January 4, 2015

2015 கவிதைகள் 41 to 50

கடற்கரையில் ஆங்காங்கே
ஓடும் குதிரைகளை போல
உன் நினைவுகள்
என் உடலில் எங்கெங்கோ
ஓடி இளைப்பாறுகிறது..          41

உன் சின்ன சின்ன
ஞாபங்களை சேகரித்து 
கொள்கிறேன் - எப்போதவது 
அழுவதற்கும் எப்போதும் 
சிரிப்பதற்கும்..                           42

விரல் நழுவி போகவில்லை
உன் காதல்
விரல் தழுவி தான் போகிறது
ஒவ்வொரு இரவிலும்..            43

சுழலும் ராட்டினமாய்
உன் ஞாபகம் இந்த
சூரியனையும் சுற்றி வருகிறது 44

அறையில் 
யாரும் இல்லை என்பதை
உணர்ந்த குழந்தை தன்
அழுகையை கூட்டுவதை போல,
யாரும் இல்லா என் அறையில் 
உன் நினைவுகளை கூட்டி
வைத்துக் கொள்கிறேன் 
ரகசியமாய் அழுத படி...                  45

மிக நீண்ட உன் சிறகுகளால் 
நீ மூடிக் கொள்கிறாய் 
உன் உடல்களை
சிறகுகளின் வண்ணமாய் நான்.  46

தேகம் அழியக் கூடியது 
இருந்தாலும் தேவைப்படுகிறது 
அது நீ என உணர
இரவின் கனவுகளில்..                     47

சிறு எறும்பை போல
சிறுக சிறுக சேகரித்த 
உன் காதலை சிறு சிறு 
புன்னகையாக உனக்கே 
தர வேண்டும்..                             48

உன் 6 மச்சங்களின்
ஞாபகத்தின் மிச்சமாய் 
நானும் சிரித்துக் கொள்கிறேன் 
சென்னையில்
6D பேருந்து என்னை கடக்கும் 
போதெல்லாம்..                    49

உன் காலடியோசை கேட்கும்
போதெல்லாம் சிறு நண்டு 
போல என் முகம் தூக்கி
பார்க்கிறேன் கனவுகளில் கூட..        50

No comments:

Post a Comment