November 30, 2015

2015 கவிதைகள் 1501 to 1510

சிந்திக்கும் திறன்
இருந்திருந்தால்
சிந்தாமல் இருந்திருக்கலாம்
சிந்திய கண்ணீரெல்லாம்...  1501

பசி கொண்ட
இரவெல்லாம்
விழித்திருந்தேன்
விழித்திருந்த இரவையெல்லாம்
கவிதையாக்கி
உன் விழிக்கு
விருந்தாக்கினேன்....     1502

இதயம் நிரம்ப நிரம்ப
இன்னும் இருக்கிறது
கவிதை
இரவான
இருளோடு நிலவு
கலந்திருப்பதை போல...   1503

தேடிப் போன
வார்த்தைகளிலும்
வாடிப் போன
வாழ்க்கையிலும்
நீ கலந்து இருப்பதால்
இந்த வார்த்தைகளும்
இந்த வாழ்க்கையும்
ஒர் அழகான கவிதைகள்...  1504

தாயாக நீ ஆன பின்னும்
சேய்- ஆக நானும் இருப்பேன்
சாய்வாக
நீ என் தோழில்
சாயும் போது கூட...     1505

நீ நடக்கும் போது
உன்னை பின் தொடர்கிறது
ஓர் நிலவு
உந்தன் நிழலாக...        1506

நீ சிரிக்கும் போது
எதிரொளிக்கும்
ஒலிகள்
என் கவிதைகள்....       1507

உன் விழியும்
என்னை மயக்கும்
உன் ஒலியும்
என்னை
கவிஞன் ஆக்கிவிட்டது
உன் இடையும்
உன் இதழும்
என்னை
காதலன் ஆக்கிவிட்டது....   1508

உள்ளிருக்கும்
காதலெல்லாம்
கவிதையாய் பிறக்கும்
காதல் என்று
அதற்கு ஓர் பெயரும் பிறக்கும்
முத்தம் என்ற இன்னொரு
பிறவியும் எடுக்கும்...    1509

சேராத காதல் என்று
வேதனையும் ஆறவில்லை
வேண்டுதலும் தேறவில்லை
இனி என்ன வேண்டும்
என்று
என் மனம் எண்ணவில்லை
உன் உடல் நலம் தவிர...   1510

November 27, 2015

தீபம்

கார்த்திகையில்
நீ ஏற்றும் தீபம்
நிச்சயமாக
என்னை குளிர்விக்கும்
மார்கழியில்...

உன் இருவிழி
என்ற
தீபத்தின் ஒளியால்
இன்னும்
இரு குட்டி தீபம் ஏற்றலாம்
இவ்விரவின் வழி...

எழுபது விளக்கைக்
கொண்டு
வீட்டை நீ அலங்கரித்தாலும்
நான்
அழகாய் ரசிப்பது
உன்னை மட்டுமே!
உன் விழியை மட்டுமே!!

தீப்பெட்டியை உரசி
தீபம் ஏற்றினாலும்
அவ்வப்போது
என்னை நீ உரசி
அதன்
ஒளியை கூட்டிவிடுகிறாய்...

நீளும் இரவில்
நின்று எரியும்
காதலின் தீபம் நீ...

ஐந்து முகம் கொண்ட
விளக்கை
என் கைகள் ஏற்றினாலும்
என் கண்கள் தேடுவது
உன் முகத்தை மட்டுமே!!

மெழுகை ஏற்றி
என்னை ருசித்தவள்
இன்று
விளக்கை ஏற்றி
என்னை ரசிக்கிறாள்...

என்னை ரசிக்க
உன்னை அலங்கரித்துக்
கொள்கிறாய்
இந்த இரவின் ஒளியில்..

இருள்  படரும்
இடமெல்லாம்
என் உடலெங்கும்
உன் இதழ் படர
வேண்டும் அன்பே!

உன் நினைவுகளே
என் கவிதை விளக்கின்
எண்ணெய்கள்
ஒளியாய் என்றுமே
உன் முத்தம்....

2015 கவிதைகள் 1481 to 1490

விடியலில்
உன் புன்னகை முகமே
சாட்சி
இரவு எப்படி
கடந்தது என்பதற்கு?      1481

காதல் என்றாலும்
கவிதை என்றாலும்
எனக்கு நீ தான்
காதலால் கவிதையாய்
பிறக்கிறாய்
கவிதையில் காதலியாய்
வளர்கிறாய்....        1482

என் அழகை
காட்டும் கண்ணாடி
எல்லாம்
இப்பொழுது
உன் முத்தத்தின்
எண்ணிக்கையை கூட்டுகிறது
உனக்காக நான்
கண்ணாடியை
பார்க்கும் போது...      1483

உன்னை காதலிப்பது
வரம் என்றாலும்
நித்தம் உன்னோடு
வரும் கனவும்
இன்னொரு தவம்
உன் முத்தத்திற்கு...    1484

முடிவில்லா முத்தத்தின்
முடிவில்
என்ன இருக்கும்
முத்தமா?
இல்லை
நம் கனவு மொத்தமா?   1485

ஆயிரம் ஜன்னல்
இருந்த போதும்
உன் முத்தத்தினால்
தான்
என் உயிர்
சுவாசித்து கொண்டு
இருக்கிறது
இந்த காதல் அரண்மனையில்.. 1486

எழுதியிருப்பது
எதிர் காலமா?
இறந்த காலமா?
இல்லை
நிகழ் காலமா!
நிச்சயம் இல்லை
இது காதலின் காலம்...     1487

கனவுகளை கொண்டே
காதல் வாழ்க்கையில்
வாழ்ந்து கொண்டு
இருக்கிறோம்
காதல் வாழ்க்கைக்கும்
ஒரு கனவு
இருக்கத் தானே செய்யும்..     1488

பெருகிய வெள்ளம் போல
உருகிய கண்ணீரெல்லாம்
காதலின் வழியே
பெருகிக் கொண்டே இருக்கிறது..  1489

வானம் என்றாலும்
உன் காதல் என்றால்
அதன் வானம்
பிரிவின் உயரம்
என்றாலும்
அதே வானம்....   1490

2015 கவிதைகள் 1431 to 1440

என் நெஞ்சின்
துடிப்புகள் அனைத்தும்
உன் காலடி ஒசைகளாய்
கேட்க காத்திருக்கிறது..   1431

என் நினைவில்
மறைந்திருக்கும்
வெளிச்சம் நீ !
வெளிச்சத்தில் கூட
நான் உன்னை
காண முடிவதில்லை..   1432

முடிவற்ற நினைவுகள் நீ!
நினைவுகளில் முடிவற்ற
கண்ணீர் நான்..     1433

விழிகள் மூடும் போது
உன் முகம்
என்னை தாங்கும்
எப்பொழுதும் விழி மூடியே
இருக்க தான்
நானும் காத்திருக்கிறேன்...  1434

உனக்கும் எனக்குமான
வாழ்க்கையின்
தொடர்பு சங்கலியில்
ஒரு கன்னி காதல்
இன்னொரு கன்னி முத்தம்.. 1435

மனநிலைகளை விட
உடல் நிலை
சரியில்லாத காலத்தில் தான்
இன்னும் அதிகமாக
தேடுகிறேன் உன்னை!!    1436

ஜன்னலின் வழியே
நிலவு தெரிகிறது
நிலவின் வழியே
நீ தெரிகிறாய்
உன் வழியே
காதல் தெரிகிறது
காதலின் வழியே
உலகம் புரிகிறது
உலகத்தின் வழியே
உன் பிரிவில்
கண்ணீர் விரிகிறது..     1437

நீயும் நானும்
வாழ்வதற்கான
சக்திகளை பெருக்கிக்
கொண்டு இருக்கிறேன்
இக்கவிதையின் வழி
கண்ணீர் அற்று
காதல்  மட்டுமே நிரம்பி... 1438

நம் வாழ்க்கை பயணத்தில்
பாதியாய் இருக்கிறது
இப்பிறவியின்
பெரும் சோகம்
இருந்தும்
பிறந்த உயிர்களை
நினைத்து பசுமையான
சோலைகளை போல
பயணம்
நீண்டு கொண்டு தான்
இருக்கிறது...      1439

மழை பிறக்கிறது
ஒரு துளியாய்
முத்தம் இறந்து
மறுதுளியாய்
முத்தம் பிறக்கிறது
இந்த இரவில்..        1440

2015 கவிதைகள் 1421 to 1430

இரவை ருசித்திடும்
இன்னும் ஓர்
கனவு வேண்டும்
உன்னோடு மட்டும் அல்ல
உன் இதழோடும்..       1421

மல்லிகை மலர் கொடுத்தாய்
உன் இதழின்
மயக்கத்தில்
நான் என்னை கொடுத்தேன்.. 1422

உன் கண்ணை
பார்ப்பது போல தான்
தோன்றுகிறது
அதற்குள் முத்தமிட்டு
செல்கிறது
உன் கண்கள்....      1423

ஒளிரும் நிலவுக்கு கூட
தெரியவில்லை
நீ அதை விட
ஒளி மிகுந்தவள் என்று!  1424

பூக்களோடு பேசிக்
கொண்டு இருக்கிறாய்
நானோ
காதல் பூவை
சுவாசித்துக் கொண்டு
இருக்கிறேன்....      1425

உன் மெல்லிடை
காட்டும் சேலைகளுக்கு
எல்லாம்
நான் நித்தம்
சேவை செய்ய
கடமை பட்டு இருக்கிறேன்... 1426

குறிப்பிடும் படியான
அர்த்தங்கள்
இல்லாத போதும்
இக்கவிதைகள் அனைத்தும்
உனக்கு மட்டுமே
என்னைப் போல!        1427

அறுபட்ட இடத்திற்கு
தையல் போடுவதை போல
உன்னை பிரிந்து
வாழும்
இவ்வேதணைகளுக்கு
தையல் போடுகிறது
இந்த கவிதை!!      1428

நேரம் பார்ப்பதில்லை
கண்கள்!
உன்னோடு பேசிக்கொள்ள
நான் மட்டுமே
இருக்கும் நேரம்...     1429

எனக்காய்
பெய்து கொண்டு இருக்கிறது
உன் முத்த மழை!!
உனக்காய்
பெய்து கொண்டு இருக்கிறது
இங்கு
ஓர் கவிதை மழை!!     1430

2015 கவிதைகள் 1411 to 1420

அறுத்தெறிந்த
இடமெல்லாம் ரத்தம் வழிந்தால்
ரத்தமே வழியும்
வாழ்க்கையில் இன்னும்
எத்தனை அறுபடுதல்
இருக்குமோ!!      1411

தூங்கி கண்ட
கனவுகள் எல்லாம்
காலை வரை
இருளில் கிடக்கும்,

இருளில் கிடக்கும்
நம் வாழ்க்கை மட்டும்
கனவுகளாய்
பகலில் விரியும்..    1412

உன் இதழை கண்ட பின்
துளிர்த்த கனவுகள்
எல்லாம்
உன் காதலின்
பிரதிபலிப்பு
அவ்வளவும் அன்பு நிறைந்தது.. 1413

உன்னை முத்தமிடும்
தருணத்தில்
உனக்கு காவலாய்
நானும் வைத்திருப்பேன்
உன் மீதான காதலை...  1414

நிர்வாணத்தின்
நிறைவேறாத
ஆசைகள் என்று
ஒன்று உண்டா?
இல்லை!
நிச்சயம் இல்லை
இரவுகளில்
உன்னை நினைக்கும்
கனமொன்றிலே
நிறைவேறி விடுகிறது
ஒவ்வொரு ஆசையும்....    1415

உன்னை கவனித்து
உன் கண்ணையும்
கவனித்து
உன் இதழை மட்டும்
கவனிக்க தவறியதால்
கண்ணிலும்
கண்ணீர் கொட்டுகிறது..  1416

நேரம் பார்த்து
நேரில் பார்க்கும்
காலம் யார்
நமக்கு தந்தது
நேரம் தவறாமல்
நானே என்னுள்
கேட்கும் கேள்வி அது!      1417

பிரமைகள் தீர்ந்து
பெருமை நிறைந்த
உன் காதலின் கனவுகள்
என்னிலே வேண்டும்
கண்ணீலே
கண்ணீர் ஆனாலும்
பரவாயில்லை...      1418

இளமை என்பது
உன் இதழுக்கு
மட்டுமே சொந்தம்
என்னை அது
சொந்தம்
கொண்டாடும் போது..     1419

இரவுக்கு இருபது வயசு
உன் இதழுக்கு?      1420

2015 கவிதைகள் 1401 to 1410

சந்தோசம் நிறைந்த
இரவையெல்லாம்
இசையாய் மாற்றி
உன் கவிதைகளை
நானே வாசிப்பேன்..      1401

நீ இருக்கும்
அறையை தேடி ஓடும்
கண்களில் ஒளிகளில்
ஏனோ
காதல் மட்டுமே
கூடி இருக்கும்..         1402

எனக்கு சிறகாய்
இருக்கிறது
உன் கவிதைகள்
கவிதைகளுக்கும்
சிறகு கொடுக்கிறது
உன் காதல்....       1403

நீ எப்படி இருக்கிறாய்
என்ற குரலிலே
தெரிகிறது
எத்தனை நாட்கள்
என்னை
நீ பிரிந்து இருக்கிறாய் என்று!! 1404

பாவம் செய்த
கால்களுக்கு தான்
ஏனோ ஒரு பாதையும்
வாய்க்கவில்லை!
பாவம் செய்தவன்
நான் தான்!        1405

என்னை நினைத்து
நீ உருகினால்
நான் உன்னை
நினைத்து பெருக்குவேன்
என்
வாழ்க்கையின் கண்ணீரை..  1406

வரம் வேண்டும்
என்று கேட்ட
நாட்களில்
மீண்டும் போய்
வரமாய்
உன் நலம் மட்டுமே
வேண்டும்
என்று கேட்கிறேன் கடவுளிடம்..  1407

தளர்ந்து விட்ட
ஒரு மலர் அல்ல
உன் காதல்
தளிராமல் என்னிலே
வாசம் வீசும்
ஒரு மல்லிகை பூ!       1408

வாடி நீ நின்றால்
தேடி வரும்
கண்ணீர் எல்லாம்
நான் என்பேன்!!      1409

பொருளற்ற
இக்கவிதையின் முடிவில்
பொருளாய்
உன் முத்தம் மட்டுமே
எனக்கு விளங்கும்...   1410

November 15, 2015

2015 கவிதைகள் 1491 to 1500

காதலின் ஏக்கத்தோடு
பெய்த மழையை விடவா
இப்பொழுது ஊரில்
மழை பெய்து
கொண்டு இருக்கிறது
இல்லை
தீராத கண்ணீர்
நிரம்பிய இதயம் எல்லாம்
மின்னல் கீற்றாய்
உன் ஞாபகம் அன்பே!!    1491

சின்னஞ்சிறு கனவுகளே
வளர்க்கிறது
நம் காதலின் ஆயுளை...   1492

யாரும் இல்லாத போது
உன்னை நினைத்து
கண்ணீர் விட்டுக் கொள்கிறேன்
ஏன்எனில்
அவர்களுக்கு
சொன்னாலும் புரியாது
உன் காதலை பற்றி...   1493

மனம் என்ன கேட்க போகிறது
இந்த மழையில்
குளித்து கொள்ள
நீ வேண்டும்
என்பதை தவிர...       1494

காலமும் கருகுமோ
காதலின் வேதனையில்
மோகமும் பெருகுமோ
காதலின் சாதனையில்
கண்களும் ஏங்குமோ
உன் கண்ணின் சாயலை
கண்டு உருகிட என் உயிரே... 1495

மெளனங்களை வார்த்தையாக்கி
வார்த்தைகளை கவிதையாக்கி
கவிதையை காதலாக்கி
காதலை உயிராக்கினேன்
உனக்காய் என் உயிரே...    1496

எங்கிருந்தாலும்
உன்னை நினைத்துக் கொள்வேன்
என்பதை விட
எங்கோ இருந்தாலும்
உன்னை அனைத்துக் கொள்வேன்
இக்கவிதையின் வழி...     1497

எண்ணங்கள் எளிமையாக
இருந்தாலும்
அதன் வண்ணங்கள்
முழுதும்
உன் காதலே நிறைந்துள்ளது..  1498

நிலாவை பார்த்து
உன்னை நினைத்தேன்
நீயும் என்னைத் தேடி
இரவில் கரையும் போது..  1499

கால் வலிக்க நடந்தாலும்
காதல் இருக்க வேண்டும்
கண்கள் முழுதும்
இறைவனை நினைத்து
இவ்விரவு முழுதும்...       1500

2015 கவிதைகள் 1471 to 1480

உன் காதலின்
கடலுக்குள்
நான் வீசிய
வலைகளுக்கு எல்லாம்
மீன்களாக
உன் முத்தங்கள் கிடைக்கிறது..  1471

நாணம் என்று
ஒன்று
உனக்கு வந்த பிறகு
நீயும் நானுமாய்
ஆனோம் நாமாய்...    1472

கடிதம் எழுதி வைத்தேன்
வரிகளாக
முத்தத்தை ஏந்தியபடி...  1473

எனக்காக படைக்கப்பட்ட
பரிசுப் பொருள் நீ
எப்போது நான் திறந்தாலும்
முத்தமே கிடைக்கும்..    1474

உன் புன்னகையே போதும்
இந்த வாழ்வை
நான் ரசித்து வாழ
உன்னுள் இன்னும்
ஆழமாக ருசித்து வாழ...    1475

குளிரூட்டும்
உன் ஞாபக மழைகளில்
குளிர் தாங்கும்
உடைகளாக எனக்கு
உன் கவிதைகள் இருக்கிறது..  1476

ஒரு புறம்
காதல் நம்மை பிரித்து
ரசித்தாலும்
மறுபுறம்
உன் நினைவில் உருவான
காதல் கவிதைகள்
நம்மை இணைத்து
ரசிக்க வைக்கிறது
இந்த காதல் வாழ்க்கையை..   1477

கோடுகளால்
இணையும் ஒவியத்தை போல
காதல் கவிதைகளால்
இணையும் காவியம் தான்
எப்பொழுது நிகழும்...     1478

பகலை விட
இருள் கொடியது தான்
உன்னை விட்டு பிரிந்து
இருக்கும் போது
ஆனால்
மிகவும் அழகானது
உன்னோடு வசிக்கும் போது..  1479

உன் விழி கண்டு
உறங்காமல் போன
இரவுகளில் எல்லாம்
ஒரு கவிதை
எழுதியிருந்தாலும் கூட
இந்நேரம் இலட்சங்களை
தாண்டி இருக்கும்..   1480

2015 கவிதைகள் 1391 to 1400

வெட்கத்தில்
நீ சிரித்தால்
என்னை விட
உன் பக்கத்தில்
என் இதழையே
நான் வைப்பேன்...       1391

உன் இடை தேடும்
என் கை விரல்
உன் இதழ் தேடும்
என் இதழ் ரேகைகள்
அன்பே!
இதுவரை தேடியும்
கிடைக்காத வரம் அது!!    1392

வலி தொடரும்
இரவுகளில் எல்லாம்
ஆறுதலாய்
ஒரு மழை
கண்ணிலும்
கனவிலும்
என் அன்பே!!      1393

வழியெங்கும்
உன் நினைவை பரப்பி
வாழ்க்கையின் வழியே
பயணிக்கிறேன்
என் வாழ்க்கை
நீ என்று!!        1394

நீ வந்து
நின்ற பின்
வளரும் நிழல்
முத்தத்தின் சாயல்...     1395

பின் நின்று
நீ அணைத்தால்
என் முன் நின்ற
கவலையும் ஓடி விடும்!!    1396

உன் மூச்சுக் காற்றில்
மலரும் மலர் நான்!
நாளும் சுரப்பேன்
தேனாக உன் காதலை!!    1397

உடை மாற்றும் போது
உன்னை நினைத்தேன்
ஏன் என்று
பின் நினைத்தேன்
நீ இருந்திருந்தால்
உடையே மாற்றிருக்க
முடியாது என்று!
நானும் சிரித்தேன்!!      1398

வா! என்று
என்னை அழைத்து
தா! என்று
என் கண்ணையும் பார்க்கிறது
உன் இதழ்!!         1399

இரவை மூடும்
இருள் இருந்தும்
என் இதழை மூட
உன் இதழ் வேண்டும்
இந்த இரவில்!!     1400

2015 கவிதைகள் 1381 to 1390

உன் விரல் கூட
முத்தமிடுவதை
நானும் உணர்ந்தேன்
யாரும் பார்க்காத போது
என் பாதத்தை
அது வருடும் போது...   1381

நீ இன்றி
வாடும் காதல் பூ
நான்
அன்பே!
நீ இன்றி
வாழும் காதல் பூவும்
நான்...                              1382

உன்னை எதிர்பார்த்து
காத்திருந்ததை விட
உன் முத்தத்தை
எதிர்பார்த்து
காத்திருக்கும்
நொடிகள் ஏனோ
மிகக் கொடியது
என் அன்பே!!               1383

உன்னைத் தேடி
அலையும்
பாக்கியம் இல்லாத போதும்
உன்னைத் தேடியே
என் இரவு
வாழ்க்கை பயணிக்கிறது
என் அன்பே!!            1384

உன்னை பார்க்காத
நொடியில்
உன் பார்வையே போதும்
என்று நினைக்கிறேன்
உன்னை பார்த்த பின்பு
பாதி முத்தமாவது வேண்டும்
என்று துடிக்கிறேன் .....    1385

வண்ண விளக்குகள்
வேண்டும் அன்பே!
பல வண்ணம் மிகுந்த
உன் கண்ணை கண்டு
நான் கவிதை எழுத
கவிதையோடு
உன் காதலையும் வருடி விட..  1386

உன்னைப் பார்த்த பின்பு
எழுத ஆரம்பித்த
கவிதைகள் எல்லாம்
அத்தனை அழகு!!
அழகிற்கு இணை
அழகு மட்டுமே!
உன் இதழுக்கு இணை
என் இதழ் மட்டுமே!!     1387

ஏன் என்று
கேட்காதே!!
என்னிடம் இருப்பது
உனக்கான இதயம்
மட்டும் அல்ல!
இதழும் தான்...     1388

முதல் முறை முத்தமிட்ட போது
தள்ளி விட்டாய்!
இப்போதோ
தள்ளி நின்றே
முத்தமிடுகிறாய்!
பல முறை!!!          1389

பாதி உறக்கத்தில்
நீ எழுந்து
உன் உடையை
சரி செய்தால்
நான் எதை
சரி செய்வேன்?
என் இதழையோ!!      1390

2015 கவிதைகள் 1461 to 1470

வண்ணம் தீட்டிய
ஒவியம் நீ
வண்ணமாக காதல்
நிரம்பி இருக்கிறது..   1461

உன் இமைகள்
என் நெஞ்சில் படரும் போது
இதயம் கூட
இதமாக துடிக்கிறது
என் அன்பே!
இந்த இரவில்...  1462

இனி என்ன வேண்டும்
உன் இமையின் இசையில்
நான் உறங்கும் போது..   1463

இரவின் மேடையில்
உன் இதயத்தின் ஓசை
கேட்டு
நானும் கிறங்கி விட
ஆசை என் அன்பே!!     1464

நீ பார்க்கும் பார்வைகளில்
பொழுதுகள் சாய வேண்டும்
உன் தோளில்
நான் சாய்ந்த படி..     1465

மீனும் கடலுக்குள் வாழும்
நானும் உன் காதலுக்குள்
வாழ்கிறேன்..     1466

ஆழம் நிரம்பிய காதலில்
உன்னோடு நீந்திக்
கொண்டு இருக்கிறேன்
உன் முத்தத்தில்
உயிர் வாழ்ந்து
கொண்டு இருக்கிறேன்..   1467

உன் கண்களை தவிர
வேறு எதுவும் தெரிவதில்லை
ஒவ்வொரு கவிதையும்
எழுதும் போது...      1468

உன் பார்வைகள்
சில நேரம்
கேள்விக் குறி தான்?
முத்தம் அவ்வளவு தானா? என்று..      1469

நான் உன்  இதழை
தேடிய போதெல்லாம்
கிடைக்கும் புதையல்
உன் முத்தம்...    1470

2015 கவிதைகள் 1451 to 1460

இருளில்
எப்பொழுதும் நான்
வாசிக்கும் புத்தகம் நீ
வரிகளாக
உன் முத்தங்கள்...   1451

நீ என்னை
ரசிக்கும் போதே
பருக்கள் தோன்றுகிறது
இன்னும் நீ
என்னை ருசித்தில்
என் பருவமே
மாறி விடும் போல...    1452

உன்னை மட்டுமே
உரசிக் கொள்ள
உயிரோடு இருக்கிறேன்
என் அன்பே!!          1453

உன் குரல் இசை
என்றால்
உன் கண்கள்
ஒரு ஓவியம்
உன் பாதம்
இன்னொரு கவிதை எனக்கு..  1454

நீ தீண்டிய பின்
உருவான கவிதைகளில்
எல்லாம்
உன் முத்தத்தின் சாயல்
நிரம்பி இருக்கிறது...    1455

உன் முகம் தேடிய
என் கவிதைகள் எல்லாம்
இப்பொழுது
உன் முத்தத்தை
தேடி அமைகிறது...   1456

உன் கண்ணீரிலும்
நான் சிரிக்கிறேன்
உன் காதலின்
ஆழத்தை உணர்ந்து..    1457

மழையில்
நீ நனைந்தால்
ஜலதோஷம்
எனக்கும் பிடிக்கும்
உன் நனைந்த
உடைகளை
நானே கழற்றும் போது..   1458

உன் நகங்களை
வெட்டி விட
எப்பொழுதும்
நான் உன்னை விட மாட்டேன்
அதன் காயங்களுக்கு
உன் இதழே
மருந்தாகும் போது...     1459

இரவுப் புயலை
இந்தப் பூவை கொண்டு
எதிர் கொள்கிறேன்..  1460

2015 கவிதைகள் 1441 to 1450

இந்த இருளில்
நம் இருவரால்
தொலைக்கப் பட்ட காதலை
நம் இருவரும்
தேடிக் கொண்டு இருக்கிறோம்
வெவ்வேறு இடங்களில் இருந்து
ஒரே ஒரு வெளிச்சம்
கொண்டு "காதல்"          1441

வருத்தத்தில்
நான் பாடவில்லை
என் கண்ணே!
உன் வரவை
எதிர்பார்த்து தான்
பாடிக் கொண்டு இருக்கிறேன்.. 1442

இரவும், பகலும்
இதயத்தில் உன் முகம்
இசையெங்கும் உன் குரல்
உன் குரலின் நாதமாய்
காதலே ஒலிக்கிறது
இரவை பகலையும் மீறி..   1443

என் இளமை பெருக்கும்
இரவே!
இன்று என் உயிர்
உறங்கட்டும்
உறக்கத்தின் கனவில்
காதல் பெருகட்டும்
இரவின் இளமையோடு!!     1444

உன் புன்சிரிப்பில்
என்னை
வானை ரசிக்க வைத்துவிட்டாய்
கண்களை மூடியபடி
கைகள் உன்னை
தழுவிய படி...        1445

வானம் என்பது
பூமியின் பிரதிபலிப்பு
உன் புன்னகை
என் முத்தத்தின்
பிரதிபலிப்பு....     1446

நீ பார்க்கும் போது
காதல் பெருகுகிறது
வெட்கத்தில் நீ சிரித்தால்
காமம் உடைகிறது...    1447

வாடி நின்ற போதும்
வாடாமல் வரிகள்
மட்டும்
உன்னைத் தேடியே
வந்து கொண்டே
இருக்கிறது
என் இதயத்தில் இருந்து..   1448

நிலவை ரசித்தேன்
உன் கண்ணை
நிலவாக பாவித்து...     1449

உன் ஞாபகம் மட்டுமே
நிரப்ப
இந்த கவிதை கோப்பை
காத்திருக்கிறது...      1450

2015 கவிதைகள் 1371 to 1380

நிலவை சார்ந்து
இருக்கிறது
உயிர் உள்ள இந்த இருள்...  1371

நீ
என்னோடு இருக்கும் நேரத்தில்
நீ தான் உலகமே
இல்லாத நேரத்தில்
இந்த உலகமே நீ தான்...   1372

இந்த இரவிலும்
உன் காதல்
என்னில் ஊடுருவி
உள்ளம் உருக செய்கிறது...  1373

பிடிப்பட்ட நாயின்
படபடப்பு
உன் காதலின் ஞாபகம்
என்னை
இந்த இரவில் பிடித்த போது..  1374

முகம் சிரித்து
முற்று பெரும்
இரவை விட
இன்பம் ஏதும் உண்டோ
என் உயிரே!       1375

நகம் கடித்து
பகலை கடந்தேன்
உன்னைப் பற்றி
பின் இரவின் யோசனையில்.. 1376

கிடைக்காத வாழ்க்கையின்
கையில்
நம் காதல்  வளர்ந்து
கொண்டு இருக்கிறது
வளர வளர
வாலிபமும் ஏற
வாழ வழிகள் அற்று
வலியில் துடித்துக்
கொண்டு இருக்கிறது
போகும் வழி தோறும்
காதல் இருந்து
என்ன பயன்?
என்று தோன்றிய போதும்
அந்த காதல்  தான்
வாழ வைக்கிறது....    1377

உன் இதழை
முத்தமிட்டு
திரும்பும் பாதையெங்கும்
பனித்துளிகள் பூத்து
கிடக்கிறது அன்பே!!
அதன் வாசனையாக
உன் வேர்வையின்
வாசம் வழிய...    1378

நீண்டு கருத்த
கூந்தலின் நுனியில்
என் இதழை பதித்தால்
பாதத்தில் கூட பூக்கிறது
ஒரு புதிய பூ!        1379

விடுமுறைகளை
விதையாக்கி
நம் வீடு தோறும்
நட்டு வைப்பேன்
உன் காதல் முத்தங்களை..  1380

November 1, 2015

2015 கவிதைகள் 1361 to 1370

நீ திரும்பி பார்க்கும்
ஒவ்வொரு கணமும்
தூறல் விழும் மண்ணில் இல்லை என்னில்....  1361

மழை நீரில்
நீ நடக்கும் போது
உன் காலடியில்
எழும் தண்ணீரின்
ஒவியம் தான்
என் கவிதைகள்...     1362

மழை நீ என்றால்
கவிதை நான்
அதன் வரி
என்றுமே
நம் காதல்....    1363

அகம் எல்லாம்
உன் முகம் என்றால்
நீ முத்தமிட்டு
என் நகமெல்லாம்
உன் இதழின் வண்ணம்..  1364

உன்னை நினைக்கும்
கணமெல்லாம்
காதல் கூடுவதை விட
அந்த கணம் கூடிக் கொண்டே
இருக்கிறது காதலில்...    1365

உன் முத்தத்தின்
சந்தோசத்தில்
புன்னகையை விட
வெட்கமே
என்னை இன்னும்
அழகாக்கிறது...      1366

உன்னோடு இருந்த
இரவை நினைத்து நினைத்து
இதயம் இன்னும்
இதமாக துடிக்கிறது....   1367

நீ சொல்லும்
ஒற்றை சொல் கூட
ஒரு கவிதை தான்
காகிதத்தில்
நான் அதை பதிக்கும் போது.. 1368

உன் இரவை
நினைத்து நான் வாடிக்
கொண்டேன்
என்னோடு எப்பொழுதும்
இருக்கும் பகலில்...    1369

உனக்கான பதில்
என்னில் இல்லை
என் இதழில்
இருக்கிறது மெளனமாக.. 1370

2015 கவிதைகள் 1341 to 1350

இல்லாத கேள்விகளுக்கு
பதில் ஏது?
இருக்கும் கனவுகளை
கொண்டு வாழும்
நம் இருவருக்கும்...   1341

நித்திரை பாதையின் வழி
செல்லும் கனவுகளிலெல்லாம்
காதலின் துணையாய்
உன் முத்தம்...       1342

மலரில்லாமல்
காற்று வீசுமோ?
காதலே
உன் கனவு இல்லாமல்
என் வாழ்க்கை கழியுமோ?   1343

அனல் மிகுந்த
இரவெல்லாம்
அன்பாய்
உன் ஒரு விரல்
கோர்த்தால் போதும்
இரவை அனலிட்டு
எரித்து விடுவேன்...   1344

உருவம் இல்லா இரவில்
என்னை உருக்கும்
உன் கண்ணீர் துளி...   1345

மயக்கத்தின் நடுவே
நெஞ்சை கீறிய போதும்
நெஞ்சே
உன் பிஞ்சு முகம் தான்
என் நெஞ்சம் முழுதும்...   1346

சுயநலம் முற்ற
மனிதர்கள் நடுவே
சுதந்திரமாய் கூட
நினைக்க முடியவில்லை
நம் காதலை...       1347

எத்தனை மனிதர்கள்
இருந்தாலும்
உன்னைப்போல
என்
தகப்பனைப் போல
ஜீவன் உண்டோ?
என் மனதில்
நான் நினைப்பதற்கு...   1348

ஆயிரம் நாட்களை
கடந்தாலும்
அல்லும் பகலும்
அழுதாலும்
தீராதது
உன் பிரிவு
என் தந்தையே!!     1349

நீ
கண்ணீர் விட்டு
பார்த்ததில்லை
உனக்கு
கண்ணீர் கூட
சிரிப்பு தானோ?    1350