May 29, 2015

2015 கவிதைகள் 851 to 860

நான் கட்டிய பூவில்
என் காதல் வைத்தேன்
நீ பூட்டிய வெட்கத்தை
உடைக்கும் படியான
வாசத்தை சேர்த்தேன்..   851

இரவின் வாசம்
கூட்டிய பூக்கள் எல்லாம்
பகலின் நேசம் கூட்டுகிறது.. 852

இவ்விரவை
உன்னோடு நடந்து
நான் கழிக்க வேண்டும்...  853

கனவில் உன்னை
நினைக்கும் போதே
இத்தனை கிறக்கம்
என்றால் நினைவில்??   854

நீ செல்லும் இடமெல்லாம்
என் முத்தத்தை
நட்டு வைப்பேன்
அது
உன் முகத்தில்
புன்னகையாக மலர.... 855

உன் காதல் அருவியில்
ஒரு சிறு துளி தான்
என் முத்தமும்
நான் மொத்தமும்...   856

இரவு தீரும் வரை
மெளனமாய்
உன்னோடு பேசிக் கொண்டு
இருக்கிறேன்
மெளனத்தில் தான்
எத்தனை வார்த்தைகளை
உதிர்க்கிறது உன் கண்கள்..  857

மரணம் வேண்டும்
உன்னை மனனம்
செய்யும் ஆற்றல்
என்னிலே குறையும் போது.. 858

சூரியனே
வா!
பனித்துளியாய்
நான் உன்னில் கரைய!!   859

காகிதத்தில்
நான் நிரப்பிய
என் காதலெல்லாம்
என்னை காலமெல்லாம்
நினைக்க வைக்கும்
உன்னை வரும் காலமெல்லாம்
காண நினைக்கும்...   860

2015 கவிதைகள் 841 to 850

இருளின் இன்பம்
அறிந்து இணைவோம்
நாம் இணைந்து
இரவை இன்பமாக்குவோம்... 841

இன்னும் ஓர்
இருள் சூழ
உன் கண்களை மூடிக் கொள்
இருளாக நானே
சூழ்வேன் உன்னையே...  842

இணையும் இதழில்
இதம் சேரும்
இன்னும் இன்னும்
இதம் தர இருளும்
ஒன்று சேரும்.....      843

நீ உடுத்திய புடவையில்
பூவாக நானே
இருப்பேன் உன் உடலின்
வாசனையை உனக்கு
கூட்டி....         844

நீ தரும் சுகம் தான்
என் அந்நாள்
சுமையை குறைக்கிறது... 845

தீரும் இரவில்
தீராத உன் முத்தம்
மீண்டும் மீண்டும்
தீண்ட வைக்கிறது
இன்னொரு இரவை...   846

உன் காதல் உலகத்தில் 
நான் எட்டிப் பார்த்தால் 
என் முகம் மட்டுமே தெரிகிறது..  847

காலம் தரும் கவலையில் 
காதல் மட்டுமல்ல 
நம் காதல் மட்டுமே 
கலந்து இருக்கிறது..    848

எதிர்பார்த்த படி
என்னில் நீ முத்தம் பதித்தாய் 
பாதி உறக்கத்தின் நடுவே 
உன் கண்ணை நான்
ரசித்த பின்பு....   849

உன் முத்தம் 
ஒன்றே போதும் 
இருள் மட்டுமே ரசிக்கும் 
நிலவை நானும் ரசிக்க...  850

May 27, 2015

2015 கவிதைகள் 831 to 840

உன்னோடு
நான் ரசிக்கும் மழை
அந்தி நேர
உன் முத்த மழை....         831

வெட்கத்தில்
நீ ஓடினால்
பக்கத்தில் நீ வரும் படியான
ஒரு பறக்கும் முத்தத்தை
நீ ஓடிய பாதை வழியே
நானும் பறக்க விடுவேன்...   832

உன்னைக் கான
வரும் வழிகளில் எல்லாம்
பல வாகனங்கள்
என்னையும் கடக்கிறது
நானும் கடக்கிறேன்
ஆனால்
நம்மைப் பற்றிய பிரிவு
மட்டும் மனதில்
இருந்து கடப்பதில்லை...   833

என் விழி கொண்டு
நான் வரையும்
ஒவியத்திற்க்கு
உன் இதழின் வண்ணம்
எப்போதும் மின்னுகிறது..  834

உன் உடலின் ஆழத்தில்
என் காமம் புதைத்து
நம் காதல் முளைக்கிறது...  835

விழி தரும் புன்னகையில்
விடிந்தாலும் தீராத
காதல்
விடிந்த பின்னும் தீராத
காமம்
நம்முள்ளே வாங்கி
குவிக்கிறது முத்தமும்
புன்னகையும்.....      836

உறங்கும் போது
என்றும்
நீ உடுத்தும் புடவை
நானாகவே இருக்க வேண்டும்.. 837

உன்னோடு இருப்பது
ஒரு சுகம்
உன்னோடு மட்டும்
நாட்களை கடப்பதும்
ஒரு சுகம்
உன்னோடு மட்டும்
இந்த இரவை
பருகுவது
சுகத்திலும் இதம்....     838

இவ்விரவு தேய
இவ்விதழுக்கு
உன் இதழ் தேவை.....   839

நான் எப்போதும்
நானாக இருப்பதில்லை
நீ என்னோடு
இருக்கும் போதும்
உன் நினைவு என்னோடு
பேசும் போதும்.....     840

May 23, 2015

2015 கவிதைகள் 821 to 830

உன்னைப் பற்றியும்
உன் நினைவைப் பற்றியும்
ஆராயும்போது
என்னுள் எப்பொழுதும்
ஆட்கொள்கிறது
உன் ஆழமான அன்பின்
முத்தங்கள்...             821

இனி நீ தரும்
முத்தங்கள் தான்
என் வாழ்வில்
நான் வாழ்வதற்கான
சந்தர்பங்களை தருகிறது... 822

நம்
இருவரால்
ஒத்துக்கொண்ட காதலை ஏன்
காலம் ஒருபோதும்
ஒத்துக்கொள்வதில்லை....  823

நீ என் முத்தங்களை
ஏற்றுக்கொள்
அதன் வழியே
நம் காதலின் ஏங்கங்களை
தீர்த்துக் கொள்...     824

உன் அழகில்
ஒவ்வொரு நாளும்
கூட்டி விடுகிறாய்
முத்தத்தின் அலகை...  825

உன் முத்தம் என்ற
கவிதைக்காக
காத்திருக்கிறது
காகிதமாய் என்
இதழ்கள்....       826

உன் கை விரல் என்ன
காந்தள் மலரோ
என் கன்னங்களை
பற்றிக் கொள்ளும் போது...   827

அல்லி மலர் போல
இரவில் மலர்ந்து
காலையில் என்னுள்
குவியும் காதல் நீ!!        828

ஒற்றை இதழை கொண்ட
குவளை மலர் நீ!!          829

உன் புன்னகை
ஒரு மலர் என்றால்
உன் இடை தேன் சுரக்கும்
ஓர் மலர்க்குழு...       830

May 22, 2015

கண்ணீர்

சுரக்காத
என் கண்ணீரைக் கொண்டு
நான் எப்படி
என் காதலோடு
உன் காலடியும்
கழுவ முடியும்....

-SunMuga-
22-05-2015 07.43 AM

May 20, 2015

2015 கவிதைகள் 811 to 820

உன்னைப் பார்க்க
எனக்கு இத்தனை
யோசனையா?
இல்லை
உறவுகளை கடந்து
உன்னைப் பார்க்கவே
இத்தனை யோசனை
எனக்கு!!                 811

தேவைப்படும் நேரத்தில்
அல்லது
குறித்த நேரத்தில்
நான் எப்போதும்
உனக்கு தேவையாக
இருப்பதில்லை....    812

பிரபஞ்ச இசைகளை
நான் கேட்கும் போது
அதன் பிரதிபலிப்பாக
உன் சிரிப்புகளும்
உன் அழுகைகளுமே
எனக்கு இசைக்கிறது..    813

உன் அழுகைக்கு பின்
ஆறுதலாக கூட
என் கரங்களை பற்றிக்
கொள்ள
காலம் அனுமதிப்பதில்லை.. 814

உன்னைப் பற்றி
சிந்திக்கும் போது
நம் மறு சந்திப்பின்
இடங்களும்
நிகழ்வுகளும்
அப்படியே தெரிகிறது
ஆனால் அது எதுவுமே
நடப்பதில்லை என்பதே
உண்மை....                815

என்னுள் நீ
அழும் போதும்
சிரிக்கும் போதும்
ஏதோவொரு கவிதை
வந்துவிடுகிறது
அழுகையின் வழியோ!
சிரிப்பின் வழியோ!!        816

முன் இரவில்
உன்னால் கடத்தப்பட்ட
என் காதல் வார்த்தைகள்
இப்பொழுது
உன்னிலிருந்து
மெளனமாக உதிர்கிறது
நம் கண்களின் சந்திப்பில்..  817

பல மனிதர்களை
கடந்து வந்த பிறகும்
பலமாய்
உன் ஞாபகம்
என்னோடு நடந்து வருகிறது
என் சின்ன சின்ன
துன்பங்களை
தூக்கி எறிந்த படி..    818

ஒரு நிமிடம்
உன் கண்களைப் பார்த்து
மறுநிமிடம்
உன் கரத்தை தீண்டி
நானும் உன்னோடே
இவ்வுலகை சுற்றி வர வேண்டும்...      819

தீபம் ஏற்றி
என் கண்ணில்
படரும் வெளிச்சம் நீ!!   820

May 19, 2015

அன்புள்ள அப்பாவுக்கு

அன்புள்ள அப்பாவுக்கு, பிறந்த நாள் முதல் இந்நாள் வரை நீங்கள் ஆனந்தமாய் இருக்க தான் உங்களின் பெற்றோர் உங்களுக்கு இந்த பெயரை வைத்தனரோ? அப்படிப் பார்த்தால் உங்களை விட அவர்களே கால எண்ணிக்கைகளை கணித்து சொல்லுவதில் வல்லவர்கள் போலவே!

கறுமை கலந்த கருணை மிகுந்த முகம். வீட்டிற்கு வந்தாரை வரவேற்கும் புன்னகை முகம். எப்போதும் எளிமை கலந்த உடை. எப்போதும் எளிமையாகவே விசாரிக்கும் குரல். சாந்தமாய் சைக்கிளில் ஒரு வலம். இன்னும் இன்னும் எத்தனையோ..

இன்றுடன் உங்களை பார்த்து எத்தனை நாட்கள் ஆகிவிட்டது என்பது எனக்கு தெரியாத ஒன்று. ஆனால் இன்று முழுவதும் உங்கள் புன்னகை கலந்த முகம் மட்டுமே என் முகத்தில் அப்பிக் கொண்டுள்ளது.

மனம் முழுதும் ஒரு பதற்றத்தில் இருக்கிறது இருந்தும் என்னிடம் ஒரு துளி கண்ணீர் கூட இல்லை உங்களுக்கு கொடுப்பதற்கு. என்னை மன்னித்து விடுங்கள். இந்த மன்னிப்பு எல்லாவற்றைக்கும் சேர்த்து தான். மீண்டும் என்னை மன்னித்து விடுங்கள்...

May 18, 2015

2015 கவிதைகள் 801 to 810

உன் கை விரலுக்குள்ளும்
இத்தனை காதலா?
என்னை விடாமல்
பிடிக்கும் போது கூட.... 801

உன்னிலிருந்து
என் பார்வைகள்
இடம் மாறும்
போதெல்லாம்
உன் இதழ்கள்
என் கண்களை தான்
பார்க்கிறது....    802

காமம் நிறைந்த
இரவுக் கோப்பையை
பருகி பருகி
காதலாய் மாற்றி
உன்னில் தழுவ விடுகிறேன்
என் இதழின் வழி....  803

அந்நிகழ்வு
நிகழும் போது
வேண்டிக் கொள்கிறேன்
காதல் கடவுளிடம்
அந்நிகழ்வில்
துளி அளவும்
காமம் கலந்து விட கூடாதென்று..  804

இவ்விருட்டில்
என் இதயத்தின் ஓசை
தனியாய் கேட்கிறது
உன் காதலையும்
உன் ப்ரியத்தையும்
இழந்து நான் தவிக்கும் போது.. 805

காத்திருக்கிறேன்
அன்பே!!
கவிதைக்காக அல்ல
உன் காதலுக்காகவும்
உன் காதல் முத்ததிற்காகவும்... 806

மெளனத்தோடு
நீ சிரித்தால்
இந்நேரம்
நானும் சிரித்துக் கொள்வேன்
மெளனத்தோடே!
நம்
முன் நேர மெளனங்களை
நினைத்து....   807

அடுத்த கவிதை
என்ன எழுதுவது என்று
உன் இதயத்திடமே
கேட்டுக் கொண்டு இருக்கிறேன்
இறுக்கமாக
என் கண்களை மூடிய படி..  808

காய வைத்த
வெந்நீர் தீரும் அளவிற்கு
உன்னை வேர்வையிலே
குளிக்க வைப்பேன்....   809

அப்பொழுது
இரவு முழுவதும்
உன்னை நினைத்தேன்
இப்பொழுது
இரவாகவே
உன்னை நினைக்கிறேன்...  810

2015 கவிதைகள் 791 to 800

புடவை
உனக்கு ஓர் அழகு தான்!
அழகான புடவையும் அழகு
என் கையில்
நீ புடவையில்
தவழும் போது....     791

உன் புன்னகையில்
உதிர்கிறது
உன் புடவையின்
பூக்கள் என் கைகளில்... 792

எப்படியேனும்
நானும் சூடிவிடுவேன்
உன் கூந்தலில்
என் காதல் பூவை
இந்த இரவுக்குள்..       793

இடைவிடாது
பெய்யும் மழையில்
நானும் கொஞ்சம்
வெட்கப்படுவேன்
குளிரில் உன்னோடு
நான் நடுங்கும் போது...   794

உன்
நடையின் போது
உன் இடையை தேடுகிறது
என் இதழ்
நம் வீட்டினில்....    795

பூட்டிய வீட்டை
திறந்தவுடன்
விடை கொடு
பூட்டிய உன் வெட்கத்திற்கு.. 796

புத்தகம்
நான் படித்தால்
நீ
என் இதழை படிக்கிறாய்...  797

அர்த்தம் தான் என்ன?
என்று ஏதோவொரு
வார்த்தையின்
அர்த்தம் தேடி
என்னையே உன்னுள்
அடக்கி விடுகிறாய்
அர்த்தத்தின் விடையாய்...  798

அதிகாலை வரை
நானும் தொடர்வேன்
உன்னோடு ஒர்
பயணத்தை
உன்னையும்
உன் இதழையும்
தொட்டுக்கொண்டு....   799

ஏன்
என்னை தொடுகிறாய்
என்று
என்னைத் தொட்டு
நீ கேட்கும் போது தான்
தெரிகிறது உன்
தொடுதலில்
இத்தனை ஸ்பரிசம்
இருக்கும் என்று...   800

2015 கவிதைகள் 771 to 780

என் இதழால்
உன் மேனியை பற்றி
உன் மேனியில்
ஒரு கவிதை
எழுத ஆசை....    771

உன் மெல்லிடையில்
ஒரு காதல் பூவை
மெல்ல மெல்ல
மலர விட வேண்டும்
என் இதழின் வழியே!!!   772

முத்தம் மட்டுமே
வேண்டும்
மல்லிகை பூ
பூக்கும் அந்த இடத்தில்...   773

என் மெல்லிய
விரல் கொண்டு
உன் மெல்லிய
பாதத்தில்
ஒரு மெல்லிசை
மீட்டெடுப்பேன்
முத்தமாக....    774

உன்னோடு
உறங்கும் போது
ஒரு போதும்
விழிக்க மாட்டேன்
அப்படியே
விழித்தாலும்
உன்னை உறங்கவும்
விட மாட்டேன்....   775

எப்போதும்
நேசித்தேன் பெண்ணே!
என் உடலின் வாசத்தை
உன் உடலோடு கலந்த பிறகு.. 776

உன்னுடனான
புரிதலில்
நிகழ்கிறது காதல்
காதலில் ஏது பிரிதல்?    777

ப்ரியம் அதிகரிக்கும்
இரவில்
இரவும் அதிகரிக்கும்
தனிமையின் சுமையை!!   778

தீண்ட மறந்த
இரவில்
என்னை தீண்டும்
தீக்கள்
கண்ணீராக!!      779

உன் இதழ் கூறும்
ரகசியங்களை
ரசிக்கத் தான்
செய்கிறது என் இதழ்!!  780

2015 கவிதைகள் 761 to 770

உளரல் மிகுந்த
என் கவிதைகள்
எல்லாம்
உள்ளம் நிறைந்த
காதல் கவிதையாக
மாற்றுகிறது
உன் கண்கள்....     761

தென்றலின்
தீண்டலில்
நான் உன்னை தேடும் போது
தென்றலாகவே
நீ
என் இதழில் முத்தமிடுகிறாய்... 762

தேன் ஒழுகும்
நிலவின் கீழ்
நான் தேடும்
தேகமோ? நீ
இல்லை
தேவதை நீ!!    763

என் வீட்டு
ஜன்னலின் வழியே
என் காதலை
அனுப்புகிறேன்
பல வீதிகளை கடந்து
அவை
உன் இதயத்தில் முத்தமிட....  764

நீ இல்லாத போது
உன் வீட்டை
நான் கடக்கும் நொடிகளில்
உன் வீட்டின்
படிகளில் அமர்ந்து செல்கிறது
என் கண்கள்
உன் பாத ரேகையை
பார்த்த படி!!!!      765

ஒரு போதும்
திரும்பி விட தோன்றியது
இல்லை
உன்னை விட்டும்
உன் பார்வைகளை விட்டும்... 766

என் முகம்
தேடும்
உன் மார்புக் குழியில்
நானும் எழுதிவிடவா ?
ஒரு காதல் கவிதை..   767

என்றேனும்
உன் முகத்தோடு
என் முகத்தை
ஒட்டி பார்த்து விட வேண்டும்... 768

உன் இடை
கிள்ளி
உன்னையே அள்ளி
அனைத்திட
ஒரு சமையல் அறை
வேண்டும்...    769

உன் நாடியின்
நரம்பின் வழி
உன் மார்பில்
நான்
மெல்ல மெல்ல
புதைய வேண்டும்....  770

May 17, 2015

2015 கவிதைகள் 751 to 760

ஒற்றை
இரவு போதும்
வானின் நிலவையும்
இருளின் நட்சத்திரத்தையும்
நாம் இருவரும்
சேர்ந்து ரசிக்க.....      751

எல்லைகள் அற்ற
இந்த காதல் உலகத்தில்
நீயும்
நானுமாய்
சேர்ந்து வசித்துக் கொள்ள
ஒரு வீடும்
ஒரு காலமும்
இல்லையென்பதே
உண்மை!!      752

சங்கீத குரலில்
என்னை நீ
நெருங்கும் போது
என் சகல
சங்கதிகளையும்
வெளியேற்றி விடுகிறாய்!   753

மகிழ்வாய்
நான் துயில
என் குயிலின் ஓசை
ஒலிக்க வேண்டும்
அதிகாலையிலும்....       754

மனம் அனுமதித்தால்
காலம் சம்மதிப்பதில்லை
காலம் சம்மதித்தால்
மனம் அனுமதிப்பதில்லை...  755

அலங்கரித்து
நான் நின்றால் கூட
அமைதி காக்கிறாய்
எத்தகைய பொறுமை உனக்கு?
போதும்
உன் பொறுமையோடு
களைத்து விடு
என் அலங்காரத்தையும்...  756

எத்தனை ஆண்டுகள்
ஆனாலும் இன்னும்
நீ இளமையாகவே
இருக்கப் போகிறாய்
என் கவிதையின் வழி....   757

சில நேரம்
மெளனத்தாலே
என்னை
நீ உடைத்து விடுகிறாய்...   758

கொடிய இருளும்
அகன்ற அகல் விளக்கும்
வழுகும் எண்ணையும் அற்ற
தீபம்- உன் கண்கள்....     759

காலத்தை
வீணடிப்பதில்
எந்தவொரு பொருளும் இல்லை
இருந்தும் வீணடிக்கிறோம்
காலத்தோடு காதலையும்...  760

2015 கவிதைகள் 741 to 750

உன் கண்களோடு
உன் காதலும்
இல்லாமல்
என்னால் ஒரு கவிதை
கூட எழுதி விட முடியாது...  741

என்னோடு
எல்லாம் தெரியும்
மனிதர்கள் இருக்கலாம்
எனக்கு
உன்னை மட்டுமே
தெரியும் எல்லாவுமாக!  742

எதிர் பாரா
கணங்களில்
வழியும் கண்ணீரின்
சோகம் உன் பிரிவு...      743

தனி அறை
தேடி அலையும்
என் கண்கள்
உன்னை நினைத்து
ஒரு நிமிடமேனும்
அழுது கொள்ள....      744

காலம்
நித்தம் சொல்ல மறுக்கிறது
நம் காதலின்
ரகசியத்தை நம்மிடமே!!   745

சொல்ல வேண்டிய
வார்த்தைகள்
சொல்லாமல் போனதால்
நம்மிடம்
சொல்லாமலே போகிறது
காதல் காலம்...       746

வெளி சூழும்
இருள்கள் எல்லாம்
இன்னும் இன்னும்
ஒளியைக் கூட்டிக் கொண்டு
இருக்கிறது என் கவிதைகளுக்கு.....   747

நிகழ்ந்து விட்ட
நிகழ்வுகள் எல்லாம்
நின்று பேசுகிறது
என் கண்களில் ....     748

உன்னை அன்பை
நினைத்து
அனைத்துக் கொள்ள
தோன்றும் போதெல்லாம்
அழுது விடுகிறேன்
ஏன்
அழுகையின் வழியே
உன்னை
அனைத்துக் கொள்வதற்காக தான்....     749

என் மெளனத்தின் வழியே
உன் நினைவுகளின்
ஓசை
எனக்கு மட்டுமே கேட்கிறது.... 750

2015 கவிதைகள் 731 to 740

கவிதை
வார்த்தைகளின் இடையே
உன் கை விரல் பிடித்து
அலையவே
நானும்
வெறி பிடித்து அலைகிறேன்
கவிதையின் வார்த்தைகளை தேடி...            731

சுற்றித்திரியும்
இந்த இரவுக்
காற்றின் வழியே
சுதந்திரமாய்
நானும் அடைவேன்
உன் காலடியை
உன் அறையின் வழி....    732

சலனம்
நிரம்பிய சங்கதியை
சொல்லுகிறது
என் அந்தி நேர கண்கள்..   733

பெளர்ணமி
நிலவை பார்த்து
உன் கண்களோடு
என் கண்கள்
பேசிக் கொண்டு இருக்கிறது
கண்ணீரின் வழியே!!       734

மஞ்சனையும்
மாரியின் முகமாக
மாறியது
நெஞ்சம் முழுதும்
நம் காதலின்
முகம் கூடியது.....        735

ஊர் கூடி
கொண்டாடும் திருவிழாவில்
நான் உன் நினைவால்
உன்னையே தேடிக்
கொண்டு இருக்கிறேன்...   736

தொட்டு வணங்கிய
கடவுளிடம்
கண்ணீர் விட்டு
கேட்க முடியவில்லை
கண்ணீரும் தீர்ந்து விட்டதோ?  737

உன்னை
நான் நினைக்கும் போது
என்னை
நீ உன் நினைவால்
அனைத்துக் கொள்கிறாய்...    738

விக்கல் வரும் போது
யார் என்று கேட்கும்
உன் அம்மாவிற்கு
என்னை நினைத்து
உன் சிரிப்பிலே
பதில் சொல்லிவிடுவாயோ!!   739

சாத்தியங்கள்
இல்லாத போதும்
என் கண்கள்
உன் கண்களை
சந்திக்கிறது
ஒவ்வொரு கவிதையின் வழியே!!     740

2015 கவிதைகள் 721 to 730

என்னுள் நிறையும்
கண்ணீரை
வெந்நீராய் காய்ச்சி
உன் இதயத்தின்
வலிகளுக்கு
ஒத்தனம் கொடுக்க வேண்டும்... 721

உணர்வால்
உடைந்த காதல்
காதலின் உணர்வால்
என் உயிரே!
என் உயிர்
உன்னைத் தேடுகிறது...   722

உலகத்தின்
மெளன ஓசைகள்
அனைத்தும்
என் முன்னும்
என் இதயத்தின் முன்னும்
கேட்கிறது
உன் முத்தத்தின் வழியே!!    723

என் மனம்
ஒன்றை மட்டுமே விரும்புகிறது
உன்னோடு
தனி அறையில் அமரும் போது
அது மெளனம் மட்டுமே!!   724

காசு கொடுத்து
கருப்பட்டியை
நானும் வாங்கி வந்தேன்
உன் கடிகாரத்தின்
நேரங் கா(கூ)ட்டி
என்னை அழைத்தாய்
கருப்பட்டியின்
வாசம் தீர்ந்த போதும்
சமையலறைப் பெட்டியில்
நானும் பத்திரப் படுத்தினேன்
கருப்பட்டியை....        725

சட்டென்று
வேகம் பிடித்து
எரியும்
தீக்கதிர் போல
என்னுள்ளும் எரிகிறது
உன் காதல் தீ....        726

உன்னோடு
உறங்கிக் கழிக்க
வேண்டிய நாட்களையெல்லாம்
நினைத்து
இப்போது உறங்காமல்
கிடக்கிறேன் என் உயிரே!!  727

சிலுவைகளை
தாங்கி பிடிக்கும்
கட்டிடம் போல
உன் சில்மிஷ
காதல் வரிகளை
ஏந்தி பிடிக்கிறது
இக் காகிதம்...            728

சின்ன சின்ன
அலைகளின் ஊடே
பயணிக்கிறது
உன் காதல்
என் கண்களின் வழியே!!  729

இசைகளை
இசைக்கவிட்ட படியே
உன் காதலின்
திசைகளில் நடக்க
ஆரம்பிக்கிறேன்
உன் நடையின் சாயலை
தனித்துவமாய்
நானும் ரசித்தப் படி...      730

2015 கவிதைகள் 711 to 720

இவ்வுலகில்
வாழ நேரும்
கணங்களில்
நான்
வாழ்ந்து கொள்ள
தேர்வு செய்யும் இடம்
உன்
கன்னங்குழிகள் மட்டும் தான்.. 711

காரணமற்ற
பார்வையுடன்
நீ பார்க்கும் போது கூட
காரணங்களை
நானே உருவாக்கி கொள்கிறேன்
நானே
உன்னை பார்ப்பதற்கு...   712

எதை
நான் எழுதினாலும்
அதை
உன் கண்கள் பார்த்து
உன் நெஞ்சம் வாசிக்க வேண்டும்...     713

உருகிய
வானை நோக்கி
வேண்டிக் கொள்கிறேன்
உன் இடை சாயும் படியான
ஒரு மழை வேண்டுமென..  714

இந்த
பைத்தியக்காரனின்
குரல்களையும்
எண்ணிக்கையற்ற
எண்ணங்களையும்
சரி செய்கிறாய்
நீ
எழுதிய கவிதையை
வாசிக்கும் போது....     715

கவிதையைப் பற்றிய
புத்தகமே
"உன் கவிதை"
எனக்கு....              716

மெல்லிய காற்றின்
தீண்டலில்
விரியும் பூக்கள் போல
உன்
மெல்லிய கண்களின்
தீண்டலில்
விரிகிறது என் கவிதைகள்..  717

மெல்லிய அலைகளில்
ஆடும் படகைப் போல
நான் உன் அழகில்...     718

பரந்து விரிந்த
அந்த வானையே
உன் கண்களில்
நீ வைத்திருக்கிறாய்
வெயிலோ,
மழையோ,
குளிர் இரவோ,
குட்டி குட்டி நட்சத்திரமோ!
எப்போது
எது எனக்கு தேவையோ
அதையே
நீ அளிக்கிறாய்...           719

கவிதையின் வழியே
என் உயிரை திரித்து
உன்னுள்ளே
வாழும் படியான
ஒரு கவிதை
எப்போது நான் எழுதுவேன்!!  720

May 12, 2015

மின்னும் நட்சத்திரம்

அந்தி இரவில்
என்
அறையின் இருட்டில்
அமர்ந்து

உன் நினைவுகளையெல்லாம்
ஒவ்வொன்றாக
ஜன்னலின் வழியே
தூக்கி எறிகிறேன்

அவை
ஒவ்வொன்றாக
வான் ஏறி
மின்னுகிறது
யாரும் பார்க்காத போதும்..

-SunMuga-
11-05-2015 21.30 PM

எப்போதும் எழுதுவதிலிருந்து

எப்போதும்
எழுதுவதிலிருந்து
கொஞ்சம் மாறுபட்டு
எழுத வேண்டும்
என்று தோன்றுகிறது

என்ன?
எழுதுவது

ஜன்னல் வழி
தெரியும் நிலவை பற்றி

வேண்டாம்

நிலவின் வழி
எரியும் வெளிச்சம் பற்றி

வேண்டாம்

வெளிச்சத்தின் வழி
கரையும்
உன் முகம் பற்றி

நிச்சயம் வேண்டாம்

நீயே
அழுது விடுவாய்
நம் பிரிவை நினைத்து...

-SunMuga-
10-05-2015 23.00PM

May 7, 2015

மிகச் சிறிய

உன்
மிகச்சிறிய நினைவுகள்
ஏன்?
எனக்கு
மிகப்பெரிய அழுகையை
தந்துவிடுகிறது!!!

May 3, 2015

மெளனம்

ஒரு சிலரின்
மெளனமே பேசுகிறது
மரணத்திற்கு பின்

இப்போது
நானும்
மெளனமாகவே இருக்கிறேன்

என்
மரணம் மட்டுமே
என்னிடம் பேசுவதால்...