்றுக் கொண்டவன்...

-Sun Muga-
29-12-2013

December 28, 2013

மழை

கள்வா!
அடைமழையில் உன்னை
அனைத்துக் கொள்ள
வேண்டும்;
குடைக்குள்
உன்னோடு குளிர்
காய வேண்டும்
குடையோ
மழையில் குளிக்க
என் இடையோ
உன் முத்தத்தில்
தவிக்க;
நீ
மூடி மறைத்தாய்
உன் பொன் இதழையும்;
மழை குறைய குறைய,
ஏனோ என் முத்தம்
பெருகுகிறது...
என் முத்த மழைக்கு
உன் இதழ் மட்டும்
போதுமா? என்ன
வண்ண குடையாக...
-Sun Muga-

December 26, 2013

தனிமை

முன்னுரை;

இதை படித்துப் பார்ப்பதும்,
பார்த்துப் படிப்பதும்
உன் திறமை.

என் காதலோடு
நீயும் இருப்பாய்,
நம் அன்னையும்  இருப்பாள்.

அதிகாலை சூரியன்
போல வாழ்க்கையில்
தினம் எழுந்தாலும்,
நன்பகல் வெயிலில்
வண்ணப் பூ போல
போரிட வேண்டியுள்ளது
இந்த தனிமைக்
காலத்தில்.

தனிமையைப் பற்றி ஒரு சில வரிகள்;

கார்மேகமும் சூழவில்லை,
கதிரவனும் சாயவில்லை,
குளிர்க் காற்றும் வீசவில்லை,
மண்வாசனையும் எழவில்லை,
ஆனாலும் மழை பொழிகிறது -
ஆம் என்னவளின் கண்ணில்
கண்ணீர் மழை!!!

இவள் இமையென்ன
கார்மேகமோ??
மூடும் போது வெளிச்சம்
மங்கும் விழியென்ன
கதிரவனோ??
மூச்சுக் காற்றும் முடிவு
தெரியாமல் திணறுகிறதோ??
முகத்தை மூடியபடி
ஒரு கண்ணீரும்
வழிகிறதோ??

ஈரக் காற்று சுழற்றி
அடிக்கும் இந்நேரம் கூட
ஒர் இன்னல் தனிமையை
எண்ணி!!!

இன்று தயங்காமல் இவளுக்கு
தோள் கொடுப்பது
இந்த கண்ணீர் துளிகள்
மட்டும் தான்.

விதி என்று எண்ணுவதா?
தனிமையை எண்ணி
வேதனை கொள்வதா?
வேதனை தரும் செயலால்
கோபம் கொள்வதா?
கோபத்தால் என்னையே
நான் வருத்திக் கொள்வதா?

வருத்தம்; வாடிக் கிடந்தேன்;
நித்தம் உன்னை  தேடிக்கிடந்தேன்;
நிம்மதி இழந்தேன்;
நிறைகுடம் சுமந்தேன்;
அதிகாலையில் எழுந்தேன்;
சப்பென சமையல் செய்தேன்;
உன்னை மனதில் சுமந்து
உண்ண முயற்சித்தேன்;
முடிவில் கண்ணீரும்
சிந்தினேன்.

நானும் எழுவேன்;
நாளும் உன்னை தொழுவேன்;
விழிமூடி உன்னை தொடுவேன்;
என் துணை எந்நாளும்
நீ என்பேன்.
நானாக பிறக்கவில்லை;
இன்று நாளும் பிறக்கிறேன்
உன் குழந்தையாக;
உன் மடியை தேடவில்லை;
நீ அமர்ந்த படியில்
அமர்ந்து கொள்கிறேன்!!

அதிகாலை சூரியனே வா!
என்னை அனைத்து கொள்!!
உன் கரத்தில் இணைத்து கொள்;
உன் தோளில் என்னை
சாய்த்துக் கொள்;
காத்திருக்கும் இந்த பூவை
உன் பொன் சிரிப்பால்
ஏற்றுக் கொள்;
கருவிழி பார்வையில் என்னை
கண் கலங்காமல் பார்த்துக் கொள்;
கண்ணீரும் நான் சிந்தினால்
தயங்காமல் என்னை மன்னித்துக் கொள்;

இரவே!! உனக்கு இரக்கம்
இல்லையோ?
நெடுநேரம் உறக்கம் இல்லாமல்
உன்னோடு தனிமையில் இருக்க நினைக்கிறாயோ??

என் இதயம் இருக்கிறது.
எனக்காக துடிக்க;
என்னோடு தனிமையில் பயனிக்க;

இரவே!! நீயும் வருத்தம் கொள்வாய்;
அவன் என்னை அனைத்து கொள்வான்;
ஐம்புலனால் சேர்த்துக் கொள்வான்;

இறுதியில் தனிமையையும்
இரவாகிய உன்னையும்
கொல்வான்.

கொலைகாரனும் இல்லை;
கொடியவனும் இல்லை;
என் இதயத்தை
வென்றவனும் இல்லை;
வேதனைகளை பல நான்
சுமந்தாலும் என் அருகே
எனக்கும் தெரியாமல்
நிற்பவன் அவன்;

என்னைவிட என்னை
அதிகம் ரசித்தவன் இவன்;
இயல்பான வாழ்க்கையில்
இன்னும் உயிர் வாழும்
ஒரு சராசரி மனிதன் தான் இவன்.

காத்திருக்கிறான்;
கண்விழித்தபடி;
கைகள் இரண்டையும்
கட்டியபடி;
சூரியனை பார்த்தபடி;
என்று? கண் மூடுவோம் என்று!!

-Sun Muga-
26-12-2013 23.37 PM

December 19, 2013

காதலே!!

அழகே என்று உன்னை
வர்னித்தால் நீ
கோபம் கொள்வாய்!!
அழகே என்று உன்னை
பற்றி வர்னிக்காமல்
நான் கவிதை எழுதினால்
அது கவிதையே இல்லை.
என்ன செய்வது?
தோழியே! என்றால் அது தான்
மிகப்பெரிய தொல்லை,
உயிரே! என்றால் நீ உயிரையே
விட்டுவிடுவாய்!!
கவிதையே! என்றால் நீ
என்னை காதலித்தும்
விடுவாய்!!
இதயமே! என்றால் இதழால்
பொழிவாய்!!
மொழியே! என்றால் மொய்த்து
விடுவாய்!!
முத்தமே!! என்றால் அய்யோ!!
மொத்தம் போச்சு!!
இப்ப நான் எப்படி தான்
உன்னைப் பற்றி கவிதை
எழுதுவது??
-Sun Muga-

December 8, 2013

நம் கவிதைகள்

1. உன் தாயின் கருவறையில்
    இருந்து பிறந்த நீயோ -
    உன் அன்பின் கருவறையில்
    அடைத்து விட்டாய் என்னை
     மட்டும்.

2. நிகழ்வுகளை மறந்து உன் தாயின்
    மடியில் தவழ்ந்த நீயோ -
    இன்று தவிக்கிறாய் என் மடி
    இல்லாமல்..

3. இரவிலும் சூரியனை ரசிக்க
    எண்ணுகிறது என் விழிகள்.

4. ராத்திரி தூக்கம் துளையவில்லை
    என் உயிரே; தேடுகிறது
    நம் காதல் இனையும் நாளை.

5. எங்கும் நான் ரசிப்பது குளியல் அறை
     உன்னோடு மட்டும் இருப்பதால்.

6. உன்னோடு இருக்கும் போது
    என் உயிர் பிரிய வேண்டும்
    என்பதால் என் உயிரையும்
    கையில் பிடித்து அலைகிறேன்.

7. நான் சுவாசிக்கும் மூச்சுக் காற்றும்
   நீ முத்தமிட்ட சுத்தமான காற்று
   அதனால் என்னவோ
  இன்று வரை உயிர் வாழ்கிறேன்.

கடற்கரை

கரையில் நின்றபடி
நான் பார்த்தேன்;
கடலுக்கு அப்பால்
என்ன இருக்கும் என்று.

என் முதுகை தட்டியபடி
என்னை அழைத்தாய்
நீ என்ன? என்று.
புன்னகை புரிந்தபடி
ஒன்றும் இல்லை என்றேன்.

கரையில் அமர்ந்து
இருவரும் பேசினோம்.
மென்மையான உன் விழிகளில்
எத்தனை அழகு!!

கடலுக்குள் இருக்கும்
முத்தை நான் பார்த்தது
இல்லை.
ஆனால் உன்னில்
இருக்கும் முகத்தையும்
அகத்தையும் எத்தனை
முறை பார்த்தாலும்
அழகு தான்!

அறிவுரைகள் பல சொன்னாய்
நீ!!
அது அத்தனையும் கரைந்து
கொண்டே இருந்தது.

என் பார்வைகள்
மெல்ல மெல்ல கூட
உன்னில் இருந்து
பேச்சுக்கள் குறைந்து
கொண்டே போக,
மெளனத்தில் கலந்தது
நம் காதல் அந்த கரையில்.

காற்று மெல்ல தீண்ட
மேனியெங்கும் ஒரு
சிலுசிலுர்ப்பு.

காதுகளுக்கு மேலே மூடியை
மெல்ல வருடியபடி என்னை
நீ பார்க்க;
புதிதாய் நான் உன்னை
பார்க்க;
கிளம்பலமா? என்றாய் நீ.

நான் மறுபடியும் கரையில்
எழுந்து நின்றபடி கடலை
பார்த்தேன்;
கடலுக்கு அப்பால்
என்ன இருக்கும் என்று.

-Sun Muga-
08-12-2013 19.00 PM

December 6, 2013

மல்லிகை

கவிதை
என்னிடம் நீ கேட்டாய்;
உன்னோடு நான்
இருக்கும்போது
நீயே ஒரு கவிதை.
கவிதையின்
முதல் வரி உன்
முகம்.
என் முகமும், அகமும்
மெருகு ஏறிட எத்தனை
இதமான வரிகளடி
உன் இதழ் ரேகையில்.
உன்னில் இருப்பது
மெய் தானே?
ஆனால் என்னில்
மேய்வது எத்தகைய
மோகம் தனை.
பெண் என்ற உன்
பிறப்பால்
என்னில் இருந்து
பிரித்து விட்டாய்
நான் முதலில்
பார்த்த என்னை.
எத்தனை நேரம் கணக்கில்லை
எழுதிக் கொள்ள
காகிதம் இல்லை
காரணம் அறியா
ஒரு தவிப்பு!!
தரையை தொட்ட
கண்ணீரில் என்று
பூக்கும் இந்த காதல் பூ!
பூத்த மலரே!! வாட
நினைத்ததில்லை,
வாழ வழியையும்
ஏற்க கூடியது இல்லை.
வானம் தொட்ட காதல்
பார்வையில் பரிதவிக்கும்
மனதால் ஒரு சேர
ஏங்கித் தவிக்கும்.
வட்ட வட்டமாய் வாரி
வழங்கிய கனவுகளை
என் படுக்கை அறை
என்று உன்னோடு
கலக்கும்.
வாடாத மல்லிகையே!
நீ சூடாமல் என்னில்
பதிந்தால்,
நானே மல்லிகைப்
போல் தான் மனப்பேன்.
மல்லிகை பூ என்றால்
சிரிப்பதோ!! உன் மனம்
ரசிப்பதோ!! என் இதழ்..
-SunMuga-
06-12-2013 22.51 PM

சிங்கத்தின் குகை - ஒரு நாள்

அவன் தனிமையில் அந்த தெரு முனைக் கடையில் ஆழ்ந்த சிந்தனையுடன் புகைபிடித்த படி தன் கண்ணாடி வழியாக தன் காலிற்க்கு கீழே தெரியும் தரையை உற்று நோக்கி யோசித்து கொண்டு இருந்தான். அநேகமாக அடுத்து என்ன வேலை என்று கூட எண்ணிக் கொண்டு இருக்கலாம். புகை கூட கூட கையில் இருக்கும் சிகரெட் துண்டு எரிந்து தன் உடலை சுருக்கிக் கொண்டே இருந்தது. அவன் சிகரெட் துண்டில் இருந்து பிறந்த புகை மூட்டம் கூட கூட மேக மூட்டம் போல காட்சியளிக்க, மழை வந்துவிடுமோ? என்று எண்ணிய படி, தன் காலில் போட்டு நசுக்கியபடி, ஒரு சில நேரம் எச்சில் முழுங்கியபடி கிளம்பினான். எங்கே போகிறோம் என்று யோசித்து யோசித்து ஒரு வழியாக தன் வேலை செய்யும் இடத்திற்கு வந்தடைந்தான்.

"தும் க்யா கர் ரஹீ ஹோ?

என்று அவன் கேட்டான்.

"சார், நல் மேம் பானீ நஹீம் ஆதா."
என்றான் அந்த ஹிந்தி கார வேலை ஆள்.

"தோ கியா? பால்டீ மேம் பானீ ரக்கா ஹை".

என்றபடி வேலையாட்களை, வேலை எய்தபடி எண்ணிக் கொண்டு இருந்தான். இன்று தான் அந்த ஆங்கிலப் படம் வெளியாகிறதோ என்று. ஆம் அந்தப் படத்தின் பெயர் " Small Tiger". போக வேண்டும் என்ற எண்ணங்களும், விருப்பங்களும் இல்லை. ஆனாலும் ஒரு ஈர்ப்பு அந்தப் படத்தின் மீது. ஈவினிங் சோவிற்க்கு டிக்கெட் இருக்கிறதா? என்று மதியம் 3 மணி அளவில் தியேட்டர் பக்கம் போனான் அவன். அந்த இனிய நாளின் ஒரு அதிர்ஷ்டம் அவனுக்கு மிகச் சிறப்பாக கிடைத்தது. அது தான் அந்தப்படத்தின் லட்சுமிகரமான அந்த நடிகை அங்கே வந்திருப்பதை, பாரதி Style - ல சொல்லனும் -னா " இன்பத் தேன் வந்து பாயுதே காதினிலே" என்று அவன் அறிந்தான். அரை குறை மனது இல்லை இப்போது. மிக திடமான, திண்மமான ஒரு மனிதனாக அவன் உள்ளே சென்றான்.

அவளையும் பார்த்துவிட்டு, படம் பார்க்க ஆரம்பித்தான் அவன்.

"Small Tiger" படத்தின் ஓட்டம், நமது சிங்கத்தின் கர்ஜனையில், இன்னும் சொல்லப் போனால், வெறிகொண்டு, இன்னும் சொல்லப் போனால், வெகு கொண்டு, இன்னும் சொல்லப் போனால், கோபத்தில் பொங்கி எழுந்து, டிக்கெட் கிழித்துக் கொடுத்தவனிடமே டிக்கெட்டை கிழித்து எறிந்து கிளம்பியது தான் அன்றைய சிறப்பு அம்சம்.

வெளியேறிய அவன் மனம் வருந்தவில்லை, போனில் பைசாவும் அவ்வளவாக இல்லை, இருந்தாலும் இருக்கின்ற பைசா காலியாகும் வரை, அதாவது நாயகன் பானியில் " நாலு பேருக்கு நல்லது நடக்கும்னா" எதுவும்மே தப்பு இல்லை போன் செய்து புலம்பி தீர்த்த  அருமையான அந்த ஒரு நாள். சிங்கத்தின் வாழ்வில் ஒரு முக்கியமான நாள்.

-SunMuga-
06-12-2013 22.33 PM

December 3, 2013

சோழ பரம்பரையில் ஒரு MLA

என்ன டா இது தலைப்புன்னு யோசிக்கிறேங்களா? இது என் கூட வேலை பார்க்கிற Mr. நாகராஜன் பற்றிய ஒரு அனுபவ பதிவு. அவரை பற்றி எழுதுவதற்கு எனக்கு முழுத் தகுதி இருக்குன்னு நம்புகிறேன். இவர் ஒரு கட்டட கலை நிபுணர். ஆனாலும் கண்ணாடி இல்லாம எந்த ஒரு வேலையும் செய்யமாட்டார். இவர் தகுதிக்கு தாஜ்மஹால் தரம் எப்படி இருக்குன்னு ஆராய்ச்சி பண்ண கூப்ட அப்ப கூட என்னோட நண்பர்கள் தான் முக்கியம்ன்னு இங்க எங்களோட குப்பை கொட்டுறாரு. மிக திறமையான ஒரு கலைஞர். வேலைன்னு யார் சொன்னாலும் எந்த கம்பெனி, என்ன வேலைன்னு கூட கேட்காமல் இண்டர்வியூ அட்டன் பண்ணுவார். வழக்கம்போல ஒரு பல்பூம் வாங்கிட்டு போய்விடுவார். இப்ப தான் கொஞ்சம் படிக்க ட்ரை பன்னுறாரு. நீங்க நினைக்கலாம் என்ன டா? இவ்வளவு வயசுக்கு அப்புறம் அப்படின்னு. படிப்புக்கு எப்பவுமே வயசு இல்லை அப்படின்னு இந்த உலகத்துக்கு ஏதோ ஒரு தத்துவத்தை எடுத்து சொல்லத் தான் இந்த முடிவுன்னு எனக்கு மட்டும் தான் தெரியும்.

நான் இப்போது எல்லாம் எந்தவொரு படம் பார்க்க முடிவு செய்யும் முன் இவரிடம் தான் படத்தோட ரிசல்ட் எப்படின்னு கேட்டு தெரிஞ்சுக்கிறேன். இவர் நல்லா இல்லன்னு சொல்ற படத்தை மிஸ் பண்ணவே மாட்டேன்.

இவரோட திறமைக்கு எங்க ஊர்ல  MLA போஸ்ட் க்கு கூட இவர் நிக்கலாம். ஆனால் ஊரோட நன்மைக்காக இப்போதைக்கு வேண்டாம்ன்னு எங்க சங்கம் முடிவு பன்னிருக்கு.

-SunMuga-
03-12-2013 22.14 PM

December 2, 2013

PKN Hr. Sec. School -Tirumangalam

முதல் முறை என் பெற்றோரை விட்டு 10 நாள் Camp சென்றேன். நான் அப்பொழுது 8ம் வகுப்பு படித்துக் கொண்டு இருந்தேன். என் வாழ்க்கையில் நான் மிகக் கொடிய நாட்களாக என்னும் நாட்களில் இந்த 10 நாளுக்கும் இடம் இருக்கும். பள்ளியில் படிக்கும் போது அவ்வளவு தூரம் விவரம் இல்லை என்றே இப்போது நினைத்தால் தோன்றுகிறது. நான் அந்த Campல் இருக்கும் போது எத்தனை விசயங்கள் நான் கண்டேன். நான் நண்பனாக நினைத்து பழகியவன் சற்று என்னை விட்டு பிரிந்து போனதாக நினைவு. அந்த Camp தான் நானும் அவனும் இறுதியாக சந்தித்தது, இது நாள் வரை அவன் என் கண்களில் படவில்லை. இன்னுமொரு கொடுமையான சம்பவம் அந்த நாட்களில் தான் நடைபெற்றது. ஆம் என் அண்ணனுக்கு விபத்து நேரிட்டது. ஓரமாக ரோட்டில் நடந்து சென்றவனை ஒரு வேன் காரன் அடித்துவிட்டு போய்விட்டான். என் அண்ணனுக்கு அப்பொழுது தலையில் காயம். இது எனக்கு நான் Campல் இருக்கும் வரை தெரியாது. என் பெற்றோர் அப்பொழுது கண்ட, பெற்ற துயரம் எண்ணில் அடங்காதவை. என் நினைவை விட்டு நீங்க மறுக்கும் சம்பவம் அது. நான் அவர்கள் மீது கோபம் கொள்ளவில்லை ஏன் என்னிடம் தெரிவிக்கவில்லை என்று. ஆனால் அவர்கள் எவ்வளவு தூரம் அந்த சிரத்தையை அனுபவித்து இருப்பார்கள் என்று எண்ணி எண்ணி வருத்தம் தான் மிஞ்சியது. நான் அன்று தான் வீட்டிற்கு வந்தேன் Camp முடித்து. யாரும் என்னிடம் அவ்வளவு சகஜமாக பேசிக் கொள்ளவில்லை. யாரோ ஒருவர் வந்து இப்ப எப்படி இருக்கான் அப்படின்னு என் அம்மாவிடம் கேட்டதாக நினைவு. "ம்ம்ம்" இப்ப ஒன்னும் பிரச்சினை இல்லை. அப்படி அம்மா சொன்னதும் தான் கேட்டேன். என்ன ஆச்சுன்னு.. அப்பொழுது தான் என்னிடம் காட்டினார்கள் ஸ்கேன் , பேப்பர் நியூஸ் எல்லாம். ஒரு நிமிடம் என்ன சொல்ல, செய்வதென்றே தெரியாமல் படித்து பார்த்தேன் அந்த பேப்பர் நியூஸை. மறுநொடி அமைதியாக இப்ப எப்படி இருக்கு என்று என் அண்ணனின் தலையின் பின்புறம் பார்த்தேன். பரவாயில்லை என்று என்னை பார்த்து ஒரு அசட்டு சிரிப்பு சிரித்தான் அவன். நான் ஏன் அந்த Camp கிற்கு சென்றிருக்க வேண்டும். இப்பொழுதும் அந்த School லை கடந்த செல்லும்போது ஒரு கசப்பான சம்பவம் கண்ணுக்குள் கசிந்து கொண்டே இருக்கிறது.
-SunMuga-
02-12-2013 23.01 PM

December 1, 2013

அவனும்-பெண்ணும்

அவன் தன் வீட்டில் ஒழிந்து கொண்டு இருந்தான். அவன் பெண் குழந்தை தேடுகிறாள். அப்பா!! எங்கப்பா இருக்க. அப்பா! என்றபடி கட்டிலுக்கு அடியில் குனிந்து பார்க்கிறாள். அப்பா! என்றபடி கதவின் இடுக்கில் தேடுகிறாள்! அப்பா என்றபடி சமையல் அறையில் தேடுகிறாள். அப்பா! என்றபடி அம்மா!! அப்பாவ எங்கமா? என்று கேட்கிறாள். நீயே கண்டுபிடிடா செல்லம்!! என்றாள் அவள். அம்மா!! நான் ரெம்ப சின்ன பொண்ணுமா நீயே சொல்லி கொடு என்றாள். அதெல்லாம் சொல்ல முடியாது, நீ தான் கண்டுபிடிக்கனும் என்றாள் அவள். மறுபடியும் அப்பா!! நீ எங்க தான் இருக்க... என்றபடி உரக்க கத்தினாள். ப்ளீஸ்-பா குட்டி பாவம்-பா வா!! என்றாள். அவன் சிரித்தபடி அந்த புளு கலர் பிரிட்ஜ் க்கு பின்னால் இருந்து வெளியே வந்தான். அந்த பெண் இப்பொழுது சிரித்தபடி எப்படி கண்டுபிடிச்சேன் பார்த்தியா!! என்றதும் அவளின் அம்மா குலுங்க குலுங்க சிரித்தாள்...

-SunMuga-
01-12-2013 21.33 PM

அரக்கோணம்

அரக்கோணம் நான் வேலை நிமித்தமாக அங்கே வாழ வேண்டிய சூழ்நிலை. சுதந்திரம் நிறைந்த ஒரு அறை. அறையில் அற்புதமான நண்பர்கள். மிக அமைதியான ஒரு வாழ்க்கை. காலை 7.30க்கு எழுந்தாலும் போதும் வேலைக்கு போக. இப்படியே 4 வருடம் கழிந்துவிட்டது. எனக்கு அங்கு கிடைத்த நண்பர்களில் வேலு மிக முக்கியமான ஒரு நண்பன். நண்பன் என்றால் ஒரு சுயநலம் இல்லாத என்று அர்த்தம். அந்த விதத்தில் அவனும் எந்தவொரு சுயநலத்தோடு யாரோடும் பழகி நான் கண்டதில்லை. நல்ல நண்பன். அவனால் இதுநாள் வரை எனக்கு ஒரு கஷ்டமும் இல்லை. என்னால் வேண்டுமானால் அவன் என்றாவது கஷ்டப்பட்டு இருப்பான். ஆனால் நான் பட்டதில்லை. உதவி என்று வருபவர்களுக்கு தயங்காமல் உதவும் மனப்பான்மை கொண்டவன். வேலையில் அதிக ஈடுபாடு கொண்டவன். எனக்கு பிடித்த படங்கள் பெரும்பாலும் அவனும் ரசித்து பார்த்து இருப்பான். நான் அவனோடு பார்த்த படங்களிலேயே மிக ரசித்து பார்த்த படம் என்றால் அது 3 மட்டுமே. அரக்கோணத்தில் அவனும் ஒரு நல்ல நண்பன்.
-SunMuga-
01-12-2013 21.42 PM