July 23, 2016

சாரல்

உன் நினைவின்
சாரல்
கண்ணில் மழையாக
பொழிந்தால்
என்னில் வழிந்தோடும்
வார்த்தைகள்
அனைத்தும்
உன் முத்தத்தின்
மெளன மொழியை
கொண்டு இருக்கும்...

July 22, 2016

31-12-2015

கடவுளுக்கு நன்றி,
காதலின் அன்புக்கும் நன்றி...

உன் அன்பு நிறைந்த ஒவ்வொரு நினைவையும் தொகுத்து வாசிக்கும் போது
மூச்சு முட்டுகிறது உன் முத்தம் போல.

2016 கவிதைகள் 91 to 100

நட்சத்திரம் அற்ற
வானத்தை பார்க்கும் போது
வெறுமை ஏற்படுகிறது
உன் முத்தத்தின்
எண்ணிக்கையை இழந்த
ஒரு நினைவால்....  91

உன் பிரிவின் வழி
காலம் ஒவ்வொன்றாக
சொல்லித் தருகிறது
ஏனோ
கண்ணீரையும் தருகிறது... 92

கண்ணீர் என்பது
கண்களில் சுரப்பது இல்லை
காணாமல் தவிக்கும்
இதயத்தில்....   93

வாழ்வின் மிகச்சிறந்த
நொடி எதுவென்றால்
உன் கண்களை மட்டுமே
பார்த்த
முதல் நொடி என்பேன்... 94

உன் குரலை
கேட்ட பின்பு தான்
நான் இந்த உலகத்தில்
உயிர் வாழ்கிறேன்
என்று நம்புகிறது
என் கனவுகளும், கவலைகளும்..  95

காதலை விட
காதலியை பிரிந்து
வாழ்வது தான்
கடினமாய் இருக்கிறது
கவிதையில் கூட...   96

விழி தேடும்
வழியெங்கும்
உன் விழியின் பாதம்
தேடுகிறது
என் கவிதைகள்!     97

வாழ்வில் அத்தனை
கவனமாய் இருந்த போதும்
காதல் சில தவறுகள்
செய்து விடுகிறது
உன்னை என்னிடமிருந்து
பிரித்துவிட்டதை போல...  98

நீ பேசும்
வார்த்தைகளை கவிதையாக்கி
அதை காதலும்-ஆக்கி
உன் விழிகளுக்கு
மட்டுமே விருந்து அளிப்பேன்.. 99

உன் விழியால்
என் புலமையை வளர்த்தேன்
அதில் கவிதையாய்
உன் இளமை
காதலை வளர்த்தேன்...  100

2016 கவிதைகள் 81 to 90

உன் பாதம் பார்த்து
என் கண்களின் வழியே
வணங்குகிறேன்
என் பாவம்
அதன் வழியே கரைவதற்கு!!  81

விதி நிராகரித்த போதும்
விழிகள்
உன்னை மட்டுமே
நினைப்பது
என் வாழ்வின் விதி....    82

தனிமையில் அமர்ந்த போது
வானத்தைப் பார்த்தேன்
உன்னோடு
நம் இரு உயிர்களும்
மிளிர்ந்து கொண்டு
கண் சிமிட்டுகிறது... 83

பாரம் மிகுந்த இரவில்
நான் பயணிக்க
விரும்பும் பாதை
மரணம் மட்டுமே!!    84

சில நேர தனிமைகள்
துக்கம் நிறைந்தவை தான்
உன் நினைவால்
நான் அதை
விரட்டிய போதும்...   85

காதல் ஏற்கப்பட்ட போது
காலம் மறுக்கப்படுகிறது
காலம் ஏற்றுக்கொள்ளப்பட்ட போது
காதலின் உணர்வுகள்
மறுக்கப்படுகிறது
காலமும் காதலும்
ஏற்றுக்கொள்ளப்பட்ட போது
வாழ்க்கை மாறியிருக்கிறது.. 86

உணர்வுகளை கடந்து
உயிர்கள் ஏனோ
உன்னை அடைய முற்படுகிறது
முடியாது என்ற தெரிந்த போது
உயிரோ உணர்வின் வழி
கண்ணீரை வெளிப்படுத்துகிறது....  87

ஒன்றுமே இல்லாத போதும்
வாழ்க்கை
இப்படியே நகர்கிறது
வெறுமையை சுமந்து கொண்டு.. 88

வேதனை களைவதற்கு
வேண்டும்
ஒரு தேவதை!!     89

அன்பு நம்பப்படுமானால்
காதல்
எத்தனை காலம் ஆனாலும்
இருந்துகொண்டு தான் இருக்கும்...  90

2016 கவிதைகள் 71 to 80

தேநீர் நிரம்பிய
கோப்பையை கொண்டு
தேவதை பற்றிய சிந்தனை
வளர்த்துக் கொள்கிறேன்
எல்லா இரவுகளிலும்...  71

பிரிவைப் பற்றி
யோசிக்கும் போது
கவிதை வந்தடைகிறது
கண்களில்
வெறும் கண்ணீராக...   72

உன்னை நினைக்கும் போது
என்னை அடைகிறாய்
சில மெளனத்தின் வழியே
கண்களின் ஒளியாய்...  73

எல்லா இரவுகளிலும்
எல்லையற்ற
உன் நினைவுகள் தான்
என்னை உறங்க வைக்கிறது
ஏதோவொரு
நல்ல கவிதை எழுதிய பின்பு..  74

பேசும் வார்த்தைகளை விட
பேசாத
உன் வார்த்தைகளின் ஒலியே
என்னை பேச வைக்கிறது
அதன் எதிரொலியாக... 75

என் உடலெங்கும்
உன் இதழின் வாசம்
என் இதழெங்கும்
தீராத
உன் இதயத்தின் நேசம்
அதனாலயே
இரவின் மீது
இனம் புரியாத
ஒரு பாசம்....    76

உன் ரகசிய
புன்னகை போதும்
வெளிப்படையாய்
நான்
உன்னை முத்தமிட...  77

தீராத
உன் வலியைப் பற்றிய
நிமிடங்களை
நினைத்துப் பார்க்கிறேன்
மூன்று நாட்களை கடந்தும்
எனக்கும் வலிக்கிறது..  78

உறக்கம் வராத
இரவுகளில் ஏனோ
உன்னை அதிகம்
அணைத்தப்படி
உறங்க முற்படுகிறேன்
விழி திறந்த
கனவுகளின் வழி!!      79

பாதைகள் இருந்தும்
நம் பாதங்கள் இணைந்தும்
உன்னோடு
நடக்க முடியவில்லையே
உன்னோடு கைகோர்த்து.. 80

எனது கனவு

சில நேர
கவிதைகளில்
காதல் இருப்பதில்லை
வெறும் கவலைகள்
மட்டுமே அர்த்தமாக
அமைத்திருக்கும்..

கவலை படர்ந்த
எனது வாழ்க்கையில்
கவிதையாக
அர்த்தமாக்க பட்டவள் நீ
என்னுள்
வார்த்தைகளாய் மாறி
என்னையும் மீறி
கவிதைகளில்
தவழ்ந்து,
நடந்து,
பின் ஓடி
எங்கோ போகும்
நதியின் நிழலும் நீ!

உன்னுள் மூழ்கி
உன்னுள் கலந்து
என் காதல் கவிதைகளை
கரைத்து
அதை உன்னோடு
சேர்க்கும்
இவ்வார்த்தைகளில்
வாழ்கிறது
எனது கனவு..

எனது கனவு
காலை உன் முகம்
நண்பகல் உன் காதல்
மாலை உன் மடி
முன் இரவில் உன் அன்பு
பின் இரவில் உன் அணைப்பு
பின் எப்போதும்
உன் நினைப்பு
அது மட்டுமே
அது மட்டுமே
என் வாழ்க்கை...

என் வாழ்க்கை முடியும்
தருணத்தில் கூட
உன் முத்தத்தின்
தொடக்கம்
என்னில் தொடர வேண்டும்
உந்தன்
மூச்சுக் காற்றின்
வழியே
இந்த உலகில்
என் காதலின் ஜனனம்
மீண்டும் வேண்டும்..

-SunMuga-
16-07-2016 11.40 PM

July 7, 2016

இரவின் பசி

இந்த
இரவின் பசியில்
உன் உடலே
எனது உணவு
உன்னை
என்னை மறந்து
உண்ணும் போது
உண்மையில்
எனது உணர்வுகள்
உயிர்த்தெழும்பிய போதும்
உனக்கொர்
பாவம் செய்ததாய்
எண்ணிக் கொள்ளும்
எனது குறி.....

-SunMuga-
05-04-2016 20:40

தாழ்ப்பாள்

இரு கதவுகள்
கொண்ட
நம் வீட்டில்
ஒரு கதவு "காதல்"
இன்னொரு கதவு "காமம்"

காமம் நானாக
இருக்கும் போது
காதலின் கதவாய்
நீயே என்னை உரசுகிறாய்
கனவின் வழியாக,
கனவின்
கண்களின் வழியே
நானும் போடுகிறேன்
"முத்தம்" என்ற "தாழ்ப்பாள்"

-SunMuga-
07-07-2016 12:05 AM

பிம்பம்

கடந்து போன
அன்பு என்ற போதும்
உன் நினைவின்
பிம்பங்களை
பல கூறுகளாய்
உடைத்தெடுத்து
அதிலொரு கூறு எடுத்து
கண்களால் அதை
இன்னும் கூர்மையாக்கி
எனது கனவின்
குறியை அறுத்தேன்
அதில் வடியும்
ரத்தம் ஜெபம்... 

-SunMuga-
06-07-2016 11:11 PM

காத்திருப்பு

விடியும் வரையிலும்
காத்திருந்தேன்
கவலைகளை கரைத்துக்
கொள்ள
கனவில்
கனவாய்
நீ வருவாய் என்று
கனவாய்
நீ இந்த இரவில்
கரைந்தது அறியாமல்...

-SunMuga-
06-07-2016 11:15 PM

இரவின் கடவுள்

என் உடலின்
பசியை தீர்க்க
கடவுளால்
அனுப்பப்பட்டவளின் முன்னே
உள்ளாடைகள் அற்று
நிர்வாணமாய்
கிடந்த போதும்
என்
உள் உள்ளத்தின்
ஆடைகளை
நிர்வாணமாக்க
ஒரு போதும்
விடுவதில்லை
இரவின் கடவுள்....

-SunMuga-
06-07-2016 11:00 PM

கவிதை

மழையின் சப்தம்
செவியேறும் போது
உன்னைப் பற்றிய
சொற்களும்
கவிதையாய்
என்னுள் ஏறுகிறது
அவசரமாய்
வீடு திரும்பும்
எறும்பின் வரிசைகளை
போல!!

-SunMuga-
06-07-2016 10:50 PM

வண்ணத்துப்பூச்சி

மழையின் இசையில்
விரியும்
சிறகுகளென
அன்பின்
வண்ணம் தீட்டி
அதில்
காதலின் கனவுகளை கூட்டி
என்னையே
சுற்றி வருகிறது
இந்த
வண்ணத்துப்பூச்சி...

-SunMuga-
06-07-2016 10:45 PM

உள்ளம்

உறவுகள் உறங்கும்
இரவில்
உள்ளமும்
உன் விழிகளும்
என்னை
விழிக்கச் செய்கிறது
விடை தெரியாத
வாழ்க்கையை நினைத்து..

விடுமுறை இல்லாத
உன் நினைவும்
விழிகளில் ஏனோ
வழியச் செய்கிறது
ஏதோவொரு
கண்ணீர் துளியை. .

அழுகை

மெளனம் நிறைந்த
இரவில்
நான் மெளனமாக
அழுது கொண்டு இருக்கிறேன்
எனது அழுகையின் ஒலி
என்னைத் தவிர
வேறு யாருக்கும்
கேட்காதபடி,

ஏன் என்றால்
எனது உலகம்
உன்னால் உருவாக்கப்பட்ட
ஒன்று
உன்னைத் தவிர
நானும்
எனது கனவுகளும்
எனது கவிதைகளுமே
வாழும் உலகம்..

உறங்க மறுத்த விழிகள்
உலகை வெறுக்க
வேண்டிய ஒரு அவசியமும்
இல்லாத போது
விழி இனி
உன்னோடு
விழித்த நிலையிலே
கனவு காணட்டும்,

இறப்பு

இறப்பு என்பது
நிரந்தரம் என்ற போது
இருப்பின் நிலையை
கடந்து
இயல்பாக இருக்க
முற்படுகிறது
எனது இளமைக் காலம்,

இறப்பு என்பது
நிரந்தரம் என்ற போது
இருப்பின் நிலையை
கடந்து
நான் இவ்வுலகில்
இல்லாமல் இருக்க
முற்படுகிறது
எனது முதுமைக் காலம்,

இறப்பு என்பது
இயல்பானது என்ற போதும்
அது
இல்லாமல் இருக்க
எப்பொழுதும்
முற்படுகிறது
எனது குழந்தையின் எதிர்காலம்.....
-SunMuga-
15-04-2016 21:36 PM