July 26, 2013

பள்ளி

எத்தனையோ நான் அள்ளிக் கொண்ட நினைவுகள் இந்த பள்ளிப் பருவத்தில். சத்துணவு முதல் பத்தாம் வகுப்பு சாயங்காலம் வரை என் நினைவின் ஒரு பகுதி. சத்துணவு போகும் போது ஒடி ஒழிந்து கொண்ட நொடிகள் இன்னும் ஒழிந்து கொண்டு தான் இருக்கிறது என் நெஞ்சுக்குள். அரை குறை படிப்பு ஆனாலும் அதில் ஒரு சந்தோஷம் இருந்திருக்ககூடும். அன்பை சுமந்த அம்மாவோடு சத்துணவு செல்லும் போது புத்தகப்பைக்கு பதிலாக அதிகம் கண்ணீரை சுமந்து இருப்பேன். நான் ஓடிய ஓட்டத்தை பார்த்து என் தாயிடம் இருந்து சிதறிய சிரிப்பொலி இன்னும் சத்தமிட்டுக் கொண்டே இருக்கிறது என் காதுகளில், முகத்தில் புன்னகையோடு. புழுதியில் புரண்டு எழுந்து புன்னகை பூக்க, ஒரு சின்ன பூவுடன் பலகை வண்டி ஓட்டியதும் ஒரு நினைவு. அந்த பூவின் முகம் இதுவரை என் கண்ணில் பட்டது இல்லை. ஆனால் அதன் வாசனையும் நினைவும் என் நெஞ்சில் ஒட்டிக்கொண்டுள்ளது. அ, ஆ படித்ததாக கூட என் நினைவில் இல்லை இன்று வரை.
ஆறாம் வகுப்பு என் தாயுடன் முதல் நாள் சென்றேன். அந்த நாள் இன்னும் என் கண்ணில் அப்படியே தெரிகிறது. வழி தெரியாமல் கேட்டு இறங்கி ஒரு வித மன பதற்றத்தோடு(சத்துணவு வாக இருந்தால் ஓடி விடலாம் இது ஆறாம் வகுப்பு ஆச்சே)சென்ற தினம்.
முதலில் நான் அமர்ந்த வகுப்பறை இன்னும் என் கன்னத்தில் அறைந்து கொண்டே இருக்கிறது. காலத்தின் சுவடுகள் என்னை இப்படி வாட்டி வதைக்கும் என்று ஒரு நாளும் எண்ணியது இல்லை. படிப்பறிவு இல்லை, பாதியில் விட்டு விடவும் மனமில்லை. நான் அமர்ந்த வகுப்பறை VI-D அந்த வகுப்பின் அறிவே இல்லாதவன் வரிசையில் நான் கடைசியாக நின்று இருப்பேன். எத்தனை முறை சொல்லிக் கொடுத்தாலும் மண்டையில் ஏறவில்லை என்பதை விட அந்த அளவுக்கு விவரம் இல்லை.அந்த ஒரு வருடம் தான் என் வாழ்வின் பல விதிகளை மாற்றியது.முதலில் அடித்த ஆசிரியர் கூடபின் நாளில் அன்பு கொள்ள ஆரம்பித்தார்கள்.
ஓரளவு விவரம் தெரிய வந்தவுடன் நானே படிக்க தொடங்கினேன்.
பள்ளி - எனக்கு கனவுகளை காலம் தாழ்த்தி தான் வரவழைத்தது.ஆனால் அதில் ஆசைகள் பெருகிப் போயின.
பெண் என்ற பிம்பம் பின் தொடர ஆரம்பித்தது, அந்த பத்தாம் வகுப்பில் தான். யாரையும் காதலிக்கவில்லை. என்னோடு ஐந்தாம் வகுப்பு படித்தவள் இப்பொழுது பத்தாம் வகுப்பு முடித்துவிட்டாலே என்ற வெறி தான். என் மீதே எனக்கு கோபம் வர ஆரம்பித்தது. இனி கோபம் கொண்டு என்ன பயன் என்று என்னை நானே தேத்திக்கொண்டேன். படித்தேன் முடிந்தளவு. வெற்றியும் கொண்டேன் இயன்றளவு.
இன்று
வேதனை பல சுமந்தாலும்
வேண்டுமென்றா நான்
செய்தேன்?
என்ற ஒரே அர்த்தத்தில்
வாழ்கிறேன் நான்.
அன்று நான் சந்தித்த
நண்பர்கள் ஒருவர் கூட
இன்று என் கூட இல்லை.
காரணம் - அன்று இருந்த
நான் கூட இன்று இல்லை..
-SunMuga-
26-07-2013 23.35 PM

No comments:

Post a Comment