December 31, 2013

அன்பு தம்பி

இந்த வருடம் இனிதே முடியும் தருணம் இது. இன்று 31-12-2013. ஏதாவது உருப்படியான காரியம் செய்ய நினைத்து, இந்த வருடமும் வீணாய் போனது. ஆனாலும் போன வருடத்தை காட்டிலும் இந்த வருடம் குறைவு தான் நான் வீணாய் போனது. காரணம் என்ன? என்று அலசி ஆராய தேவையில்லை. என் நண்பர்களின் உதவியால் உருப்படியான ஒரு சில வேலைகளை செய்து முடிக்க முடிந்தது.

இன்று என் சகதோழி ஒருத்தி எத்தனையோ நண்பர்களை பற்றி நீ எழுதிவிட்டாய்.இன்னும் ஏன்? அவனை பற்றி எழுத வில்லை என்று வினவினாள். அவள் கேட்பதிலும் ஒரு நியாயம் இருக்கிறது. நான் ஏன் அவனை பற்றி இதுவரை ஒரு வரி கூட எழுதவில்லை?

நானே யோசித்தேன். சற்று மனஅமைதி. அருகில் யாரும் இல்லை. யோசிக்கிறேன். என்ன எழுதுவது அவனை பற்றி. அவனுக்கும் எனக்குமான தொடர்பு என்ன? எங்கிருந்து ஆரம்பம் ஆனது? இப்பொழுது, இந்த கனம் என்ன நிலைமையில் இருகிறது? எதுவுமே எனக்கு புரியவில்லை. ஆனாலும் அவனை பற்றி எழுத எத்தனையோ விஷயங்கள் அவனை விட என்னிடம் இருக்கிறது. ஆம் உண்மையில் மிகச் சரக்கு உள்ள மனிதன் தான்.
அவனை நான் எப்பொழுது பார்த்தேன் என்று சரியாக என் நினைவில் இல்லை. ஆனால் ஒரு முழு நண்பனாக நான் பார்த்தது என் கல்லூரி படிப்பு முடிந்த பிறகு தான். அவன் ஒரு அறிவு ஜீவி. அது அப்போது எனக்கு சரியாக தெரியவில்லை.
நானும் அவனும் பழக ஆரம்பித்தது பெருந்துறையில் தான். வாழ்க்கையில் அவனும் நானும் கற்றுக் கொண்ட பாடம் மிகப்பெரியது அந்த பெருந்துறையில் வாழ்ந்த காலத்தில் தான். மிஞ்சி மிஞ்சிப் போனால் ஒரு வருட வாழ்க்கை தான். ஆனால் வாழ்க்கையில் அனுபவிக்க வேண்டிய என்று சொன்னால் தவறு. கற்க வேண்டிய பாடம் என்று செல்லலாம். எத்தனையோ சந்தோசம், துயரம் அந்த காலத்தில். என்னை மட்டுமே சார்ந்து வந்தவன் அவன். என்னோடு நடந்தவன் அவன். என்னோடு உறங்கியவன் அவன். என்னோடு உண்டவன் அவன். 

எத்தனையோ இரவில் இருவரும் பேசிக்கொண்டு இருந்திருக்கிறோம்.

ஒரு நாள் பயங்கரமான காய்ச்சல் அவனுக்கு. கையில் பணம் இல்லை. என்ன செய்வது?  அவன் அன்று கிடந்த நிலைமையை பார்த்து என்னையும் அறியாமல் கண்ணீர் சிந்தி விட்டேன். இப்பொழுது இந்த கனம், இந்த வார்த்தை எழுதும் போது கூட கண்ணில் கண்ணீர் கோர்த்து இருக்கிறது. என் நெஞ்சில் தீரா சுமை அந்த நாள் மட்டுமே.

நான் அன்று உணர்ந்தது என்னை மட்டும் இல்லாமல் உன்னையும் கஷ்டப்படுத்திவிட்டனோ? என்று தான்.
எத்தனையோ முறை எண்ணிப் பார்த்து வேதனை கொண்டு இருக்கிறேன். வாழ்வில் பிற்பகுதி எப்படி இருக்க வேண்டும் என்று தீர்மானிக்கும் அளவு அறிவு இல்லை அப்பொழுது எனக்கு.

இன்று இருவரும் சென்னைக்கு நகர்ந்து விட்டோம். சென்னையில் அவனுக்கு எத்தனையோ முகம் தெரிந்த, தெரியாத நண்பர்கள். ஆனால் சென்னையில் அவன் மட்டும் தான் எனக்கு நண்பன்.

நான் புத்தகம் வாசிக்க கற்றுக் கொண்டது அவனிடம் இருந்து தான். எண்ணற்ற புத்தகங்கள் எடுத்துக் கொடுத்திருக்கிறான். முந்நாளில் நான் ஒரு கவிதை எழுதினால் முதலில் வாசிப்பவன் அவனாக தான் இருப்பான். இந்நாளில் நானே கூச்சம் கொள்கிறேன். என் கவிதையை அவனிடம் காட்டிக்கொள்ள. காரணம் ஒன்று இருக்கிறது. இன்று அவன் என்னைவிட கவிதை எழுதுவதில் சிறந்தவனாக ஆகிப் போனதால்.
அவன் எழுதிய கவிதைகளை வாசித்துப் பார்த்தால், நான் எழுதுவது எல்லாம் சிறு பிள்ளை தனம் தான்.

இந்நாளில் அவனின் கவனம் புகைப்படம் எடுப்பதிலும் இருக்கிறது. கவிதை எழுத தெரிந்தவனுக்கு புகைப்படம் எடுப்பது என்பது மிகச் சுலபம். இதில் என்னை சேர்த்துக் கொள்ள நினைக்காதீர். அவன் எடுக்கும் ஒவ்வோரு புகைப்படமும் ஒரு புதுக்கவிதை.

நான் ரசித்தது. மழை கொஞ்சம் பெய்து விட்டுச்சென்ற அந்த வளைந்த அடையார் பாலம் தான் இன்னும் என் நெஞ்சை பாடாய் படுத்துகிறது.
நானும் அவனும் முன் மாதிரி இப்பொழுது சகஜமாக பேசிக் கொள்வது என்பது மிகச் சிரமமாக உள்ளது. இன்று மெளனத்தாலே இருவரும், இருவரின் நிலைமைகளை புரிந்து கொள்கிறோம்.

ஆயிரம் நாட்களா? இல்லை அரை நூற்றாண்டு காலமா? நான் வாழ்வது என்பது எனக்கு தெரியாது. ஆனால் அவன் வாழ வேண்டும். அவனிடம் எத்தனையோ திறமை இருக்கிறது. அறிவும் இருக்கிறது. அது அத்தனையும் ஒரு நாள் இந்த உலகிற்கு தெரிய வரும். அது வரை நான் பொறுமையாக தான் இருப்பேன். என் ஆழ் மனதின் ஒரு சிந்தனை. ஒரு நம்பிக்கை. அவன் நிச்சயமாக ஒரு நாள் வெற்றி பெறுவான்.

என்னை அவன் நண்பர்களிடம் அறிமுகம் செய்யும் போது அவன் சொல்லும் வாசகம் இது தான்" என் அண்ணன், என் நண்பன், என் க்ளாஸ் மேட், எல்லாம் இவன் தான்"

இதுவரை நான் அவனுக்கு எதுவும் செய்தது இல்லை. என்னால் வேண்டுமானால் அவன் துயரம் கண்டு,கொண்டு இருக்கலாம். நான் இந்நாள் வரை துயரம் கொண்டதில்லை அவனால்.
அவனைப் பற்றி கவிதை ஒன்று எழுத எனக்கும் ஆசை தான். ஆனால் அவனைப் பற்றி எழுதும் அளவிற்கு நான் இன்னும் கவிதையில் தேரவில்லை.

நிச்சயம் ஒரு நாள் எழுதுவேன் அவனை பற்றி ஒரு கவிதை. அதற்கான புத்தகங்களை படித்துவிட்டு.

இது என் அன்பு தம்பி கருப்பையா விற்கு புது வருட சமர்ப்பணம்.

-Sun Muga-
31-12-2013 02.00 AM

No comments:

Post a Comment