April 15, 2015

பேச்சியம்மாள்

"ஒரு ஜென்மத்தை பரிசாக 

   கொடுத்த உங்களுக்கு 
   என்னால் என்ன?
   கொடுத்துவிட முடியும்
   என் அன்பை தவிர"
             -SunMuga


நீ சிந்தும் கண்ணீர் துளிகளுக்கு இன்று நான் அர்த்தம் அறிவேன். நான் பிறக்கும் போது கண்ணீரோடு பிறந்து இருப்பேன். ஆனால் எத்தனையோ வேதனை, வலிகளை சுமந்து என்னைப் ஈன்ற போது சிறு புன்னகை உன் முகத்தில் நிச்சயம் பூத்து இருக்கும். கார்த்தியின் குழந்தை (சஞ்சனா) பிறந்த போது நானும் நீயும் தே மருத்துவமனைக்குள் நுழையும் போது கேட்டேன். நான் பிறந்தது இங்க தானமா என்று. நீயும் ஒரு பழைய ஓடு மேய்த்த கட்டிடத்தை கை காட்டி இங்கு தான் பிரசவம் பார்த்தார்கள் என்று சொன்னாய். நானும் பார்த்தேன் அதன் ஜன்னல் வழி அந்த அறையை யாருமே இல்லாத இடம், அழுக்கு படர்ந்த இடம், என் அழு குரல் ஒலித்த இடம். உன் வேதனையை தாங்கிய இடம். நான் முதன் முதலில் உன் மடியில் உறங்கிய இடம். இன்னும் எத்தனையோ நிகழ்வுகள் புதைந்து இருக்கிறது இந்த இடத்தில் சிறுது நேரம் அமர்ந்து வர ஒவ்வொரு முறையும் ஆசை.

முப்பொழுதும் நான் ஏதோ யோசனையோடு இருப்பதாக பலர் கூறுகிறார்கள். அதன் பெயர் யோசனை அல்ல, நினைவுகள் என்று அவர்களுக்கு என்னால் விளக்கம் தரமுடியவில்லை. கிட்டத்தட்ட நான் வீட்டை விட்டு பிரிந்து ஏழு வருடங்கள் கடந்து விட்டது. இந்த ஏழு வருடமாக தான் வீட்டை பற்றிய சிந்தனைகள் அதிகமாக உள்ளது. நான் எவ்வளவு பாசம் உன் மீது வைத்து இருக்கிறேன் என்று எனக்கு தெரியாது. ஆனால் நீ எவ்வளவு பாசம் வைத்திருக்கிறாய் என்று எனக்கு தெரியும்.

அம்மா என்ற வார்த்தையில் அனைத்தும் அடங்கும். அன்பு, பாசம், பரிவு , அன்பில் அரவணைக்கும் அம்மா. கோபமான பாசத்தை வெளிப்படுத்தும் அம்மா. அதனால் என்னவோ உன் பெயரைக் கூட பேச்சியம்மாள் என்று வைத்திருக்கிறார்கள் போல. சமைப்பது மட்டும் வேலை என்று இல்லாமல் குடும்ப பிரச்சனைகளையும் அழகாக சமாளிக்கிறாய் என் அன்பு அம்மா. உன்னைப்பற்றி நான் இதற்கு முன் தனிமையில் எழுதிய வார்த்தைகளை உனக்கே சமர்பிக்கிறேன்.

தனிமையான வாழ்க்கை எனக்கு எத்தனையோ சுகங்களையும், சுதந்திரத்தையும் கொடுத்து இருக்கிறது. வெண்பனி சூழ, நதிநீரில் நீந்திப் போகும் ஒரு நூலிழை போல நானும் சென்னை மக்களோடு பயணிக்கிறேன். அவர்கள் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு வகையான ஒரு இலக்குகள் இருக்கலாம். ஆனால் என்றோ ஒரு நாள்  இறந்துவிடும் என் உயிருக்கு ஒரு இலக்கும் இல்லாமல் பயணிக்கிறது.இன்று உடல்நலம் சரியில்லை. சாதாரண காய்ச்சல் தான். உடம்பில்  ஆண்டு முழுதும் வேலை செய்த களைப்பு போன்ற ஒரு உணர்வு. எழ முடியவில்லை. இருந்தும் நேற்று வாங்கி வைத்த மாத்திரையை உன்ன சொல்லி தெய்வத்தின் உத்தரவு. எழுந்தேன். நழுவும் கைலியை கூட பிடிக்க திடம் இல்லை. ஹோட்டலுக்கு நடந்து செல்லும் போது வேகமாக SMS செய்யும்  பெண்களை போல பல் ஆடுகிறது. 60வதை கடந்தவன் போல் கை, கால்கள் நடுங்குகிறது. அப்படியே போய் ஹோட்டலில் அமர்ந்து 4 இட்லி ஆர்டர் செய்தேன்.  சுவை இல்லாத ஒரு இட்லி. காரமான சாம்பர். நம்மை காலி செய்யும் ஒரு சட்னி. சாப்பிட ஆரம்பித்தேன்.
ஒரு நிமிடத்தில் என் மனம் என் வீட்டை நோக்கி பயணித்தது பைசா செலவில்லாமல். ஆம் இந்நேரம் வீட்டில் இருந்து இருந்தால் நிச்சயமாக கடை இட்லி தான். ஆனால் என் அம்மாவின் கையால் ஒரு டம்ளர் வெந்நீர் காய வைத்து குடித்து இருப்பேன். அதை தவிர அவளுக்கு வேறு ஏதும் செய்ய முடியாது.

ஒரு கனம் அந்த வெந்நீரை நினைக்கும்போது கண்ணில் கட்டுப்பாடு இழந்து கண்ணீர் பெருகுகின்றன. வாங்கிய 4 இட்லியில் 3  தான் உன்ன முடிந்தது மீதம் சுவை சரியில்லை என்பதினால் இல்லை, வழிந்தோடிய கண்ணீரால் தொண்டைக்குள் இறங்கவில்லை.

அதே போல நீ சமைத்துக் கொடுக்கும் லெமன் சாதத்தைப் பற்றியும் ஒரு குறிப்பு எழுதி வைத்திருக்கிறேன்.

இப்போது கூட லெமன் சாதம் சாப்பிட்டு விட்டு தான் வருகிறேன். அப்படி என்ன? அதில் ஒரு சுவை என்றால் ஒன்றும் இல்லை. நான் பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் போது, என் தாய் எனக்காக தயாரித்து கொடுக்கும் ஒரு சாதாரண உணவு அவ்வளவு தான். அது அவர்களுக்கு மிக எளிதாக சமைக்க கூடிய உணவு என்பதால் பெரும்பாலான நாட்கள் அது தான் உணவு. உண்ணும் போது கூட அதன் சுவை எனக்கு தெரியவில்லை என்றாலும் இன்று உணர்கிறேன் அதன் உண்ணதமான சுவையை. உயிரணு உணர்கிறது என் தாயே நீ கட்டிக் கொடுத்த லெமன் சாதத்தின் உயிரை. இன்று ஒவ்வொரு கடையிலும் நான் மட்டும் தனியாக உண்ணும்போது லெமன் சாதம் தான் சாப்பிடுகிறேன். இதில் ஒரு உண்மையை சொல்ல வேண்டும். எத்தனை பெரிய விலை கொடுத்தாலும் என் தாய் கொடுத்த அந்த லெமன் சாதத்தின் சுவை இது வரை எந்தவொரு சிற்றுண்டியிலும் நான் கண்டதே இல்லை. ஏன் என்றால் உங்களுக்கு அறிந்த தெரிந்த விஷயம் தான் அது பாசத்தால் செய்யப்பட்டது. ஒவ்வொரு முறை நான் உண்ணும் போது அது என் தாயின் பாசத்தை வெளிப்படுத்துகிறது.

No comments:

Post a Comment