December 31, 2016

2016

உன் துளி முத்தமும்
இல்லாமல் கடந்து விட்டேன்
இந்த 2016யை,
இருந்தும்
பல முத்தங்களாய்
உனக்காக சில
ஓவியங்களை
என் நெஞ்சில்
வரைந்து வைத்திருக்கிறேன்..

உனக்காகவே கவிதை
எழுதி எழுதி
கவிஞன் ஆனேன்,
உனக்கான முத்தத்தின்
வண்ண கலவையால்
ஓவியன் ஆனேன்,

காலம் எழுதிய
கவிதையில்
கண்ணீரின் படிவம்
படிந்து இருந்தாலும்,
காதலின் வடிவம்
உயிரூட்டி கொண்டே தான்
இருக்கிறது
உணர்வுகளின் மூலம்...

உணர்வுகளின் வழிய
உனக்கோர் முத்தம்
வைத்திருக்கிறேன்
என் இதழில்
அவை உன் பாதம்
எதிர் பார்த்தே காத்திருக்கிறது..

என்னை வழிநடத்தும்
உன் காதலுக்கும்
உன் கண்களுக்குமான
வாழ்த்துகளோடும்
நன்றிகளோடும்
வழியனுப்புகிறேன்,
இந்த ஆண்டின்
இறுதி நாளை...

-SunMuga-
31-12-2016 19:30 PM

December 24, 2016

பாவை முகம்

பாடுகின்ற நேரத்தில்
பைந்தமிழ் போல
பார்க்கும் கனமெல்லாம்
பாவை முகம் வேண்டும்

ஏழை என்று
என்னை ஒருத்தி
தூக்கி எறிய
கோழை நான் என்று
என்னை அறிந்தேன்,

கோழை
நான் என்ன செய்தேன்
கோவிலுக்கு போனேன்
இறைவனை வணங்கினேன்
உடலில் உயிர்
இருக்கும் வரை
என் கைகள்
இறைவனின் பாதம்
தொட்டு வேண்டிக் கொண்ட
வரம் என்னவோ
அவளுக்கு அன்னையாக
அவளுக்கு ஆறுதலாக
அவளுக்கு ஆசானாக
அவளுக்கு அனைத்துமாக
நீயே இருக்க வேண்டும்
என் இறைவா!!

-SunMuga-
06-11-2016 23:40 PM

பூனை

எலிகளை போலவே
இந்த இரவை
வேடிக்கை பார்த்துக்
கொண்டு இருக்கிறேன்
பூனையாக இரவு
என்னை உண்ணட்டும்
என்று...
-SunMuga-
24-12-2016 22:20 PM

November 28, 2016

நிர்வாண ஓவியம்

சிறுவன்:
நிர்வாணமாய்
ஒரு பெண்ணை வரைந்தால்
பிஞ்சிலே பழுத்தது
என்பார்கள்..

இளைஞன்:
நிர்வாணமாய்
ஒரு பெண்ணை வரைந்தால்
காமப்பசி வந்துவிட்டது
என்பார்கள்..

முதியவன்:
நிர்வாணமாய்
ஒரு பெண்ணை வரைந்தால்
காமப்பசி இன்னும் தீரவில்லை
என்பார்கள்..

எப்படி
நானும் சொல்வேன்
நிர்வாணம் என்பது
நிரந்தரமாய்
உடைக்குள்
வசிக்கும்
எல்லைகளற்ற
ஒரு வானம் என்று!!

-SunMuga-
28-11-2016 22:10 PM

இரவு

இறப்பதற்கு
உண்டான சூழல்
இல்லாத போது
இமை மூடி
உறங்க முடியவில்லை,
இறுக்க இமைகளை
மூடிய போதும்
இரவுகள் நெருங்கவில்லை,
எப்படித் தான்
கடப்பதோ
இந்த இரக்கமற்ற இரவை...

-SunMuga-
28-11-2016 22:00PM

தனிமைச் சுவர்கள்

யாருமற்ற
என் அறையில்
தனிமையின்
சுவற்றை பார்த்துக்
கொண்டு இருந்தேன்,
ஒரு ஓவியமும்
என் கண்களுக்கு
சிக்கவில்லை,
சிக்கலான விஷயம் தான்
மனம் குழப்பத்தில்
இருக்கும் போது,
எப்படி சிக்கும்
உருவங்கள் நிறைந்த
வாழ்க்கை என்ற
மிகப்பெரிய ஓவியம்!

-SunMuga-
28-11-2016 21:50 PM

November 12, 2016

கனவின் சாம்பல்

என் கனவை
நானே எரித்து
கனவின் சாம்பலை
சிறு குவளையில் அடைத்து
என் கண்ணீரின்
கடலில்
நானே கரைத்தேன்,
மெல்ல மெல்ல கரைந்து
கடலோடு கலக்கும் போது
இறந்த
என் உடலெங்கும்
பாவத்தின் தழும்புகள்
கரைந்து கொண்டே இருந்தது..

கரைந்த தழும்புகளின்
வரமாய்
இறந்த என் உடல்
மீண்டும் உயிரோடு
எழுந்ததாக
ஒரு கனவே பிறந்தது....

-SunMuga-
12-11-2016 21:00 PM

November 4, 2016

நிரந்தரம்

நிரந்தரம் என்று
ஒன்றுமே
இல்லாத போது
நீ இல்லாது
நீளும் இரவில்
நிம்மதியோடு
நித்திரையும் இல்லை
இரவு நிறைந்த
வானத்தில்
நிலவும் இல்லை

இரவு

பகலென்றும் பாராமல்
வடிந்தொழுகிய
உயிரணுக்களை
தொட்டுப்பார்த்து
உடலின் இரவுகள் வடித்தது
ஒரு துளி கண்ணீர் துளி,
தூய்மை நிறைந்த போதும்
தூக்கம் தாராத
அந்த கண்ணீர் துளியின்
வலிகள் என்னவோ
வாழ்க்கையின்
பின்னோக்கிய
ஒரு பயனற்ற பயணம்...

-SunMuga-
17-10-2016 22:55 PM

தீராக் காதல்

தீராக் காதலை
தினம் தின்னும் போது
உடலை விட
உள்ளத்தின் பாரம் ஏறுகிறது
உறக்கம் மறந்த
உணர்வுகள் ஏனோ
உயிரை தேடுகிறது...

முத்தம்

உச்சந்தலை முத்தம்
உயிரில் கலக்கும்,
நெற்றி முத்தம்
நெருக்கத்தில் பிறக்கும்,
கண்களில் முத்தம்
காதலில் கலக்கும்,
மூக்கில் முத்தம்
முதுமையில் பிறக்கும்,
இதழில் முத்தம்
இளமையின் தொடக்கம்,
காதில் முத்தம்
ரகசியம் காக்கும்,
கன்னத்தில் முத்தம்
கனவில் சேர்க்கும்,
கழுத்தில் முத்தம்
கலையின் தொடக்கம்,
மார்பின் முத்தம்
மலரின் ஸ்பரிசம்,
விரலில் முத்தம்
விரதம் முறிக்கும்,
தொப்புள் முத்தம்
கொடியின் அறிமுகம்,
மடியில் முத்தம்
மடியும் வரை நிலைப்பது,
தொடையில் முத்தம்
தொடர கொடுப்பது,
முழங்கால் முத்தம்
முக்தி பெறுவது,
பாத முத்தம்
பாவம் தீர்ப்பது....

காதல் முத்தம்
கடவுளை அடைவது,
கடவுளின் முத்தம்
காதலரை பிரிப்பது...

-SunMuga-
04-11-2016 01:10 AM

November 3, 2016

வறுமை

உடைகள் அணிந்து
நிர்வாணமாய்
என் கனவுகள்
நிகழ்காலத்தின் வறுமையை
பிரதிபலிக்கிறது..

கனவுகள் மாறுமா?
அல்லது
காலம் மாறுமா?

எல்லாமே
கனவாய் போன
வாழ்க்கையில்
காலம் தரும்
கவலைகள் தான் தீருமா?

தீராத கனவின்
முடிவில்
நிர்வாணமாய்
நின்று
நிலையில்லாத
காலத்தின் மடியில்
நானும் வடிப்பேன்
என் கவலையின்
ஒரு துளி
கண்ணீர் துளியை...

-SunMuga-
03-11-2016 23:20 PM

October 25, 2016

தாகம்

தாகம் என்று
நீ வந்தால்
உன் தாரமாக
நானும் இருப்பேன்
என் தாய்மையும்
நானும் மறப்பேன்
பிள்ளைகள் வந்த
பாதையில்
உன் காமம்
நிர்வாணமாய்
நுழையும் போது
கண்களை போல
வாழ்வின் சில
ஜன்னல்கள் மூடட்டும்,
இது தான் வாழ்க்கை
என்றால்
வருத்தமும்
கண்ணீரும் வந்து
ஒன்றும் ஆக போவதில்லை,

பசிகள் தீர்க்க
கடவுள் இல்லை
(கடவுள் இல்லா உலகம்)
என்று நினைத்துவிடாதே,
கடவுளால் படைக்கப்பட்ட
நானும் ஒரு
கடவுள் தான்
நானே தீர்க்கிறேன்
உனது பசியை..

துயர் நிறைந்த போதும்
தூய்மையான
மனம் நிறைந்த அறையில்
அல்லி மலர் போல
நானும் காத்திருப்பேன்
அனைத்து உறங்கும்
வேலையில்
அனைவரும் உறங்க...

உம்மியிட்ட நெருப்பாய்
உனது நெருக்கம்
எனது விருப்பம்
விடியும் வரை
அனையாமல்
நானும் எரிவேன்
உனக்கு ஏதுவாக
உன் ஆசைகள்
தீரும் வரை
காமத்தின் திரியை
தூண்டி தூண்டி
துடிக்கின்ற
மீனிற்கு
துளியளவு நீர் போல
வேர்வைகளை உனக்களித்து,
வேதனைகளை
வேர் அறுத்து,
வெளிச்சத்தின் பாதையில்
காமத்தின் இருளை அகற்றி
இன்னும் இன்னுமாய்
உனக்கு இன்பமளித்து
இறுதியில் இறைவனை
காண்பேன்...

-SunMuga-
24-10-2016 23:45 PM

October 24, 2016

ஆசை

எத்தனை கோடி
ஆசைகள்,
எத்தனை ஆயிரம்
கனவுகள்,
அத்தனையும் மீறி
முதல் ஆசையாய்,
முதல் கனவாய்,
பிறக்கிறது
ஒரு முறையேனும்
இறந்து விட வேண்டும்
இந்த இரவிலே இன்று...

-SunMuga-
24-10-2016 22:20 PM

September 21, 2016

பைத்தியத்தின் கண்கள்

அநேக இரவுகளில்
அதிகம்
உன்னை தேடும் போது
ஒரு பைத்தியத்தின்
கண்களை
என் உயிரெங்கும்
தழுவ விட்டுருக்கிறாய் நீ,
சில இரவுகளின்
அதன்
மெளன ஒளிகளை
நானும் பார்த்தபடி
அதனோடு
பேசிக் கொண்டே
இருக்கிறேன்,
இரவுகள்
இமைகளில் கலந்து
இருளின் வழியே
வெளியேறும்
நேரத்தில் விடிந்து
விடுவது கூட
தெரியாமல் உறங்குகிறது
இந்த பைத்திய உடல்..

-SunMuga-
21-09-2016 23:15  PM

உருப்படியான கவிதை

பாதி உறக்கத்தில்
கண் விழித்து
பார்த்த போது
என்னோடு
இரவு நிர்வாணமாய்
படுத்துக் கிடந்தது,
அதன் உடலெங்கும்
இருளின் வண்ணம்,
மெல்ல மெல்ல
இருளில் கலந்து
நானும் அதன்
உடலை தடவி பார்த்தேன்,
அதற்கு
ஒரு ஆணைப் போல
குறியும் இல்லை,
ஒரு பெண்னைப் போல
முலைகளும் இல்லை,
ஆனால் அதன்
கைகளில் மட்டும்
ஒரு பேனா இருந்தது,
எதற்கு பேனா என்று
கேட்டேன்!
உறக்கம் வராத
இரவுகளில்
உருப்படியான
ஒரு கவிதை எழுதுவதற்கு
என்றது அது!!!

-SunMuga-
21-09-2016 22.00 PM

September 19, 2016

விடியல்

விடியலை நோக்கிய
இந்த இரவின்
பயணத்தில்
கவிதை வார்த்தைகளின்
வழியே பயணிக்கிறது,

வார்த்தைகள்
வழித்துணையாக
என் வாழ்க்கை துணையை
மாறுபட்ட பல வழிகளில்
தேடிக் கொண்டு இருக்கிறது

தேடல் நிரம்பிய
இரவில்
இருள் கலந்திருந்த போதும்
இருளிலும் அவள்
இல்லாமல் இல்லை
என் இமைகள் முழுதும்

இமை மூடிய போது
கைகள் கோர்த்து
காதல் சொல்லி
கதைகள் பல சொல்லி
காலை வரை
காத்திருந்த மனம்
ஏனோ
எதிர்பார்த்தது
விழியில் ஒரு முத்தம்.

முடிவுறும் முத்தம்
ஏனோ
என் வாழ்வில் கிடையாது
என்று உணர்த்தியது
அந்த விடியல்
மட்டும் தான்..

-SunMuga-
19-09-2016 01:15 AM

வெற்றிடம்

வெறுமை
நிரம்பிய போது
வெற்றிடம் பார்த்தேன்
என் வேதனைகள்
அதில்
நெளிந்து நெளிந்து போனது,

வெறுமை கரைத்த
கவிதையில் ஏனோ
காலத்தை கரைக்க
காலம் வழி விட மறுக்கிறது,

காலம் ஏனோ
அத்தனை வன்மத்தையும்
என் மீது காட்டிக் கொண்டு
இருந்த போதும்,
அதே காலம் தான்
அதன் வலிகளையும்
சுமக்கிறது
வேறு வழிகள் இல்லாமல்...

-SunMuga-
19-09-2016 12:15 AM

முத்தம்

முத்தம் பற்றிய
முடிவில்லாத
கவிதை ஒன்று
எழுத வேண்டும்
உன் முத்தத்தை போல,
எப்போது முடியும்
என்று தான் தெரியவில்லை..

-SunMuga-
19-09-2016 12:05 AM

September 16, 2016

அன்பு மகள்

மழை கண்ட
ஒரு பெளர்ணமி
இரவில் மயக்கம்
கொண்டேன்
என் மழலை கேட்கும்
சிறு கேள்வியில்
அப்பா!
நிலா வருமா?

அன்று ஏனோ,
நிலவோடு
கனவும் வந்தது.,

கனவில்
என் கைகளை பிடித்து
வானை உற்று நோக்கி
மழை பெய்ஞ்சா
நிலா நனையாதாப்பா!!
என்றால் அவள்,

மழையோடு
என் கனவும்
என் கண்களும்
நனைந்தது...

என் கண்னை
நனைக்கும்
கவிதை நீ!

தெய்வத்தின்
சாயலும் நீ!

தெய்வத்தின்
குரலும் நீ!

தெய்வம் தந்த
தேவதையும் நீ!!

-SunMuga-
16-09-2016 22:30 PM

நிஜத்தின் சாவு

ஓடும் பாதையெங்கும்
என் பாவத்தின்
சுவடுகளை அழித்து,

என் பாதத்தின்
கவிதை
சுவடுகளை பதித்து..

என் கனவின்
மறுமுனை நோக்கி
ஓட விரும்புகிறேன்..

நிஜமாகவே
நிஜத்தின் சாவிலிருந்து
தப்பித்து...

-SunMuga-
16-09-2016 22:40 PM

August 29, 2016

30-08-2016

காலமும்,
சில கவிதைகளும்
என்னை
மாற்றியிருக்கிறது,
என்னைப் பற்றிய
அனுமானங்களையும்
ஒரு சிலருக்கு
மாற்றி தந்திருக்கிறது.

கடவுளை விட
கடவுளாக நான் நினைக்கும்
என் அன்புகளையும்
என் மீதான அன்புகளையும்
பற்றிக் கொண்டு
காலம் கடத்திவிட்டேன்.

இப்பொழுது
காத்திருப்பது என்னவோ
கவலை தீர்க்கும்
ஒரு கவிதைக்காக,
ஒரு ஓவியத்திற்காக,
யாரோ ஒருவரின்
புத்தகத்திற்காக,

அமரும் இடத்திலெல்லாம்
அமைதியின் வடிவமாய்
ஆழ்ந்த இசையின்
துடிப்பில் எழும்
என் கவிதை வரிகளில்
வரமாய் உன் காதல்

ஆனந்த காதலின்
ஒளியூட்டும்
ஒரு ஓவியம்
அது
உன்னையும் என்னையும்
மட்டுமே பிரதிபலிக்கும்
காலத்தின் விதியால்
அது
வண்ணங்கள் அற்று
காட்சியளித்தாலும்
அதிலே கரைந்தும்,
மறைந்தும் கொள்கிறது
என் கண்ணீர்.

கண்கள் பார்த்து
கவிதை பேசி
காதல் வளர்த்த
காலமெல்லாம்
காகித மலரில்
கவிதையாக வாடுகிறது
என் அன்பே!

உன் இருப்பின் நிலை
என்னவோ,
ஒரு சிறு மழை
அதில் விழும்
ஒற்றை பனியில்
உறையும்
என் கவிதை வரிகளில்
தேங்கி நிற்கும்
உன் முத்தம்.

உன் முத்தத்தால்
என் கனவோ,
காதலின் வாசல் தேடி
கண்களின் வழியே
உன்னையும் நாடி
கன்னங்கள் வழியே
உன் வெட்கத்தை தேடி
என்னுள் ஓடுகிறது
உன்னையும் தேடுகிறது..

தேடும் பொழுதுகள் எல்லாம்
இரவான போது
இருள் மட்டுமே
காதலின் வெளிச்சம்...

காதலின் வெளிச்சங்கள்
ஏனோ
வேதனையளித்த போதும்
வாழ்வில் மிஞ்சிய
கனவுகளில் வழியும்
காதலால் இன்னும்
காதல் வாழ்க்கிறது
இன்னமும் அது வாழும்..

துரதிருஷ்டம்

முப்பது வயது
என்று நினைக்கும் போது
முப்பது வயதில்
இறந்து போன
சில்வியா ப்ளாத்
நினைவிற்கு வருகிறாள்

எல்லா கலைகளையும் போலவே
சாவதும் ஒரு கலை,
அதை
நான் முழுமையாக நிறைவேற்றுவேன்.
என்று கவிதை
எழுதியவள் அவள்.

உயிர்களை கடந்து
உணர்வுகளை உள்ளடக்கியது தான்
ஒரு கவிதை,
அதை வார்த்தைகள் நிரம்பிய
இரவின் கனவிற்குள்
கொண்டு வந்து
கடவுளாக காணும்
செயல் என்னவோ
ஒரு கவிஞனுக்கு
இயல்பான ஒன்று.

ஆனால் அதையும் மீறி
சாத்தனோடு கைகோர்த்து,
கால்களை விரித்து
இமை மூடி
என் கனவுகளை
உட்சொருகும்
ஒரு பெண்ணைப் பற்றிய
துர்கனவு வரும்போது
வலிகள் உணர்ந்து
வழியும்
தூமைச் சொட்டின்
வாசம் அறியாமல்,
என் நாசிகளில் கூட
சில வேசிகளின்
வேர்வை நாற்றமெடுத்து
வேதனை தரும் இரவுகளில்
இன்னும்
என் உயிர் வாழ்ந்து
கொண்டு இருப்பது தான்
எனது துரதிருஷ்டம்....

-SunMuga-
28-08-2016 22-40 PM

August 27, 2016

தோரோ

ஒரு பாறையைப் போல அசைவற்று நிசப்தமாக இருப்பதற்கு உங்களால் முடியுமானால் உங்கள் மீதிருந்தே விருட்சங்கள் முளைக்கக்கூடும். பறவைகள் உங்கள் தோள்களில் அமர்ந்து சப்தமிடும். மழையும் வெயிலும் பனியும் காற்றும் உடலை வடிவேற்றும். இயற்கையை அறிந்து கொள்வதற்குத் தொலை நோக்கியோ மைக்ராஸ்கோப்போ அவசியமானதில்லை. மிகுந்த பொறுமையும் கூர்ந்த புலன்களுமே தேவைப்படுகின்றன.

- ஹென்றி டேவிட் தோரோ-

வழித்துணை

வழித்துணையற்ற
என் வாழ்க்கையில்
வலிகள் பல கடந்த போதும்
வலிகளை வழிகள் ஆக்கி
வாழ்க்கையின் வழியே
வழிந்தோடும்
எனது கனவுகளின் பயணம்
உன் கண்ணோடு
பயணிக்கிறது...

பைத்திய ருசி

பைத்திய ருசி
1
காலையிலிருந்தே கதிரின் மீதான ஏவல் தொடங்க ஆரம்பித்துவிடுகிறது கல்யாணியின் அப்பா வீட்டில் காபி குடிக்கமாலே எனக்கு. எனக்கும் சில நேரங்களில் கோபம் வரத்தான் செய்கிறது ஏன் இந்த கதிர் திரும்ப திரும்ப என்னோடு பேசிக் கொண்டே இருக்கிறான் என்று. கதிருக்கும் என் வாழ்க்கைக்கும் சம்பந்தமான சம்பவங்கள் என்று அப்படி ஒன்றும் நிகழ்ந்திடாத போதும் கற்றுக் கொண்ட மாயைகளை போல என்னால் கதிரிடம் இருந்து விலகவே முடியவில்லை..
தூக்கம் வந்தும் தூங்க முடியாத கதிர், நான் தூங்காத பல இரவுகளில் ஏவல் நிறைந்த வார்த்தைகளோடு பேசிக்கொண்டே இருக்கிறான். காதுகளை மூடிய அவன் கொடிய சத்தம் என் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது..

2

பின்னிரவுக்கு பிறகான நேரங்களில் வில்சனின் பிரிவு சந்திரனாய் என்னுள் கரைந்து எரிகிறது சக கைதியின் மூச்சுக் காற்றில். முறைப்படி திருமணம் செய்த பானுமதியின் சிவந்த கண்களில் இருந்தும், வார்த்தைகளின் வாதங்களிலிருந்தும் தப்பித்துக் கொள்ள சோடியம் ஃவேபர் வெளிச்சம் நிறைந்த தெருவும் எனக்குத் தேவைப்படுகிறது. ஆசுவாசமாய் அழுது கொள்ள வில்சனின் சிகரெட் வாசனை நிறைந்த மெளன முத்தங்களும் நள்ளிரவுக்கு பிறகு தேவைப்படுகிறது. தேவைக்கு அதிகமான ஞாபங்களை மட்டுமே கொடுத்த வில்சனின் தேவை இப்பொழுது அதிகமாய் எனக்கு தேவைப்படுகிறது சந்திரனைவிட..


3

பதட்டமடைந்த தயாளனின் படபடப்பு. என் இரவின் அருகாமையில் வீசும் தயாளனின் மன வெளிச்சங்கள் என எல்லாவுமே என்னை உறங்கவிடாமல் இருக்கச் செய்கிறது. மெளனத்தின் எல்லைகளை கடந்து மனைவி மீதான அழுத்தங்கள், வெள்ளை நோயின் வெறுப்புகள் என வெறுமையில் ஆழ்த்துகிறது.
என் எல்லா பயணங்களின் தொடக்கம் சந்தோசமாக இருந்த போதும் பயணங்களின் ஊடே பயணிக்கும் தயாளனின் முத்தத்தின் சூடு என் நெற்றியிலும் படர்கிறது.
பயணத்தின் நடுவே பஸ்லில் இருந்து கீழே இறங்கிய தயாளனை ஏனோ மனதிலிருந்து இறக்கிவிட முடியாத போது காமத்தின் நிறம் வெள்ளையாகவே தெரிகிறது..

4
ஜென்மத்தில் தீராத பசி,
பைத்தியங்களோடு பைத்தியமாய் 
என்னைக் கழுவிக் கொண்ட 
ஒரு நதி,
இமை திறந்து உறங்கப் 
பழகி கொண்ட எல்லா நாட்களும்,
இப்படி ஒரு கடிதம் 
எழுத நேரிடும் ஓர் இரவு,
நரம்பிற்கு பதிலாய் 
கனவுகளை அறுத்து
கண்ணீர் விடும் கண்கள்,
இறகுகளின் சடலங்கள்,
பிரிவிலிருந்து என்னை
எண்ணிலிருந்து மீட்டெடுத்து
மீண்டும் பிணமான நொடிகள்,
காமத்தின் 
வெளிப்படையான காடு
நித்தம் கண்கள்
சந்திக்கும் சில துரோகங்கள்
அனைத்தும்
உதவுகிறது பைத்தியம் ஆவதற்கு.

எண்ணிப் போட்டால் 
சாகமுடியாது தான்
நான் பைத்திய ருசியை
மீண்டும் வாசிப்பதற்காகவே
வாழ விரும்புகிறேன்.

-SunMuga-
27-08-2016

August 7, 2016

வலி பழகு

"வலி பழகு"
என்ற கணேச குமரானின்
வரிகளை படித்த பிறகு
எனது
வாழ்க்கை பல
வலிகளை உள்ளடக்கியதாய்
மாறியிருக்கிறது,
இருந்தும்
வலிகளை மீறி
இன்னும் அதிகமாக
வாழ வழிச் சொல்லுகிறது
அதே வரி
"வலி பழகு"

July 23, 2016

சாரல்

உன் நினைவின்
சாரல்
கண்ணில் மழையாக
பொழிந்தால்
என்னில் வழிந்தோடும்
வார்த்தைகள்
அனைத்தும்
உன் முத்தத்தின்
மெளன மொழியை
கொண்டு இருக்கும்...

July 22, 2016

31-12-2015

கடவுளுக்கு நன்றி,
காதலின் அன்புக்கும் நன்றி...

உன் அன்பு நிறைந்த ஒவ்வொரு நினைவையும் தொகுத்து வாசிக்கும் போது
மூச்சு முட்டுகிறது உன் முத்தம் போல.

2016 கவிதைகள் 91 to 100

நட்சத்திரம் அற்ற
வானத்தை பார்க்கும் போது
வெறுமை ஏற்படுகிறது
உன் முத்தத்தின்
எண்ணிக்கையை இழந்த
ஒரு நினைவால்....  91

உன் பிரிவின் வழி
காலம் ஒவ்வொன்றாக
சொல்லித் தருகிறது
ஏனோ
கண்ணீரையும் தருகிறது... 92

கண்ணீர் என்பது
கண்களில் சுரப்பது இல்லை
காணாமல் தவிக்கும்
இதயத்தில்....   93

வாழ்வின் மிகச்சிறந்த
நொடி எதுவென்றால்
உன் கண்களை மட்டுமே
பார்த்த
முதல் நொடி என்பேன்... 94

உன் குரலை
கேட்ட பின்பு தான்
நான் இந்த உலகத்தில்
உயிர் வாழ்கிறேன்
என்று நம்புகிறது
என் கனவுகளும், கவலைகளும்..  95

காதலை விட
காதலியை பிரிந்து
வாழ்வது தான்
கடினமாய் இருக்கிறது
கவிதையில் கூட...   96

விழி தேடும்
வழியெங்கும்
உன் விழியின் பாதம்
தேடுகிறது
என் கவிதைகள்!     97

வாழ்வில் அத்தனை
கவனமாய் இருந்த போதும்
காதல் சில தவறுகள்
செய்து விடுகிறது
உன்னை என்னிடமிருந்து
பிரித்துவிட்டதை போல...  98

நீ பேசும்
வார்த்தைகளை கவிதையாக்கி
அதை காதலும்-ஆக்கி
உன் விழிகளுக்கு
மட்டுமே விருந்து அளிப்பேன்.. 99

உன் விழியால்
என் புலமையை வளர்த்தேன்
அதில் கவிதையாய்
உன் இளமை
காதலை வளர்த்தேன்...  100

2016 கவிதைகள் 81 to 90

உன் பாதம் பார்த்து
என் கண்களின் வழியே
வணங்குகிறேன்
என் பாவம்
அதன் வழியே கரைவதற்கு!!  81

விதி நிராகரித்த போதும்
விழிகள்
உன்னை மட்டுமே
நினைப்பது
என் வாழ்வின் விதி....    82

தனிமையில் அமர்ந்த போது
வானத்தைப் பார்த்தேன்
உன்னோடு
நம் இரு உயிர்களும்
மிளிர்ந்து கொண்டு
கண் சிமிட்டுகிறது... 83

பாரம் மிகுந்த இரவில்
நான் பயணிக்க
விரும்பும் பாதை
மரணம் மட்டுமே!!    84

சில நேர தனிமைகள்
துக்கம் நிறைந்தவை தான்
உன் நினைவால்
நான் அதை
விரட்டிய போதும்...   85

காதல் ஏற்கப்பட்ட போது
காலம் மறுக்கப்படுகிறது
காலம் ஏற்றுக்கொள்ளப்பட்ட போது
காதலின் உணர்வுகள்
மறுக்கப்படுகிறது
காலமும் காதலும்
ஏற்றுக்கொள்ளப்பட்ட போது
வாழ்க்கை மாறியிருக்கிறது.. 86

உணர்வுகளை கடந்து
உயிர்கள் ஏனோ
உன்னை அடைய முற்படுகிறது
முடியாது என்ற தெரிந்த போது
உயிரோ உணர்வின் வழி
கண்ணீரை வெளிப்படுத்துகிறது....  87

ஒன்றுமே இல்லாத போதும்
வாழ்க்கை
இப்படியே நகர்கிறது
வெறுமையை சுமந்து கொண்டு.. 88

வேதனை களைவதற்கு
வேண்டும்
ஒரு தேவதை!!     89

அன்பு நம்பப்படுமானால்
காதல்
எத்தனை காலம் ஆனாலும்
இருந்துகொண்டு தான் இருக்கும்...  90

2016 கவிதைகள் 71 to 80

தேநீர் நிரம்பிய
கோப்பையை கொண்டு
தேவதை பற்றிய சிந்தனை
வளர்த்துக் கொள்கிறேன்
எல்லா இரவுகளிலும்...  71

பிரிவைப் பற்றி
யோசிக்கும் போது
கவிதை வந்தடைகிறது
கண்களில்
வெறும் கண்ணீராக...   72

உன்னை நினைக்கும் போது
என்னை அடைகிறாய்
சில மெளனத்தின் வழியே
கண்களின் ஒளியாய்...  73

எல்லா இரவுகளிலும்
எல்லையற்ற
உன் நினைவுகள் தான்
என்னை உறங்க வைக்கிறது
ஏதோவொரு
நல்ல கவிதை எழுதிய பின்பு..  74

பேசும் வார்த்தைகளை விட
பேசாத
உன் வார்த்தைகளின் ஒலியே
என்னை பேச வைக்கிறது
அதன் எதிரொலியாக... 75

என் உடலெங்கும்
உன் இதழின் வாசம்
என் இதழெங்கும்
தீராத
உன் இதயத்தின் நேசம்
அதனாலயே
இரவின் மீது
இனம் புரியாத
ஒரு பாசம்....    76

உன் ரகசிய
புன்னகை போதும்
வெளிப்படையாய்
நான்
உன்னை முத்தமிட...  77

தீராத
உன் வலியைப் பற்றிய
நிமிடங்களை
நினைத்துப் பார்க்கிறேன்
மூன்று நாட்களை கடந்தும்
எனக்கும் வலிக்கிறது..  78

உறக்கம் வராத
இரவுகளில் ஏனோ
உன்னை அதிகம்
அணைத்தப்படி
உறங்க முற்படுகிறேன்
விழி திறந்த
கனவுகளின் வழி!!      79

பாதைகள் இருந்தும்
நம் பாதங்கள் இணைந்தும்
உன்னோடு
நடக்க முடியவில்லையே
உன்னோடு கைகோர்த்து.. 80

எனது கனவு

சில நேர
கவிதைகளில்
காதல் இருப்பதில்லை
வெறும் கவலைகள்
மட்டுமே அர்த்தமாக
அமைத்திருக்கும்..

கவலை படர்ந்த
எனது வாழ்க்கையில்
கவிதையாக
அர்த்தமாக்க பட்டவள் நீ
என்னுள்
வார்த்தைகளாய் மாறி
என்னையும் மீறி
கவிதைகளில்
தவழ்ந்து,
நடந்து,
பின் ஓடி
எங்கோ போகும்
நதியின் நிழலும் நீ!

உன்னுள் மூழ்கி
உன்னுள் கலந்து
என் காதல் கவிதைகளை
கரைத்து
அதை உன்னோடு
சேர்க்கும்
இவ்வார்த்தைகளில்
வாழ்கிறது
எனது கனவு..

எனது கனவு
காலை உன் முகம்
நண்பகல் உன் காதல்
மாலை உன் மடி
முன் இரவில் உன் அன்பு
பின் இரவில் உன் அணைப்பு
பின் எப்போதும்
உன் நினைப்பு
அது மட்டுமே
அது மட்டுமே
என் வாழ்க்கை...

என் வாழ்க்கை முடியும்
தருணத்தில் கூட
உன் முத்தத்தின்
தொடக்கம்
என்னில் தொடர வேண்டும்
உந்தன்
மூச்சுக் காற்றின்
வழியே
இந்த உலகில்
என் காதலின் ஜனனம்
மீண்டும் வேண்டும்..

-SunMuga-
16-07-2016 11.40 PM

July 7, 2016

இரவின் பசி

இந்த
இரவின் பசியில்
உன் உடலே
எனது உணவு
உன்னை
என்னை மறந்து
உண்ணும் போது
உண்மையில்
எனது உணர்வுகள்
உயிர்த்தெழும்பிய போதும்
உனக்கொர்
பாவம் செய்ததாய்
எண்ணிக் கொள்ளும்
எனது குறி.....

-SunMuga-
05-04-2016 20:40

தாழ்ப்பாள்

இரு கதவுகள்
கொண்ட
நம் வீட்டில்
ஒரு கதவு "காதல்"
இன்னொரு கதவு "காமம்"

காமம் நானாக
இருக்கும் போது
காதலின் கதவாய்
நீயே என்னை உரசுகிறாய்
கனவின் வழியாக,
கனவின்
கண்களின் வழியே
நானும் போடுகிறேன்
"முத்தம்" என்ற "தாழ்ப்பாள்"

-SunMuga-
07-07-2016 12:05 AM

பிம்பம்

கடந்து போன
அன்பு என்ற போதும்
உன் நினைவின்
பிம்பங்களை
பல கூறுகளாய்
உடைத்தெடுத்து
அதிலொரு கூறு எடுத்து
கண்களால் அதை
இன்னும் கூர்மையாக்கி
எனது கனவின்
குறியை அறுத்தேன்
அதில் வடியும்
ரத்தம் ஜெபம்... 

-SunMuga-
06-07-2016 11:11 PM

காத்திருப்பு

விடியும் வரையிலும்
காத்திருந்தேன்
கவலைகளை கரைத்துக்
கொள்ள
கனவில்
கனவாய்
நீ வருவாய் என்று
கனவாய்
நீ இந்த இரவில்
கரைந்தது அறியாமல்...

-SunMuga-
06-07-2016 11:15 PM

இரவின் கடவுள்

என் உடலின்
பசியை தீர்க்க
கடவுளால்
அனுப்பப்பட்டவளின் முன்னே
உள்ளாடைகள் அற்று
நிர்வாணமாய்
கிடந்த போதும்
என்
உள் உள்ளத்தின்
ஆடைகளை
நிர்வாணமாக்க
ஒரு போதும்
விடுவதில்லை
இரவின் கடவுள்....

-SunMuga-
06-07-2016 11:00 PM

கவிதை

மழையின் சப்தம்
செவியேறும் போது
உன்னைப் பற்றிய
சொற்களும்
கவிதையாய்
என்னுள் ஏறுகிறது
அவசரமாய்
வீடு திரும்பும்
எறும்பின் வரிசைகளை
போல!!

-SunMuga-
06-07-2016 10:50 PM

வண்ணத்துப்பூச்சி

மழையின் இசையில்
விரியும்
சிறகுகளென
அன்பின்
வண்ணம் தீட்டி
அதில்
காதலின் கனவுகளை கூட்டி
என்னையே
சுற்றி வருகிறது
இந்த
வண்ணத்துப்பூச்சி...

-SunMuga-
06-07-2016 10:45 PM

உள்ளம்

உறவுகள் உறங்கும்
இரவில்
உள்ளமும்
உன் விழிகளும்
என்னை
விழிக்கச் செய்கிறது
விடை தெரியாத
வாழ்க்கையை நினைத்து..

விடுமுறை இல்லாத
உன் நினைவும்
விழிகளில் ஏனோ
வழியச் செய்கிறது
ஏதோவொரு
கண்ணீர் துளியை. .

அழுகை

மெளனம் நிறைந்த
இரவில்
நான் மெளனமாக
அழுது கொண்டு இருக்கிறேன்
எனது அழுகையின் ஒலி
என்னைத் தவிர
வேறு யாருக்கும்
கேட்காதபடி,

ஏன் என்றால்
எனது உலகம்
உன்னால் உருவாக்கப்பட்ட
ஒன்று
உன்னைத் தவிர
நானும்
எனது கனவுகளும்
எனது கவிதைகளுமே
வாழும் உலகம்..

உறங்க மறுத்த விழிகள்
உலகை வெறுக்க
வேண்டிய ஒரு அவசியமும்
இல்லாத போது
விழி இனி
உன்னோடு
விழித்த நிலையிலே
கனவு காணட்டும்,

இறப்பு

இறப்பு என்பது
நிரந்தரம் என்ற போது
இருப்பின் நிலையை
கடந்து
இயல்பாக இருக்க
முற்படுகிறது
எனது இளமைக் காலம்,

இறப்பு என்பது
நிரந்தரம் என்ற போது
இருப்பின் நிலையை
கடந்து
நான் இவ்வுலகில்
இல்லாமல் இருக்க
முற்படுகிறது
எனது முதுமைக் காலம்,

இறப்பு என்பது
இயல்பானது என்ற போதும்
அது
இல்லாமல் இருக்க
எப்பொழுதும்
முற்படுகிறது
எனது குழந்தையின் எதிர்காலம்.....
-SunMuga-
15-04-2016 21:36 PM